கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். சின்ன ரோஜாப்பூ ஒன்று கால் முளைத்து வந்ததுபோல் ஒரு அழகான பெண் குழந்தை.
'ஐயோ, தனியாக இருக்கிறதே' என்று பயந்து அவள் குழந்தையைத் தூக்குவதற்கும், பெரிய அலை ஒன்று அவர்களை முழுவதும் நனைப்பதற்கும் சரியாக இருந்தது. சிவகாமியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு தள்ளாடித்தான் நிமிர்ந்தாள்.
குழந்தையை விட்டுவிட்டுப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வியப்பும் கோபமுமாக சிவகாமி திரும்பி பீச்சில் பார்த்தாள். ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண் வீல்சேரில் அமர்ந்தபடி தள்ளமுடியாமல் தானே தள்ளிக்கொண்டு வந்தாள். கொஞ்ச தூரத்தில் நல்ல விலையுயர்ந்த ஆடையணிந்து கண்ணியமான தோற்றத்தோடு ஓர் இளைஞனும் ஓடிவந்தான்.
"இப்படியா குழந்தையைத் தனியே விடுவது?" என்றாள் சிவகாமி இன்னும் படபடப்பு அடங்காமல்.
"சாரி மேடம். கையைப் பிடித்துக் கொண்டுதானே நிற்கிறாள் என்று நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் எங்களை ஏமாற்றிவிட்டு உங்களிடம் வந்து விட்டாள்" என்று கூறிக்கொண்டே குழந்தையை வாங்கிக் கொண்டான்.
"இவள் என் மனைவி வைஜயந்தி. பேசிக் கொண்டிருங்கள். காரிலிருந்து டவல் எடுத்து வருகிறேன்" என்று குழந்தையோடு சென்றான்.
வைஜயந்தி சிவகாமியின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
"அம்மா... உங்களைப் பார்த்தால் எனக்கு என் அம்மா ஞாபகம் வருகிறது. தெய்வம்போல் வந்து எங்கள் குழந்தையைக் காப்பாற்றி என் உயிரைக் காத்தீர்கள்" என்று கண் கலங்கினாள்.
அவள் கணவன் சுரேஷ் சினி ஃபீல்டில் பெரிய டைரக்டர் என்றும், அவள் முதல் பிரசவத்தில் ஒரு கால் விளங்காமல் இப்படி ஆகிவிட்டதென்றும், அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் இரண்டு பக்கமும் உதவி செய்ய யாருமில்லை என்றும் கூறினாள்.
சிவகாமியும் தான் முதியோர் இல்லத்தில் பணம் கட்டி நல்ல வசதியாக இருப்பதாகவும் தெரிவித்தாள். அதற்குள் சுரேஷ் ஒரு டவல் கொண்டு வந்து சிவகாமியிடம் கொடுத்துத் தலையெல்லாம் துவட்டிக் கொள்ளச் சொன்னான்.
சிவகாமியோடு கூட வந்தவர்கள் எல்லாரும் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர். எல்லாரும் சுரேஷிடமும் வைஜயந்தியிடமும் விடைபெற்றுச் சென்று விட்டனர். அதோடு சிவகாமியும் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டாள்.
திடீரென்று ஒருநாள் விலையுயர்ந்த பென்ஸ் காரொன்று அந்த ஹோமுக்கு வந்தது. அதில் டைரக்டர் சுரேஷ் வந்திறங்கினான். அந்த ஹோமின் செக்ரடரியைப் பார்த்து அனுமதி வாங்கிக்கொண்டு சிவகாமியின் அபார்ட்மென்டுக்கு செக்ரடரியோடு வந்தான்.
சிவகாமியும் அவர்களை வரவேற்று உபசரித்தாள்.
அவர்கள் குழந்தை பூஜா அன்று கடல் தண்ணீரில் விழுந்தாளே அந்தத் தங்கக்குட்டி எப்போது பார்த்தாலும் 'பீச் பாட்டி, பீச் பாட்டி' என்று எல்லாக் கதைகளையும் பேசியவள் இன்று காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் பீச் பாட்டி வந்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறாளாம். அதனால் அவர்களோடு வந்து ஒரு நான்கு நாட்கள் தங்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வந்தான்.
"நான்கு நாட்களா?" என்று சிவகாமி செக்ரடரியைப் பார்த்தாள். "எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை" என்றாள் செக்ரடரி அம்மாள்.
