தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
பாகம் 3

கே: இப்போது தீடீரென மென் பொருள் (software) துறையிலும் மின்வலை மற்றும் மின்வலைப் பாதுகாப்பு (networking and network security) துறைகளிலும் பல நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன அல்லது இணைந்துள்ளனவே, ஏன்?

ப: (இதுவரை கண்டது) Geoffrey Moore-இன் 'பெரும்பிளவைத் தாண்டுதல்' (Crossing the Chasm) புத்தகத்தில் கூறியுள்ள கோட்பாடுகளின் படி ஒரு நிறுவனம் வளர்ச்சி பெற்றுப் பெரும் நிறுவனமாக வேண்டுமானால், அதற்குத் தேவையான பல முக்கியமான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்; முதல் பங்கு வெளியீட்டுக்கு முன் பல இடர்களைச் சந்தித்து அபாயங்களைச் சமாளித்து பங்குதாரர்களுக்குப் பலன் தருவது மிகக் கடினமாகி வருகிறது; அதனால், பல சிறு நிறுவனங்களும், ஏன் சில பெரிய நிறுவனங்களும் கூட, இன்னும் பெரிய நிறுவனங்களுடன் இணைகின்றன.

இப்போது மேற்கண்டு ஆராய்வோம்:

கே: சிறு நிறுவனங்கள் தங்கள் இடர் களைச் சமாளித்து வளர்ந்துவிட்ட பின்பும் பொதுப் பங்குச்சந்தையைச் சென்றடைவதற்கு என்ன தடங்கல்? அது பிரமாதமாகச் செல்வம் பெருக்கும் விஷயமல்லவா? அதைப் போய் விற்றுவிடுவானேன்?

ப: பொதுப்பங்கு வெளியிட்டுவிட்டால் மட்டும் இடர்கள் குறைந்துவிடுவதில்லை. சில வகைகளில் இன்னும் அதிகமாகின்றன என்றே கூடக் கூறலாம். இதை நாம் இரண்டு வகையான நிறுவனங்களின் கோணத்தில் பார்க்கலாம். முதலாவதாக ஒரு தனியார் நிறுவனம் முதன்முறை பங்கு வெளியிடும் போது உண்டாகும் இடர்கள். பிறகு, அப்புறமும் வளர்ந்து வெகு காலமாகப் பங்குச் சந்தையில் காணப்படும் வளர்ந்த நிறுவனங்களுக்கான இடர்கள்.

பெரும்பாலான தனியார் சிறு நிறுவனங்கள் முதன்முறையாகப் பொதுப்பங்கு வெளியிடும் போது (IPO), முதலீட்டாளர் உட்பட்ட நிறுவனத்தின் உள்ளுறை பங்குதாரர்கள் (insiders including investors), ஆறுமாதங் களுக்குத் தங்கள் பங்குகளை விற்க முடியாது என்ற நிபந்தனைக்கு ஆளாகிறார்கள். இதை விற்பனைத் தடுப்புக் காலம் (lock-up period) என்று குறிப்பிடுவார்கள். அந்தத் தடுப்புக் காலத்துக்குள் எதாவது இடர்களால் பங்கு விலை பெருமளவு சரிந்து விட்டால், நிறுவன உள்ளுறைவோர் பெரும் பாதிப்படை வார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே சில முறை உள்ளீட்டார் பங்கு வெளியீட்டுக்கு பதிலாக விற்பனைக்கு முன் வருகிறார்கள்.

மேலும், முதல் முறையாகப் பங்கு வெளி யிடுவதாலேயே உள்ளுரை முதலீட்டாளரின் பங்கு மதிப்பு சதவிகிதக் கணக்கில் குறைகிறது. அதனால் நிறுவன விற்பனை, சில சமயம் பொதுப்பங்கு வெளியீட்டை விட லாபகரமாக இருக்கக் கூடும்.

