வலையுலகின் வளைக்கரங்கள்
விரல் சொடுக்கில் உலகின் அசைவுகளைப் பார்க்குமளவுக்கு உலகம் இன்று சுருங்கிவிட்டது. ஐபேட், ஐஃபோன், டேப்லெட் என்று சின்னச் சின்னக் கருவிகள் போதும் பரந்த உலகின் நிகழ்வுகளைப் பார்வையிட. இணைய தளங்கள், யூட்யூப், ட்விட்டர், கூகிள் +, ஃபேஸ்புக், வலைப்பக்கங்கள் என்று அவரவர்கள் தங்களுக்கு விருப்பமான வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்வி, இசை, கவிதை, சிறுகதை, சமூகம், பொதுச்சேவை, பொழுதுபோக்கு என்று பல களங்களில் எழுதிவருகின்றனர். தயக்கத்தை உதறிவிட்டுப் பெண்களும் மிகத் தீவிரமாக இன்று வலையுலகில் இயங்கி வருகிறார்கள். அப்படி மகளிரால் நடத்தப்படும் சில சுவாரஸ்யமான வலைப்பதிவுகளைப் பார்ப்போமா?

*****


கவிதா: 'பார்வைகள்' (kavithavinpaarvaiyil.blogspot.in)

கவிதா தனது பார்வைகள் வலைப்பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை, சுற்றுலா, ஓவியம், ஒளிப்படம், சுய அனுபவம், சமையல் குறிப்புகள் என்று கலந்துகட்டி எழுதி வருகிறார்.. நகைச்சுவை இவரது படைப்புகளின் முக்கிய அம்சம். இன்று காண்பதற்கு அரிதாகிப் போன பூம்பூம் மாட்டுக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், தண்டோரா போடுபவர்கள், கோவிந்தா நாமம் போட்டு சாலையில் உருண்டு செல்பவர், வீடு வீடாகச் சென்று தயிர் விற்பவர்களைப் பற்றி இவர் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை இழப்பின் அவலத்தை எள்ளலாகச் சொல்கிறது. தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது, அப்பாவின் நினைவுகள், அமிர்தசரஸ் பயணம், ரங்கோலி ஓவியம் என்று விதவிதமான தலைப்புகளில் சுவாரஸ்யமான பல கட்டுரைகள் உள்ளன. பென்சில் சீவுகையில் உதிரும் சுருள்களை வைத்து இவர் உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் அழகோ அழகு. வீணையில் திரையிசைப் பாடல்களை வாசித்துப் பதிவேற்றியிருக்கிறார். இவர் எடுத்த ஒளிப்படங்கள் மிக நேர்த்தி. கண் தானத்தையும், சமூக சேவையையும் தன் பதிவுகளில் வலியுறுத்துகிறார்.

*****


கௌசல்யா ராஜ்: 'மனதோடு மட்டும்' (www.kousalyaraj.com)

கௌசல்யா ராஜ் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். ஒரு மகளிர் அமைப்பில் பொறுப்பேற்கிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே ஒரு பிரச்சனை வருகிறது. ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஓடிப்போன அவள் கணவனை(!) சேர்த்து வைக்கும்படி. பிரச்சனை என்னவென்றால் அந்தக் கணவன் ஏற்கனவே திருமணமானவன். இவள் இரண்டாவது. அது தெரியாமல் அல்லது தெரிந்தே ஏமாந்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர். அவள் கதி என்ன ஆயிற்று என்பது தெரியவேண்டுமானால் இங்கே போகவேண்டும்: அரசியல், அனுபவம், சமூகம், தாம்பத்தியம், குழந்தைகள் என்று பல தரவுகளைக் கொண்டதாக, கருத்துக்களை தெளிவாக, அழுத்தமாக எடுத்துரைப்பதாக விளங்குகிறது இந்த வலைப்பதிவு.

*****


கீதா ஆச்சல்: 'என் சமையல் அறையில்' (geethaachalrecipe.blogspot.in)

சைவம், அசைவம் என்று விதவிதமான சமையல் குறிப்புகள் கொட்டிக்கிடக்குது இந்த வலைப்பூவில். அதுவும் விதவிதமான படங்களுடன். எழுதுகிறவர் கீதா ஆச்சல். மைசூர் ரசம், காரக்குழம்பு, சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார், சிக்கன் கோலா உருண்டை தொடங்கி அவசர சிக்கன் குழம்பு, மோர்க்குழம்பு வடை, தலப்பா கட்டு பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, மெக்ஸிகன் ரைஸ், நவராத்திரி நைவேத்திய வகைகள் (ஸ்லோகங்களுடன்!) என்று பல சமையல் குறிப்புகள். செய்முறை விளக்கம் மற்றும் படங்களுடன் அவசர சமையல் குறிப்புகள், காலை டிபன் வகைகள், சாலட் மற்றும் சூப் வகைகள், பொடி வகைகள், பண்டிகை ஸ்பெஷல்கள், செட்டி நாட்டுச் சமையல் வகைகள் என்று படிக்கும்போதே கமகமக்கிறது. 600க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளைக் கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவு, சாப்பாட்டு ராமன் மற்றும் சீதைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். வெறும் சமையல் குறிப்புகள் மட்டுமல்லாமல் தாங்கள் சென்ற டிஸ்னி வேர்ல்டு, வர்ஜீனியா பீச், குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று பல சுவாரஸ்யமான கட்டுரைகளை வலையேற்றியிருக்கிறார், கீதா ஆச்சல்.