"அம்மா வந்து பாருங்கள்... பிடிக்கவில்லை என்றால் உடனே நானே கொண்டுவந்து இங்கே விட்டு விடுகிறேன்" என்றான் சுரேஷ் கெஞ்சலாக. அவர்களோடு கிளம்பினாள் சிவகாமி. பங்களாவை நெருங்கியது கார். அதைப் பார்த்து பிரமித்தாள் சிவகாமி. உள்ளேயிருந்த தோட்டத்தைப் பார்த்து வியந்தாள். காம்பௌண்ட் சுவரைத் தாண்டி பத்து நிமிடங்கள் டிரைவ் செய்த பிறகுதான் பங்களாவின் வாசலே வந்தது. கார் போய் வாசலில் நின்றவுடன் பூஜா ஓடி வந்தது.
சிவகாமி காரைவிட்டு இறங்கியவுடனே வந்து அவள் கால்களை இறுகக் கட்டிக்கொண்டாள் குழந்தை.
"தனக்கும் இந்தக் குழந்தைக்கும் என்ன பந்தம்? இது நல்லதற்கா? அல்லது இந்தப் பாசம் கெட்டதற்கா?" என்று மனதிற்குள் வியந்தவண்ணம் "பெருமாளே" என்று கூறிக்கொண்டே குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். வாரம் ஒருநாள், இரண்டு நாள் என்று சிவகாமி, சுரேஷ் வீட்டுக்குப் போய் வந்தாள். நாள் செல்லச் செல்ல வாரக் கணக்கில் அங்கேயே தங்கவும் ஆரம்பித்தாள்.
பூஜாவை அவளால் பிரிய முடியவில்லை. பூஜாவும் சிவகாமி இல்லையென்றால் ஒவ்வொன்றிற்கும் அடம் செய்ய ஆரம்பித்தாள். சிவகாமியைப் பற்றி சுரேஷ் கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்துத் தெரிந்து கொண்டான்.
அவள் கணவர் அரசாங்கத்தில் பெரிய அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும், ஒரே பிள்ளை அவனும் லண்டனில் டாக்டராக இருக்கிறான் என்றும், மருத்துவம் புரிந்த அளவுக்கு தாயின் மனோதத்துவம் புரியவில்லை என்றும் தெரிவித்திருந்தாள். சுரேஷும், வைஜயந்தியும் அதற்குமேல் அவளை ஒன்றும் விசாரிக்கவில்லை. சிவகாமியை அந்த வீட்டின் தலைவியைப் போலவே நடத்தினார்கள். ஒவ்வொன்றுக்கும் அவள் யோசனையைக் கேட்டே குடும்பத்தை நடத்தினார்கள். நிறைய நாள் அங்கேயே தங்க ஆரம்பித்தாள்.
ஒருநாள் இரவு இரண்டு மணிக்குச் சிவகாமி விழித்துக் கொண்டு தண்ணீர் குடிக்க வெளியே வந்தாள். அங்கே சுரேஷ் தூக்கம் வராமல் ஹாலில் நடந்து கொண்டிருந்தான்.
"என்ன சார் இன்னும் தூங்கலையா?" என்றாள் சிவகாமி.
"ஆமாம் அம்மா. இன்னும் தூக்கம் வரவில்லை. நல்ல கதை ஒன்றைத் தேடுகின்றேன். அது கிடைத்தால் படம் எடுப்பதற்கு வசதியாக இருக்கும்" என்றான்.
"நான் ஒன்று சொன்னால் சிரிக்க மாட்டீர்களே. என்னிடம் ஒரு நோட்புக் இருக்கிறது. அதில் பொழுது போகாமல் நிறையக் கிறுக்கி வைத்திருக்கிறேன்" என்றாள் லேசாகச் சிரித்துக்கொண்டு.
"இப்போதே கொடுங்கள் அம்மா. தூக்கம் வரும்வரையில் படிக்கிறேன்" என்றான்.
அதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அடுத்த நாள் வைஜயந்தியிடமும், பூஜாவிடமும் சொல்லிக்கொண்டு ஹோமுக்குச் சென்றாள். சுரேஷை வீட்டில் காணவில்லை. ஹோமில் சிவகாமிக்கென்று அளிக்கப்பட்ட சில வேலைகளை அவள் விருப்பமாகச் செய்ததில் இரண்டு நாள் வேகமாக ஓடியது.