இது சிறிது கடினமான விஷயம். விளக்கத் துக்கு ஒரு உதாரணம்: பங்கு வெளியிடுமுன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 50 மில்லியன் டாலர் என்று வைத்துக் கொள்வோம். நிறுவனத்தில் 25 மில்லியன் பங்குகள் இருக்கலாம். அப்போது ஒவ்வொரு பங்கும் 2 (இரண்டு) டாலர் மதிப்புள்ளதாய் இருக்கும். முதல் பங்கு வெளியீட்டின்போது நிறுவனத்தின் மொத்த மதிப்பு 250 மில்லியன் டாலர் என்று வைப்போம். ஆனால் நிறுவனம் 50 மில்லியன் டாலர் திரட்ட முற்படலாம். அதனால், அது நிறுவனத்தில் 20% விற்க வேண்டும். அதனால் உள்ளீட் டாரின் மொத்தப் பங்கு மதிப்பு 200 மில்லியன் டாலர், அதாவது ஒரு பங்கு 8 (எட்டு) டாலர் மதிப்பு. மேலும், நிறுவனம் புதுப் பணியாளர்களுக்கு Option-கள் அளிக்க இன்னும் சில மில்லியன் பங்கு களைச் சேர்க்க வேண்டியிருக்கலாம்; அப்போது பங்கு மதிப்பு இன்னும் குறையும்.

அவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பங்கு வெளியீடு என்பது, முதல் குறிப்பிட்ட தடுப்புக் காலம் தாண்டிய பின் பொதுச் சந்தையில் பங்கு விலை எவ்வளவு இருக்கும், 8 டாலரை விட அதிகமாக இருக்குமா என்னும் விபரீத விளையாட்டாகி விடுகிறது. அதனால் ஏதாவது பெரிய நிறுவனம், 200 மில்லியன் டாலரை விடச் சற்றே அதிகமாக, ஏன் சற்றுக் குறைவாகவே கொடுக்க முன்வந்தாலும் கூட அபாயங் களைக் குறைக்க உள்ளீட்டார் விற்கத் தயாராகி விடுகிறார்கள். தடுப்புக் காலத்துக் குப் பின் பங்கு விலை மிக அதிகமாகி விடும் என்ற மிக அதிகமான மனோதிடம் இருக்குமானால் மட்டுமே பங்கு வெளி யீட்டுக்கு முன்வருகிறார்கள். அதற்கு Google ஓர் உதாரணம்!

அது மட்டுமில்லாமல் சமீப காலத்தில் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங் களுக்கான சட்டதிட்டங்கள் மிகக் கடுமை யாகியுள்ளன. Sarbox அல்லது Sox என்று செல்லமாக (!) அழைக்கப்படும் ஸார்பேன்ஸ் ஆக்ஸ்லி சட்டம் பொதுப் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களின் காலாண்டு (quarterly) மற்றும் வருடாந்தர வருமான அறிக்கைகள் உண்மையானவை என்று நிறுவனத்தின் தலைமை மேலாண்மை அதிகாரி (CEO) மற்றும் தலைமை நிதித் துறை அதிகாரி (CFO) இருவரும் தம் தனிப்பட்ட முறையில் உறுதி தரவேண்டும் என்றும், அப்படி உறுதி அளிக்கப்பட்ட அறிக்கைகள் பின்பு பொய்யானவை என்று காணப்பட்டால் அவர்கள் பெரிய தண்டனைக் கட்டணத்துக்கு ஆளாவது மட்டுமல்லாமல், சிறைக்கே செல்ல வேண்டியிருக்கலாம் என்றும் விதித்துள்ளது.

