எங்கிருந்தோ வந்தான்
2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன்.

வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை அடித்துப் போட்டுவிட்டன. அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் மட்டம் போட்டு ஓய்வெடுத்ததில் ஓரளவு தேவலைபோல் இருக்கவே, 17 மைல் சுற்றுவட்டாரத்துக்குள் இருக்கும் இரண்டு தம்பிகளின் வீடுகளுக்குப் போய், அவர்கள் குடும்பத்தாரையும், என் அம்மா, அப்பாவையும் பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது. மாலை 6 மணிக்குக் கிளம்பிப் போனேன்.

அங்கு போனதும், பேசுவதற்கு நிறைய இந்தியாக் கதை இருந்ததால், இருமலோடு கலந்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இரவு 10:30 மணி ஆகிவிட்டது. தம்பி வீட்டில், என்னை இரவு தங்கிவிட்டு காலையில் போகச் சொன்னார்கள். ஆனால் மறுநாள் சீக்கிரமே அலுவலக வேலையைத் தொடங்க வேண்டி இருந்ததாலும், லேப்டாப் இல்லாததாலும் தங்க முடியவில்லை.

புறப்படுகையில் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தால், சார்ஜ் முழுவதுமாகப் போயிருந்தது. தம்பியின் மனைவி "கார் சார்ஜர் தரவா?" என்று கேட்ட போதும், "என் வேனிலேயே ஒன்று இருக்கிறது. தேவையில்லை" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

ஒரே குளிர், 30 டிகிரி F. வண்டிக்குள் உட்கார்ந்து தொலைபேசியைச் சார்ஜரில் கோர்த்துவிட்டு, வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

அமெரிக்காவில்தான் ஹைவே தவிர வேறெங்கும் அதிகத் தெருவிளக்கைப் பார்க்க முடியாதே! ஒரே இருட்டு. வண்டியின் விளக்கு வெளிச்சத்தில், திரும்பும் லேன்களைப் பார்த்து வண்டியை ஓட்டிக்கொண்டு, மனக்குதிரையை இந்தியாவுக்குத் தட்டி விட்டேன். எப்போதுமே இந்தியா சென்று திரும்பியதும் மனம் கனத்தும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். பற்பல சிந்தனைகள். அவ்வப்போது ஒழுங்காக வீடு போய்ச் சேரவேண்டுமே என்ற கவலை தலைதூக்கவே, எண்ணங்களை ஓரங்கட்டி விட்டுச் சாலையில் கவனத்தைச் செலுத்தினேன்.

கிட்டத்தட்ட 10 மைல் போயிருப்பேன். திடீரென வண்டி லேசாக லேனுக்குள்ளேயே லேன் மாற்றிக்கொள்வது போல் உணர்வு. ஜெட்லேகில் தூங்கி ஸ்டியரிங் கன்ட்ரோல் போய்விட்டதோ என்று நினைப்பதற்குள், டயர் வெடிக்கும் சத்தம். ஆட்டம் அதிகமாகி, வண்டி பக்கத்தில் இருந்த நடைபாதையில் ஏறி, அங்கே போட்டிருந்த, இரும்புத் தண்டவாள வேலியில் இடித்து, அதே வேகத்தில் சாலைக்குள் இறங்கி, இரண்டு லேன்களுக்கு நடுவில் போய் நின்றது.

வண்டியின் அபாய விளக்கை மட்டும் போட்டுவிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தால், வண்டியின் வலது முன்சக்கரத்திலிருந்து புகை வந்து, மெதுவாக அடங்கிக் கொண்டிருந்தது. வேலியில் இடித்ததில் வண்டியின் முழு நீளத்திற்குப் பெயின்ட் போய் பட்டையான வெள்ளைக் கோடுகள் அந்த இருட்டிலும் பளபளத்தன. வேலிக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று லேசாகப் பார்த்தால், கிடுகிடு பள்ளம்! நல்லவேளை, வண்டி அதற்குள் விழவில்லை, சாலையில் வந்து நின்றும் நல்லவேளையாகப் பின்னால் வேறு வண்டி வந்து இடிக்கவில்லையே என்று சந்தோஷப் பட்டேன்.

சரி, முதலில் தம்பியைக் கூப்பிட்டு உதவிக்கு வரச் சொல்லலாம், பிறகு இன்ஷூரன்ஸில் உள்ள சாலை உதவிப் பிரிவைக் கூப்பிடலாம் என்று, சார்ஜரில் இருந்த தொலைபேசியை எடுத்துப் பார்த்தால், சார்ஜ் ஏறவே இல்லை! சார்ஜரை அமுக்கி அமுக்கிப் பார்த்ததுதான் மிச்சம், ஊஹூம், தொலைபேசி அசைந்து கொடுக்கவில்லை.

வழியில் செல்லும் வண்டிகளை நிறுத்தி உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. கீழே இறங்கினேன். குளிரில் 15 நிமிடங்கள் நீட்டி நீட்டிக் கை சில்லிட்டுப் போய்விட்டது. கார் ஒவ்வொன்றும் என் வண்டியில் இடிக்காமல் ஒடித்துக்கொண்டு போனதேயொழிய ஒன்றாவது நிற்கக் காணோம். என்னுடைய குளிர் ஜாக்கெட்டும் மெல்லியது. அதற்குள்ளே காற்றுப் புகுந்து, ஏற்கனவே உடல்நிலையும் சரியாக இல்லாததால் உடல் நடுங்கத் தொடங்கியது.

அந்த இடத்துக்கு அருகில் ஒரு கடையையும் காணோம். நடந்து போய்க் கடைகளைத் தேடுவது நடக்காத காரியம். "இன்று வண்டிக்குள்ளேயே சிவராத்திரி கொண்டாட வேண்டியதுதான்" என்ற முடிவுக்கு வந்து, வண்டியை ஆன் செய்து ஹீட்டரைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன்.