திடீரென்று அன்று காலையிலேயே சுரேஷிடமிருந்து போன். "என்ன சார்... பூஜா கலாட்டா செய்கிறாளா?"
"நான் அம்மா... அம்மா.. என்று கூப்பிடுகிறேன். நீங்கள் சார்.. சார் என்று கூப்பிடுகிறீர்களே என்ன நியாயம்? பூஜாவால் நான் ஃபோன் பண்ணவில்லை. நான் என்னுடைய காரை அனுப்புகிறேன். நீங்கள் உடனே என் ஆஃபீசுக்கு வாருங்கள்" என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டான்.
சிவகாமி சுரேஷ் அலுவலகத்துக்கு வந்தாள். "சார் ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கிறார். உங்களை அழைத்துவரச் சொன்னார்" என்று பியூன் அழைத்துச் சென்றார். உள்ளே சுரேஷுடன் நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.
"அம்மா, உங்கள் கதையை நாங்கள் படமாக எடுக்க முடிவு செய்து விட்டோம். உங்களைக் கேட்காமலே பேனர் எல்லாம் தயாரித்துவிட்டோம். எதிரே பாருங்கள்" என்றான் சுரேஷ்.
"அணைத்திடும் தென்றல்" என்று பெயரிடப்பட்டு மூலக்கதை திருமதி சிவகாமி சத்தியமூர்த்தி என்று எழுதியிருந்தது. ஆச்சரியத்தோடு சிவகாமி அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சுரேஷ், ஒரு பத்திரத்தைக் கொடுத்துக் கையெழுத்துப் போடும்படிக் கேட்டுக்கொண்டான். கூடவே ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் ஒன்றும் வைத்துவிட்டுச் சிரித்தான். "டாகுமெண்டை ஹோமுக்கு எடுத்துச் சென்று நிதானமாகப் படித்துவிட்டு கையெழுத்துப் போடுங்கள். இந்தச் செக்கை உங்கள் அக்கௌண்டில் டெபாசிட் செய்து விடுங்கள்" என்றான் சுரேஷ்.
டாகுமெண்டில் அங்கேயே கையெழுத்துப் போட்டாள் சிவகாமி. "உங்களை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் இந்தச் செக் மிக அதிகமான தொகை" என்றாள். அங்கே இருந்தவர்கள் சிரித்தார்கள். ‘இந்த சினி பீல்டில் எல்லாமே மெகாதான்'
சுரேஷ் சிவகாமியைக் காரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான். திரைப்படம் ஆறுமாதத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சிவகாமியையும் சுரேஷையும் பலவிதமாகப் பேட்டியெடுத்தனர்.
திரைப்படத்தின் ஹீரோ மூலக்கதைதான் என்று எல்லா பத்திரிகைகளும் சிவகாமியை வானளாவப் புகழ்ந்தன. சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன் போன்ற நாடுகளிலிருந்து இத்திரைப்படத்தின் மூலம் நல்ல வருமானம். எல்லா நாடுகளிலிருந்தும் சுரேஷையும், குழுவினரையும் வரவேற்று தமிழ்ச் சங்கங்கள் அழைப்பு அனுப்பியிருந்தன.
சிவகாமி ஒன்றும் இதனால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. குட்டுப்பட்டது மோதிரக் கையால் அல்லவா என்று நினைத்துக் கொண்டாள்.
சுரேஷ் ஒருநாள் சிவகாமியை போனில், "அம்மா, நாம் குடும்பத்தோடு லண்டன் போகவேண்டும். உங்களுக்கும் விசா வாங்க வேண்டும். நான் வந்து உங்கள் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்கிறேன். நாம் லண்டன் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது வைஜயந்திக்கு ஒரு ஆபரேஷன் செய்யவேண்டும். அவள் குணமாவது நிச்சயம் என்று அங்குள்ள ஒரு ஆர்த்தோ டாக்டர் கூறியுள்ளார். அதனால் நீங்களும் கட்டாயம் வர வேண்டும்" என்று கூறி ஃபோனை வைத்துவிட்டான்.