இந்த sarbox சட்டத்தின் ஒரு விளைவு, சிறு நிறுவனத்தார் "நமக்கேன் இந்தத் தலைவலி! இதை யார் தலையிலாவது இதைக் கட்டிவிட்டு நாம் அக்கடா என்று இருக்கலாமே!" என்ற முடிவுக்கு வந்து விடுவது. இன்னொரு விளைவு, நிறுவனத் தின் லாபத்தைக் குறைப்பது. ஏனெனில் Sarbox சட்டத்துக்கு உட்பட வேண்டுமானால் வெறுமனே அத்தாட்சியாக கையெழுத்து போட்டுவிட்டால் மட்டும் போதாது. அவை உண்மையென, மூன்றாவது தரப்பு ஆடிட்டர் கள் அத்தாட்சியளிக்கும் படியாகக் குறிப்பீடு கள் வைத்திருக்கப்பட வேண்டும். அதற்கான மென்பொருட்கள் இப்போது வந்துள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தவும், ஆடிட்டர்களுக்கும் இன்னும் செலவாகிறது. அதனால் செலவு அதிகமாகி லாபம் குறைகிறது. அதனால் பங்கு வெளி யீட்டுக்குத் தேவையான அளவு நிதிநிலை பெறுவது இன்னும் கடினமாகியுள்ளது.

இவை மட்டுமல்லாமல், பொதுப் பங்குச் சந்தையில் புகுந்தவுடனேயே ஒவ்வொரு காலாண்டின் ஆரம்பத்திலும் அந்தக் காலாண்டில் நிறுவனத்துக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று முதலிலேயே அறிக்கை வெளியிட்டு, அதே அளவுக்கு வருமானம் பெற்று, காலாண்டு முடிந்தவுடன் எவ்வளவு வந்தது என்று அறிக்கை வெளியிட வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமான விவகாரம்! பல சிறு நிறுவனங் களுக்கு இவ்வளவவு விற்கப் போகிறோம் என்று கணித்து, அதைக் கோட்டைவிடாமல் விற்று முடிப்பது பிரம்மப்பிரயத்தனம். அப்படி ஒருமுறை தப்பித் தவறிக் கோட்டை விட்டு விட்டாலோ, பங்கு விலை அதோகதிதான். டமால் என்று ஒரே நாளில் விழுந்துவிடும்! அதைச் சமாளித்து இன்னொருமுறை தவறி விட்டால் அவ்வளவுதான் - மீண்டும் அதிகரிப்பதென்பது அரசியலில் நேர்மையை விட அபூர்வம்! இந்தப் பெரிய அபாயம் இருப்பதால் பங்குவிலை வளரக் கூடிய அல்லது குறைந்த பட்சம் திடமாக உள்ள வேறொரு பெரிய நிறுவனத்துக்கு விற்று விடுகிறார்கள்.

ஆக மொத்தம் ஒரு சிறு நிறுவனம் இடர்களை சமாளித்து வெற்றியுடன் வளர்ந்தாலும், தற்காலச் சூழ்நிலையில் பங்கு வெளியீட்டை விட தன்னை விற்பதே சுலபம், அதற்கே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. அது எந்த அளவுக்கு வந்தி ருக்கிறதென்றால், VC வர்க்கத்தில் தங்கள் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிடுவதாகக் அறிவித்தால் "பொதுப்பங்கு வெளியிடு கிறீர்களா? அய்யோ பாவம். ஏன் வாங்க யாரும் முன்வரவில்லையா?" என்று போலி யாகப் பரிதாபம் காட்டிச் சீண்டுகிறார்கள்.

கே: PeopleSoft, Veritas, Siebel போன்ற வளர்ந்துவிட்ட பொதுப் பங்கு நிறுவனங்களும் தங்களை விற்க ஏன் சம்மதிக்கவேண்டும்? தனியாகவே தம் பாட்டுக்கு இருந்தாலென்ன?

ப: அது அவ்வளவு எளிதல்ல. ஓரளவு பெரும் நிறுவனமாகிவிட்டாலும் பொதுப் பங்கு நிறுவனங்கள் அக்கடாவெனெ இருந்துவிட முடியாது. பங்குதாரர்கள் தங்கள் முதலீடு வருடாவருடம் வளர்ந்து பலன் தரவேண்டும் என்று வலியுறுத்து கிறார்கள். அதனால், பங்குகளின் விலை உயர்ந்து கொண்டே போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு, அந் நிறுவனங்கள் தளராமல் ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு வருடமும் வால் தெரு (Wall Street - பங்குச் சந்தை இருக்குமிடம்) பங்கு அனலிஸ்டுகள் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம், மற்றும் லாபத்தில் வளர்ச்சி காட்டியாக வேண்டும்.

