ஐராவதம் ஆர். சுவாமிநாதன்
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போது தினந்தோறும் வாசித்த தினமணி இவரது எழுத்தார்வத்திற்கு விதையானது. பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். த.நா. குமாரசாமி, தேவன், லட்சுமி ஆகியோரின் எழுத்துக்கள் பரிச்சயமாகின. தொடர்ந்து அமெரிக்கன் நூலகத்திற்கும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கும் சென்று தனது வாசிப்பார்வத்தைத் தொடர்ந்தார். தீவிரமான எழுத்துக்களோடு ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம் போன்றோரது எழுத்துக்களும் பரிச்சயமாகின. காவேரி, இலக்கியப்படகு போன்ற தமிழ்ச் சிற்றிதழ்களின் தீவிர வாசிப்பால் எழுத்தார்வம் சுடர் விட்டது. 'நடை' சிற்றிதழில் இவரது "ஒரு வேளை" என்ற சிறுகதை வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது. தொடர்ந்து எழுதினார். கசடதபற, எழுத்து, கணையாழி, தீபம், சுதேசமித்திரன், கல்கி, சாவி, தினமணி கதிர், அமுதசுரபி, சுபமங்களா, ஞானரதம், பிரக்ஞை, புதிய பார்வை, குங்குமம் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது கதை, கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. பணி ஓய்வு பெற்றபின் அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' சிற்றிதழில் தொடர்ந்து நூல் விமர்சனம், கவிதை, சிறுகதை, கட்டுரை எனத் தீவிரமாகத் எழுதிவந்தார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. தற்கால தமிழ்ச் சிறுகதைகள் என்ற Writer's Workshop வெளியிட்ட தொகுப்பு நூலிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது. விமர்சனப் பிதாமகர் க.நா. சுப்ரமணியனின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அசோகமித்திரனின் மனம் கவர்ந்த எழுத்தாளரும்கூட. 'நாலு கிலோ அஸ்கா', 'கெட்டவன் கேட்டது' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள்.



© TamilOnline.com