லண்டன் தமிழ்ச் சங்கத்தில் ஏக வரவேற்பு. போனவுடன் வைஜயந்தியை அங்கேயுள்ள பெரிய டாக்டரின் சிபாரிசோடு பிரபலமானதொரு மருத்துவமனையில் சேர்த்தான்.
சிவகாமி நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாள். எப்போதும் மருத்துவமனையிலும் சில நேரங்களில் ஹோட்டல் அறையில் பூஜாவுடனும் நேரம் செலவழித்தாள். வைஜயந்தியை ஆபரேஷன் செய்த டாக்டரும் ஒரு தமிழர்தான். ஒரு மாதத்தில் கடவுள் அருளாலும் எல்லாருடைய கவனிப்பாலும் வைஜயந்தி நன்கு தேறி விட்டாள்.
அந்த டாக்டர் பிரதீப் எடுத்துக் கொண்ட அக்கறை சுரேஷிற்கு மிக ஆச்சரியமாக இருந்தது. வைஜயந்திக்கும் ஒன்றும் புரியவில்லை. சிவகாமியின் முகம் மட்டும் கடுமையாக இருந்தது. இந்த முகம் சுரேஷ் இதுவரை பார்க்காதது.
மூன்று மாதங்கள் முழுவதுமாக முடிந்தது. வீல் சேரை விட்டு பிஸியோ தெரபிஸ்டின் உதவியுடன் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள் வைஜயந்தி. இனிமேல் ஒன்றும் பயமில்லை. நீங்கள் சென்னையில் நல்ல பிஸியோவையும் உங்களுடன் இருக்கும் மேடத்தையும் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்" என்றான் டாக்டர் பிரதீப்.
"என்ன உதவி? நிச்சயம் எங்களால் முடிந்தால் செய்கின்றோம்" என்றான் சுரேஷ்.
"வைஜயந்தியோடு கூடவே இருந்த அந்த அம்மாவோடு நான் உங்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் பேசவேண்டும்."
சிவகாமியை சுரேஷும், டாக்டர் பிரதீப்பும் சந்தித்தனர். சந்தித்த வினாடியே பிரதீப் சிவகாமியின் கால்களில் விழுந்தான்.
"அம்மா என்னை மன்னித்து விடுங்கள்" என்றான்.
சுரேஷ் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
"எழுந்திரு பிரதீப். நான் யார் உங்களை மன்னிக்க? பெற்றவர்களை அவமானப் படுத்துவதற்குத்தானே உங்களையெல்லாம் உயிரைக் கொடுத்து வளர்த்து படிக்க வைக்கிறோம். நல்லா படிச்சு இந்த மாதிரி வேலைக்கு வந்தபிறகு பணம் அடிக்கும் மிஷின் ஆகி விடுகிறீர்கள். எங்களைப் பார்த்தாலே உங்களுக்கு அலட்சியம். மற்றவர்கள் அவமானப் படுத்தினாலும் உங்களுக்கு ஓகேதான், இல்லையா?" என்றாள் சிவகாமி வெறுப்பாக.
"அம்மா, நான் செய்தது மிகப்பெரிய தவறு. எங்களை மன்னித்து என்னுடன் வந்துவிடுங்கள்" என்றான் பிரதீப்
"சாரி பிரதீப்.. நான் இப்போது சௌகர்யமாக, சந்தோஷமாக, மரியாதையாக நடத்தப்படுகிறேன். பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும் என்பதுபோல சுரேஷ் குடும்பத்தில் எனக்கும் சந்தோஷம், கௌரவம். மேலும் நான் யார் ஆதரவிலும் இல்லை. அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எனக்கு ஏதாவது நேர்ந்தால் சுரேஷ் கட்டாயம் உனக்குத் தெரிவிப்பார். முடிந்தால், மனம் இருந்தால் அப்போது வந்து பார்த்தால் போதும்" என்றாள் கண்களைத் துடைத்துக்கொண்டு.
"நாங்கள் நாளை கிளம்புகிறோம் பிரதீப். மனம் தொட்டுப் பேசியதற்கு நன்றி. பெற்ற மகன் இல்லாவிட்டாலும் இடையிலே வந்த மகன் மிகவும் பிரியமாகத்தான் இருக்கிறார்" என்று கூறிவிட்டு, பூஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு, சுரேஷுடன் நடந்தாள் சிவகாமி.
பானுமதி பார்த்தசாரதி, சான் ரமோன், கலிஃபோர்னியா |