அப்படித் தொடர்வளர்ச்சி காட்ட முடியா விட்டாலோ, அல்லது நிறுவனம் நல்ல பாதையில் போகவில்லை, தேய்பிறையில் உள்ளது என்ற உணர்ச்சி பங்குதாரர் மற்று அனலிஸ்டுகள் மத்தியில் வளர்ந்தாலோ, பங்குவிலை வளராமல் தேங்கி விடுகிறது, அல்லது சரியவே ஆரம்பிக்கிறது. அதனால் பங்குதாரர்கள் மனத்தாங்கலடைகிறார்கள். அப்போது, ஒன்று, நிறுவனத்தின் மேலாளர்கள் மாற்றப்படுகிறார்கள், அல்லது அந்த பொதுப் பங்கு நிறுவனம் இன்னொரு பெரிய நிறுவனத்தால் வாங்கப்படுகிறது. சமீபத்தில் Siebel நிறுவனம் Oracle நிறுவனத்தால் வாங்கப்பட்டதை இதற்கு உதாரணமாக எடுத்துக் கூறலாம். (PeopleSoft விஷயம் வேறு மாதிரி. அதைப்பற்றிப் பிறகு காணலாம்.)

சில சமயம் நிறுவனம் வளர்ந்துகொண்டு, லாபகரமாக நடந்துகொண்டிருக்கும் போது கூட இன்னொரு பெரிய நிறுவனத்துடன் இணைகிறார்கள். இணையும் நிறுவனங் களில் ஒன்று மற்றொன்றைவிட மிகப் பெரியதாக இருந்தால் அது விற்பனை (acquisition) என்று கூறலாம். இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு வருமானம் மற்றும் பணியாளர்கள் (employees) இருந்தால் இணைப்பு (merger) என்று கூறுவார்கள். சமீபகாலத்தில் நடந்த இந்த வகையான இணைப்பு Symantec-Veritas இணைப்பாகும்.

கே: ஏன் Veritas போன்ற லாபகர நிறுவனங்கள் அம்மாதிரியான இணைப்புக்கு சம்மதிக்க வேண்டும்?

ப: இரு காரணங்கள்: ஒன்று, முன்னோக்கி, வருங்கால இடர்களை உணர்ந்து, வருமுன் காப்போனாகச் செயல்படுவது.

இரண்டாவது, பங்குதாரர்களுக்கு அதிகப் பலன் தருவதற்கு.

தற்சமயம் லாபகரமாக நடந்தாலும், ஓரிரு வருடங்களுக்கப்பால் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கும் போது, வணிக வாய்ப்பு குறைந்து தேக்க நிலை ஏற்படும் என்று தெரிந்தால், லாபம் குறைந்து பங்கு விலை பாதாளத்துக்கு சரிந்துவிடும் முன்னர், நிறுவனத்துக்கு நல்ல பங்கு விலை மதிப்பு இருக்கும்போதே விற்றுவிடுவதே நல்லது என்று தோன்றலாம். வாங்கும் நிறுவனங்கள் தாங்கள் முக்கியத் துணைவர்களாகக் கருதும் பெரும் நிறுவனங்களிலிருந்தே பொருட்களை வாங்குகின்றன என்று முன்பு விவரித்தோம். அதனால் சிலபொருள் விற்கும் தனி நிறுவனமாக இருந்தால் விற்பது கடினமாகலாம் என்பதால் இன்னொரு நிறுவனத்தோடு சேர்ந்து பலபொருள் விற்கும் இன்னும் பெரும் நிறுவனமாக உருவாகச் சம்மதிக்கிறார்கள்.

