தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை (STF) நிதி திரட்டி வருகிறது. நன்கொடையாளர்களின் ஒவ்வொரு டாலருக்கும் இன்னொரு டாலரைச் சேர்த்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 'பயிர்' தன்னார்வ நிறுவனத்திற்கு வழங்குகிறது. 'பயிர்' என்ற கிராம முன்னேற்றத் தொண்டு நிறுவனம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் அதனைக் களைவதற்கான திட்டத்தையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தது. சில பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்முறையை அறியவந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது, இதை மாவட்டம் முழுமைக்கும் கொண்டுவர ஆவன செய்தார். 'பயிர்' செந்தில் கோபாலனின் உறுதுணையோடு, தமிழக திட்டக்குழுவின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இது நடைபெற்று வருகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் 500 கலோரி தரும் சத்து உருண்டைகள் கொடுக்கப்படுகின்றன. கேழ்வரகு, எள், நிலக்கடலை, பருப்பு, வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் புரதம், மாவுப்பொருள், கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து குழந்தைகளுக்கு சரிவிகிதத்தில் கிடைக்கின்றன. முதல் கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 26,000 குழந்தைகளுக்கு இது வழங்கப் படுகிறது.
இந்தத் திட்டத்தை 'பயிர் ' நிறுவனம் செயல்படுத்தி, பலன்களை ஆவணப்படுத்துகிறது. இதற்காக 75 களப்பணியாளர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இதன் ஊதியம் மற்றும் நடைமுறை செலவுகளுக்காக சுமார் 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் பல்வேறு தமிழ்ப் பணிகளையும் சமூகப்பணிகளையும் ஆற்றிவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினர் 'பயிர்' நிறுவனத்தின் இந்தத் திட்டத்தின் நடைமுறைச் செலவுகளுக்காக, அமெரிக்கத் தமிழர்களிடம் நிதி திரட்டுகிறார்கள்.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் திரு. வேலு ராமன் இதன் தொடக்கமாக ஆயிரம் டாலரை வழங்கியுள்ளார். இதற்கென அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு ஈடான தொகையை அறக்கட்டளையின் நிதியிலிருந்து தர உள்ளார்கள். அதாவது, ஒருவர் 100 டாலர் வழங்கினால், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை 100 டாலர் சேர்த்து, 200 டாலர்களைப் 'பயிர்' அமைப்புக்கு வழங்கும்.
6 லட்சம் ரூபாய் இலக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாக வேலு ராமன் குறிப்பிட்டார். திரு. செந்தில் கோபாலன் அமெரிக்காவில் வேலையை விட்டுவிட்டு கிராம முன்னேற்றத்திற்குத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து, 'பயிர்' அமைப்பை நிறுவியுள்ளார், தேனூர் கிராமத்தில் தங்கி, எளிமையாக வாழ்ந்து வருவதுடன், கிராம முன்னேற்றத் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார். Times Now தொலைக்காட்சியின் 'Amazing Indians' நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
பயிர் அமைப்பின் திட்ட நடைமுறைச் செலவுகளுக்கான பத்தாயிரம் டாலர் (ரூ.6 லட்சம்) நிதியை நன்கொடையாக அளிக்க அமெரிக்கத் தமிழர்கள் முன்வரவேண்டும் என வேலு ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலதிக விவரங்களுக்கு: pltamil.com/Payir.html
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |