அவரோ மிகவும் நுட்பமான உணர்வுள்ளவர். என் கணவர், இவரைப் பார்த்தால் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டால், இவருக்கு மூட் அவுட் ஆகிவிடும். மறுபடியும் சில நாள் வரமாட்டார் அப்புறம் ஏதேனும் சாக்கு வைத்துக்கொண்டு சகஜமாகப் பேச ஆரம்பிப்பார். இந்த அன்புத் தொல்லை என்னைத் திணறடிக்கிறது. என் கணவர் "இவரை யார் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார்கள்? எனக்கு முகஸ்துதி செய்யத் தெரியாது. என்ன செய்யச் சொல்கிறாய்? பேசாமல் 100 மைல் தள்ளி வேறு வீடு பார்க்க வேண்டியதுதான்" என்கிறார்.
இதற்கிடையில் போன வாரம் நாங்கள் எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, திடுதிடுப்பென்று மாமா இரண்டு இளைஞர்களுடன் வந்து ''நம்ப ஊர்ப் பையன்கள். H1 விசாவில் வந்தார்கள். பாவம் வேலை போய்விட்டது. கொஞ்சநாள் இவர்களை உங்களுடன் தங்க வைத்துக் கொள்ள முடியுமா'' என்று கேட்டார். ''எப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் தெரியாதவர்களைக் கொண்டு நிறுத்துகிறார்'' என்ற எரிச்சல் இவருக்கு. ''சாரி, எங்களால் முடியாது. தயவுசெய்து இனிமேல் இப்படித் திடீரென்று வந்து எங்களை எக்கச்சக்கமாக மாட்டி விடாதீர்கள்" என்று சொல்லிப் பதிலை எதிர்பார்க்காமலேயே காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவமானத்திலும் அதிர்ச்சியிலும் மாமா உறைந்திருப்பார் என்று நினைக்கிறேன். “அப்படி ஒன்றும் தலை போகிற வேலை இல்லையே, உள்ளே கூப்பிட்டு 5 நிமிடம் பேசி ஒரு டீ கொடுத்து ''யோசித்துச் சொல்கிறோம்'' என்று சொல்லி அனுப்பியிருக்கலாமே என்று இவரிடம் கேட்ட போது வள்ளென்று விழுந்தார். ''இனிமேல் இவருடைய உறவே வேண்டாம். 5 நிமிடம் என்று நாம் நினைப்போம். 5 மணி நேரம் பேசி நம்மை மூளைச்சலவை செய்து அவர்களைத் தங்க வைத்துவிடுவார். நிச்சயம் நான் வேறு வீடு பார்க்கப் போகிறேன். இது பெரிய தொல்லையாக இருக்கிறது'' என்று கத்தினார்.
இது நடந்து, நானும் அந்த மாமாவைக் கூப்பிட்டு வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் செய்தது மிகையாக இருந்தாலும் நல்ல மனிதர். புதிதாக வந்த சமயத்தில் அவர் செய்த உதவிகளை என் கணவர் சிறிது நினைத்துப் பார்த்திருக்கலாம். சிறிய சம்பவம் ஆனால் மனதில் நிம்மதி இல்லை.
இப்படிக்கு...
அன்புள்ள சிநேகிதியே
உதவி செய்துவிட்டு உரிமையோ அல்லது பெருமையையோ தேடிக் கொண்டு இருப்பவர் கள் சராசரி. உதவியைச் செய்துவிட்டு அந்த உணர்ச்சிகளை உதறிவிட்டு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு சாரி.
அதே போல உதவிகளைப் பெற்றுக் கொண்டு அதே அளவில் பரிசுகளையோ, வாழ்த்துக்களையோ பதிலுக்கு அளித்துவிட்டு, வியாபார நோக்கிலேயே வாழ்க்கையை நடத்துபவர்கள் சராசரி. பிறர் காலத்தினால் செய்த உதவியை நினைவிலே நிறுத்தி வாழ்க்கைப் பாடம் கற்று உறவுகளை வளர்த்துக் கொள்பவர் மற்றொரு சா¡¢.
இந்த மாமா சராசரி. கணவரும் சராசரி. நீங்கள் கொஞ்சம் ஒரு சாரி! அப்படியே இருங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். (நான் இங்கே ஜோசியம் சொல்ல வில்லை) மனஉறுத்தல் இருக்கும். மனச்சாட்சி வதைக்கும். நம் சக்திக்கும் மீறிப் பிறருக்கு உதவிசெய்யத் தோன்றும். ஏனென்றால் எப்போதும் நன்றிக் கடனில் மூழ்கியிருப்போம். பரவாயில்லை, நன்றி மறப்பதைவிட கடனை நினைப்பது கடமையைச் செய்யத் தூண்டும்.
உங்கள் கணவரை நீங்கள் மாற்ற முடியாது. அவருடைய 'உறவுகளின் எல்லை' சிறிய வட்டத்தில் இருக்கலாம். உங்களுடையது சிறிது பெரியதாக இருக்கலாம். இந்தச் சம்பவத்தைப் பற்றி அவரிடம் மறுபடியும் பேசாதீர்கள். அவரே தனியாக யோசிக்கும் போது மாமா மனதைப் புண்படுத்திவிட்டோமோ என்று குற்ற உணர்ச்சியில் இருப்பார். அதைச் சரி செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். ஆனால் ''பெரியவர் தானே.. ஒரு ·போனை எடுத்து மன்னிப்புக் கேட்டால் என்ன?'' என்ற எண்ணம் தோன்ற விடாமல் கௌரவம் தடுத்து விடும். ஆகவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் மாமா அங்கீகாரத்துக்கு ஏங்குகிறார். நிறைய பேருக்கு இந்தக் குறை இருக்கிறது. தாங்கள் எது செய்தாலும் அதை நாலு பேர் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வட்டத்தி லேயே இருப்பதால் தாங்கள் செய்த உதவியால் மற்றவர் அடைந்த பலனில் சந்தோஷப்படத் தெரியாமல் போகிறது. 'சேவையின்' தத்துவம் விளங்காமல் போய்விடுகிறது. மாமா மாறுவதும் சிரமம். இதெல்லாம் ஒரு குணாதிசயம். குறைந்தது, இவர் உதவி செய்யும் மனதுள்ளவர். எதிர்பார்க்கிறார். நிறையப்பேர், தாங்கள் ஒரு சின்ன உதவி செய்தாலே அதைப் பெரிதாக நினைத்து, மகிழ்ந்து அதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் சிறிது பாவமாகத்தான் இருக்கும்.
இங்கே யார் நல்லவர், யார் கெட்டவர், யார் சரி, யார் தவறு என்று முடிவெடுக்கும் தகுதி எனக்கில்லை. ஆனால் ஒன்று, எதிர்பார்ப்புக் களைச் சுமக்கும்போது மனம் கனமாகி கொண்டே வரும். அந்த அழுத்தத்தில் நிம்மதி இருக்காது.
இன்னும் 10, 15 நாட்களில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் சந்திக்கும்போது ஏதோ ஒரு வகையில் பேசிச் சரிசெய்து கொண்டு விடுவார்கள். உங்கள் கணவர் செய்தது சரியில்லையென்று உங்களுக்குத் தோன்றினாலும் இது போன்ற சம்பவங்கள் மற்றவருக்கு தங்களுடைய எல்லைக்கோட்டைச் சுட்டிக் காட்டும். கவலைப்படாதீர்கள். 8 வருட சிநேகிதம். உடனே முறியாது. நீங்கள் ஒரு தனி சாரி.
வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்
சித்ரா வைத்தீஸ்வரன் |