பங்குதாரர்களின் பலனைப் பெருக்குவது இன்னொரு காரணம். அதாவது, தனி நிறுவனங்களாக இருந்தால் பங்கு விலை அதிகரிக்கும் அளவை விட, இணைவதால் பங்கு விலை கூடும் வேகம் அதிகரிக்க வாய்ப்பிருக்கலாம். இம்மாதிரி இணைப்புகள் ஏற்பட வேண்டுமானால், அந்த நிறுவனங் களின் விற்பொருட்களும், வணிக பலமும் உண்மையாகவே ஒன்றுக்கொன்று உதவு மாறு இருக்க வேண்டும். பாகங்களின் மதிப்பை விட, அவற்றின் இணைந்த மொத்தம் இன்னும் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும். இரு நிறுவனங்களும் ஒரே அளவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று பெரியதாகவும் இன்னொன்று சிறியதாக ஆனால் வேகமாக வளரும் நிறுவனமாக இருக்கலாம். உதாரணமாக, மின்வலைத் துறையில் Router மட்டுமே விற்கக் கூடிய ஒரு நிறுவனம், Switch மட்டுமே விற்கக்கூடிய ஒரு நிறுவனத்தோடு இணைந் தால், இரண்டும் சேர்ந்து இரண்டும் சாதனங்களும் சேர்ந்து இன்னும் நன்கு பணியாற்றும் படி செய்து, பெரும் மின்வலை நிறுவனமாக வாய்ப்பிருக்கக் கூடும். அல்லது ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களும் துணைவர்களும் அதிகமாக இருந்து, அவர்களுக்கு மற்ற நிறுவனத்தின் சாதனங் கள் மிகத் தேவையாக இருக்கலாம். சமீப காலத்தில் இம்மாதிரி நடைபெற்றதற்கு உதாரணம்: மின்வலைப் பாதுகாப்புத் துறையில் வெற்றி வாகை சூடி வேகமாக வளர்ந்துகொண்டிருந்த NetScreen நிறுவனம் மின்வலை சாதனத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் Juniper நிறுவனத்துடன் இணைந்ததைக் குறிப்பிடலாம்.

(ஆனால், இந்த மாதிரி பங்கு தாரர் பலன் அதிகரிக்க ஏற்படும் இணைப்புகள் நடப்பது மிக அபூர்வம் எனலாம்.

பொதுவாக, பெரிய நிறுவனமாக இருப் பதைவிட, அதன் பாகங்களின் மதிப்பே அதிகம் என்று உடைப்பது சகஜமாகி விட்டது. உதாரணத்துக்கு HP/Agilent, Lucent/Avaya, Cabletron/Enterasys/Riverstone போன்ற நிறுவனப் பிரிவினைகளைக் குறிப்பிடலாம்.)

வளராது தேங்கிவிட்ட பொதுப்பங்கு நிறுவனங்களுக்கு இணைப்போ, உடைப்போ மட்டும் வழிகளல்ல. சில சமயம், தேய்பிறை நிலைக்கு வந்துவிட்ட பொதுப்பங்கு நிறுவனங்களின் மேலாளர்களோ அல்லது வேறு முதலீட்டாரோ நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் வாங்கி மீண்டும் தனியார் நிறுவனமாக்கி விடுகிறார்கள். இதற்கு Leveraged Buy Out (LBO) என்று பெயர். தனியார் நிறுவனமாகச் சில காலம் வளர்ச்சிபெற்று மீண்டும் விற்பனைக்கு அல்லது பங்கு வெளியீட்டுக்கு கொண்டு வருவார்கள். Seagate நிறுவனம் இதற்கு உதாரணம்.

பெரும் நிறுவனங்களின் கண்ணோட்டம் என்ன? ஏன் அவைகள் மற்ற நிறுவனங் களை வாங்க வேண்டும்? அத்தகைய தொழில் நுட்பங்களைத் தாங்களே உருவாக்கலாமே?

பிரமாதமான கேள்வி! இதைப்பற்றி அடுத்த இதழில் காண்போம்.

கதிரவன் எழில்மன்னன்

(தொடரும்)

© TamilOnline.com