சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். 1972ல் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைக்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், யாத்ரா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள், இரட்டை வால் குருவி, மறுபடியும், சதி லீலாவதி, ஜூலி கணபதி போன்ற படங்கள் இவரது திறமைக்குச் சான்று. தமிழ் மட்டுமல்லாமல் கன்னட, மலையாள மொழிகளிலும் படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். சிறந்த ஒளியமைப்பிற்கான தேசிய விருது, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, சிறந்த ஒளியமைப்பிற்கான நந்தி விருது, ஃபிலிம்பேர் விருது உட்படப் பல தேசிய விருதுகளையும், மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது சினிமா பயிற்சிப் பட்டறை மூலம் உருவானவர்கள்தான் பாலா, ராம், வெற்றி மாறன், சுகா போன்ற இயக்குநர்கள். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான தலைமுறைகள் இவரது இறுதிப் படமானது. அடுத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று அதற்கான கதை உருவாக்கத்தில் இருந்தவர், திடீரென மாரடைப்பால் காலமானார். இவருக்கு அகிலா, மௌனிகா என்ற மனைவிகளும், ஷங்கி மகேந்திரா என்ற மகனும் உள்ளனர்.
|