மந்திரத் தட்டு
தேவிகாபுரம் என்ற நாட்டை தேவமைந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவன், அதிக வரி சுமத்தாமலும், திருடர், பகைவர் போன்றவர்களால் துன்பம் நேராத வண்ணமும் ஆட்சி நடத்தி வந்தான். மக்கள் அவன்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர்.

மன்னன் எப்போதும்
வைரமாலை அணிந்துதான் சபைக்கு வருவான். குளிக்கும், உறங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் அது அவன் கழுத்தில் இருக்கும். அது முன்னோர் சொத்து என்பதால் அதை தினமும் இரவில் ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிக் கவனமாகப் பாதுகாத்தான்.

ஒருநாள் குளித்துவிட்டு வந்த மன்னன் வைரமாலையை அணிவதற்காகப் பெட்டியைத் திறந்தான். மாலை அங்கே இல்லை. மன்னன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தான். மாலை தொலைந்த கவலை ஒருபுறம், தன் நாட்டிலும் திருட்டா என்ற வருத்தம் ஒருபுறம். அமைச்சர், தளபதி மூலம் அரண்மனையில் இருக்கும் வீரர்களை விசாரிக்கச் செய்தான். ஒரு பயனும் இல்லை.

மன்னனைத் தேற்றிய அமைச்சர், "மன்னா கவலை வேண்டாம். 'வைரமாலையைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு 100 பொற்காசு பரிசு" என்று அறிவிப்போம். நிச்சயம் பலன் கிடைக்கும்" என்றார். மன்னனும் ஒப்புக் கொண்டான். நாடு முழுதும் பறை அறையப்பட்டது. ஆனால் திருடன் யாரென்று கூற யாரும் முன்வரவில்லை.

நாட்கள் சென்றன. ஒரு ஏழைக் குடியானவன் அரண்மனைக்கு வந்தான். அனுமதித்தால், தான் திருடனைக் கண்டுபிடித்துத் தருவதாக அவன் சொன்னான். மன்னன் சம்மதித்தான். அவன், "மன்னா, எனக்கு ஒரு தனி அறை வேண்டும். அந்த அறையில் இதோ நான் கொண்டு வந்திருக்கும் இந்த மந்திரத் தட்டை வைப்பேன். சந்தேகத்திற்குரிய உங்கள் வேலையாட்கள் அனைவரும் தனித்தனியாக அந்த அறைக்குள் சென்று அந்தத் தட்டின்மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து 'நான் திருடன் இல்லை' என்று உரக்கக் கூற வேண்டும். யார் திருடனோ அவனது கை அந்தத் தட்டில் ஒட்டிக் கொண்டுவிடும். எடுக்கவே முடியாது. அதன்மூலம் நாம் உண்மையான திருடனைக் கண்டுபிடித்து விடலாம்" என்றான்.

வேலையாட்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் விதிமுறை விளக்கப்பட்டது. ஒவ்வொருவராக அறைக்குள் சென்றனர். உள்ளிருந்து அவர்கள் 'நான் திருடன் இல்லை' என்று உரக்கக் கூறுவது மன்னனுக்குக் கேட்டது. சிறிது நேரத்தில் வந்திருந்த அனைவரும் தட்டைத் தொட்டுவிட்டு வெளியே வந்து வரிசையில் நின்றனர்.

அவர்களைப் பார்த்த மந்திரி, "மன்னா, யாருடைய கையும் அந்த மந்திரத்தட்டில் ஒட்டிக் கொள்ளவில்லையே, அப்படியானால் இவர்களில் யாருமே வைரமாலையைத் திருடவில்லையா? இல்லை, இந்தக் குடியானவன் ஏதும் உளறுகிறானா?" என்று கேட்டார். மன்னனும் அதே கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அவன், "இல்லை, இல்லை.. திருடன் இங்கேதான் இருக்கிறான். இதோ கண்டுபிடித்து விடலாம். எங்கே தட்டைத் தொட்ட எல்லாரையும் கைகளை நீட்டச் சொல்லுங்கள்" என்றான்.

யாவரும் கையை நீட்டினர். அவர்களது கையில் கறுப்பு மை ஒட்டி இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்தான் குடியானவன். வரிசையில் நின்ற ஒரு வீரனது கையில் மட்டும் கறை ஏதும் இல்லாமல் இருந்தது.

உடனே மந்திரி மற்றும் மன்னனிடம், "இதோ... இவன் தான் திருடன். இவனைப் பிடித்து விசாரியுங்கள்" என்றான்.

முதலில் மறுத்த அந்த வீரன் பின்னர் ஒப்புக்கொண்டான். தான் ஏதோ ஆசைப்பட்டுத் திருடி விட்டதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் வேண்டினான்.

மன்னனும் மன்னித்தார். ஆனால், "இப்படிப்பட்ட ஆட்கள் அரண்மனையில் வேலை செய்ய லாயக்கற்றவர்கள். நீ இன்றுமுதல் குதிரைப் பண்ணைக்குச் சென்று வேலை செய். அதுதான் உனக்குத் தண்டனை" என்று ஆணையிட்டான்.

பின் ஆச்சரியத்துடன் குடியானவனிடம், "எப்படி உங்களால் அவன்தான் திருடன் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டான்.

"மன்னா, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உண்மையில் அது மந்திரத் தட்டு அல்ல. அந்தத் தட்டின் மீது வண்டி மையைத் தடவி வைத்திருந்தேன். திருடாதவர்கள் 'மாட்டிக் கொள்வோம்' என்ற பயமில்லாமல் தொட்டார்கள். அவர்கள் கையில் கறுப்பு மை ஒட்டிக்கொண்டது. ஆனால் திருடியவன் 'எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ' என்று பயந்து அந்தத் தட்டைத் தொடவே இல்லை. அதனால்தான் அவன் கையில் கறுப்பு மை இல்லை. அதன்மூலம் திருடனை எளிதாகக் கண்டு பிடித்து விட்டேன்." என்றான்.

மன்னன் மகிழ்ந்து குடியானவனுக்கு 100 பொற்காசுகள் அளித்ததுடன், அவனைத் துணை அமைச்சராகவும் நியமித்தான்.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com