சில வருடங்களாக, "நடப்பதுதான் நடக்கும்" என்ற சித்தாந்தத்தில் கடவுளை அவ்வளவாக வேண்டி கொள்வதில்லை. ஆனால் அந்தச் சமயத்தில் "கடவுளே! இந்த சார்ஜர் வேலை செய்யக்கூடாதா? இல்லை, யாராவது உதவிக்கு வர மாட்டார்களா?" என்று வேண்டாமல் இருக்க முடியவில்லை.

இப்படியாக 30 நிமிடங்கள் ஓடின. திடீரென ஒரு சாம்பல்நிறக் கார் என் வண்டி முன்னால் வந்து நின்றது. நானாகவே சற்றுநேரம் முன்பு கார்களை நிறுத்தி உதவி கேட்க முயன்று கொண்டிருந்தேன். ஆனால் நான் கேட்காமலேயே ஒரு கார் வந்து நின்றதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பயமாக இருந்தது.

அந்தக் காரிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் இறங்கி வந்தார். அவருக்கு 40 வயது இருக்கலாம். நானும் வண்டியிலிருந்து இறங்கி அவரை நோக்கிப் போனேன். நாங்கள் சந்தித்ததும், அவர் தன்னை, "டான்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கு என் பெயரைச் சொன்னால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற தயக்கம். எனவே என் பெயரைச் சொல்லவில்லை. நம் பெயர்களை, இங்குள்ள வேறு இன மக்கள் புரிந்துகொள்ள இரண்டு மூன்று தடவையாவது சொல்லவேண்டும் என்பது வேறு விஷயம்!

வந்தவரிடம் நடந்த விபரத்தைச் சொல்லி, "உங்களிடம் தொலைபேசி இருந்தால் தாருங்கள், என் உறவினர்கள் அல்லது இன்ஷூரன்ஸை உதவிக்கு அழைக்கிறேன்" என்றேன். அவர், "என்னிடம் தொலைபேசி இல்லை. உங்களை ஓரிரண்டு மைல் தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு கடைக்குக் கூட்டிப் போய்ப் பேச ஏற்பாடு செய்ய முடியும். ஆனால் உதவி கிடைக்க இரண்டு மணி நேரம் ஆகலாம். அவ்வளவு நேரம் நடுநிசியில் எப்படிக் காத்திருப்பீர்கள்? நான் ஒரு மெக்கானிக். உங்கள் டயரை நான் மாற்றித் தருகிறேன். இதை நான் பணத்துக்காகச் செய்யவில்லை. இதுபோன்ற இக்கட்டில் இருப்பவர்களுக்கு என்னாலான உதவியை எப்போதுமே செய்வது என் வழக்கம்" என்றார்.

டான் பேசியதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவரிடம், "மிக்க நன்றி. என்னிடம் ஸ்பேர் டயர் இருக்கிறது. உங்கள் உதவியை ஏற்றுக்கொள்கிறேன்" என்றேன். அதற்கு, "உங்களிடம் ஜாக்கி இருக்கிறதா?" என்று கேட்டார். "இல்லை" என்றதும், "என் வீடு பக்கத்தில்தான். பயப்படாமல் காருக்குள் உட்கார்ந்திருங்கள். 20 நிமிடத்தில் ஜாக்கியுடன் வருகிறேன்" என்று கூறிவிட்டுப் போனார்.

காத்திருந்தேன், இருபது நிமிடங்கள் இருபது யுகங்களாக.

டான் சொன்ன நேரத்தில் ஜாக்கியுடன் வந்தார். அவர் என் வண்டியின் முன்பக்கத்தை நோக்கி நடந்து வருகையில், பின்னால் ஜகஜ்ஜோதியுடன் ஒரு போலீஸ் ரோந்து வண்டி வந்து நின்றது. என்னைவிட ஒரு அடிக்கும் கூடுதல் உயரத்தைக் கொண்ட போலீஸ்காரர் இறங்கி வந்தார். டான் நல்லவர் என்பது தெரிந்துவிட்ட போதிலும், போலீஸ்காரரைப் பார்த்ததும்தான் டென்ஷன் குறைந்தது. நாம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது பின்னால் இதுபோல் போலீஸ் கார் வந்தால், "நாம் தப்பு செய்து விட்டோமோ? டிக்கெட் கிடைத்துவிடுமோ?" என்று உதறல் எடுக்கும். ஆனால் மாறுதலாக அன்று சந்தோஷமாக இருந்தது.

பிறகு டானும், போலீஸ்காரருமாகச் சேர்ந்து நிமிஷமாகப் பழுதடைந்த சக்கரத்தைக் கழற்றி, ஸ்பேரை மாற்றிவிட்டார்கள். டான் பணம் ஏதும் கேட்கவில்லை என்றாலும், கையில் இருந்த 60 டாலரைச் சன்மானமாகக் கொடுத்தேன். ஸ்பேர் டயர் ரொம்ப நாளாக உள்ளே இருந்ததால், அதிலும் காற்றுக் குறைவாக இருந்தது. இருப்பினும், "ஆபத்தில்லை" என்று டான் சொன்னதால், மெதுவாக ஏழு மைல் ஓட்டிக்கொண்டு போய் ஒருவழியாக 12:45 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தேன்.

பாரதியாரின், "எங்கிருந்தோ வந்தான், மெக்கானிக்கு நான் என்றான்.." என்று என் காதில் அன்றிரவு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னும் நிற்கவில்லை.

ராஜி ராமச்சந்திரன்,
அட்லாண்டா

© TamilOnline.com