முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நவம்பர் 9, 2005 தேதியன்று தில்லியில் காலமானார். அவருக்கு வயது 85.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கே.ஆர். நாராயணன் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றிக் காலமானார்.
நாராயணனுக்கு மனைவி உஷா, மகள்கள் அம்ரிதா, சித்ரா ஆகியோர் உள்ளனர். இவரது மகள் சித்ரா துருக்கி நாட்டின் இந்தியத் தூதராகப் பணியாற்றி வருகிறார்.
நேர்மையாளர், கல்வியாளர், பண்பாளர் என்ற பெருமை கொண்ட நாராயணன் 1927-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி கேரளத்தில் உள்ள பெரும்தனம் கிராமத்தில் ராமன் வைத்யன் என்கிற தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தார். பல்வேறு சமூக, பொருளாதாரத் தடைகளை மீறி கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறியது மட்டுமல்லாமல் நாராயணன் உயர்பதவிகளை அடைந்தார்.
கல்லூரி விரிவுரையாளர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு பணிகளையாற்றிய பெருமை இவருக்கு உண்டு. 1945-ல் இங்கிலாந்து சென்று லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அரசியல் அறிவியல் பட்டம் பயின்ற நாரயணனுக்கு 1949-ல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தூதர் பதவியை ஏற்கும்படி அழைப்புவிடுத்தது குறிப்பிடத்தக்கது. அப்பதவியை நாராயணன் ஏற்றுக்கொண்டார்.
ரங்கூன், டோக்கியோ, ஹனோய், கான்பெரா, லண்டன் போன்ற இடங்களில் உள்ள இந்தியத் தூதரங்களில் பணியாற்றிய அனுபவமும் நாராயணனுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் தாய்லாந்து (1967-69), துருக்கி (1973-75), சீனா (1976-78) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.
முதன்முதலாக 1984-ல் நாராயணனின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கேரளாவில் உள்ள ஒத்தப்பாலம் (ரிசர்வ்) மக்களவைத் தொகுதியில் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாராயணன் 1992-ம் ஆண்டு முதன்முதலாகக் குடியரசுத் துணைத்தலைவராகத் தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து 1997 ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து 2002-ம் ஆண்டுவரை அந்தப் பதவியில் இருந்தார். நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவிக்கு தலித் சமூகத்திலிருந்து வந்த முதல் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார் கே. ஆர். நாராயணன். 356-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தபோது, அந்த யோசனையை மீண்டும் பரிசீலிக்குமாறு இருமுறை திருப்பி அனுப்பியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.ஆர். நாராயணன் மறைவையொட்டி மத்திய அரசு ஏழு நாட்கள் தேசிய துக்கம் அறிவித்தது. முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த தலைவருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. |