*****


ரஞ்சனி நாராயணன் (ranjaninarayanan.wordpress.com)

ரஞ்சனி நாராயணன் என்ற தனது பெயரையே வலைப்பதிவுக்கும் வைத்திருக்கும் இவர் மருத்துவம், சமூகம், அறிவியல், குழந்தை வளர்ப்பு பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வருகிறார். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். குழந்தைகள் ஏன் பொய் சொல்லுகிறார்கள்? என்ற கட்டுரை புதிதாகப் பல விஷயங்களைச் சொல்கிறது. பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள், விசித்திர தோற்றங்களில் பால்வெளிகள், மரபணுக்கள் என்று பல அறிவியல் தகவல்கள் வியப்பளிக்கின்றன. பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பாளரும் கூட. விவேகானந்தர் பற்றி இவர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இணைய இதழ்களிலும் வலைப்பதிவிலும் சிறந்த பங்களிப்புகளைத் தந்து வருகிறார், 60 வயது கடந்த இந்த இளைஞி.

*****


எம். கீதா: தென்றல் (velunatchiyar.blogspot.in)

புதுக்கோட்டையில் ஆசிரியராய்ப் பணிபுரியும் எம். கீதாவின் 'தென்றல்' வலைப்பதிவில் புத்தக அறிமுகங்கள், ஓவியம், கட்டுரைகள், கவிதை, கதை என்று பல பிரிவுகள். 'மனிதம்' என்ற கவிதை காலத்தின் தேவையை முகத்திலறைந்தாற் போலச் சொல்கிறது. சென்னை புத்தகக் காட்சி பற்றிய கட்டுரை புத்தகங்களோடு எஸ்.பி. முத்துராமனின் எளிமையையும் சொல்கிறது. இவர் ஓவியரும்கூட. அழகான ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள் கவர்கின்றன. புத்தக அறிமுகங்கள் சுவாரஸ்யம். பாரதிதாசன் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. 'விழிதூவிய விதைகள்' என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

*****


ராஜி: 'ராஜியின் கனவுகள்' (rajiyinkanavugal.blogspot.in)

அறிவியல் முதல் அவியல் செய்வதுவரை எதையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும் ராஜியின் வலைப்பதிவு இது. பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய வரலாற்றுக் கட்டுரை ஆகட்டும்; தன் ஆசிரியர்களைப் பற்றிய 'என் ஆசிரியர்கள்' ஆகட்டும்; 'தொப்பை இருக்கா உங்களுக்கு' என்ற கட்டுரையாகட்டும், எளிய கலகலப்பான நடையில் சம்பவங்களை விவரிப்பது இவரது பலம். 'வலைச்சரம்' ஆசிரியர் குழுவில் ஒருவர். சுவையான பல கட்டுரைகளை பலரைக் கொண்டு அதில் தொகுத்துத் தருகிறார். அலுக்காத நடை ராஜியினுடையது.

*****


சசிகலா: 'தென்றல்' (veesuthendral.blogspot.in)

இது சென்னை சசிகலாவின் தென்றல். 2011 முதல் வலையுலகில் செயல்பட்டு வரும் சசிகலா கவிப் பிரியர். 500க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தந்தவர். 'தென்றலின் கனவு' என்ற கவிதை நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 'தமிழைத் தேடுகிறேன், தமிழனைத் தேடுகிறேன்' என்ற கட்டுரையும், 'ஒரு ஜென்மம் போதாதே' என்ற கவிதையும் இவரது எழுத்துத் திறமைக்குச் சான்றுகள். காதலின் ஏக்கம், பிரிவுத் துயர், கிராமத்து வாழ்க்கை, முதுமையின் அவலம் என்று பல தலைப்புகளில் நூற்றுக்கணக்கான கவிதைகள் ஈர்க்கின்றன.

*****


ராஜராஜேஸ்வரி: 'மணிராஜ்' (jaghamani.blogspot.com)

ராஜராஜேஸ்வரியின் ஆன்மீகம் வலைப்பதிவு இது. ஆன்மீகக் கட்டுரைகள், ஆலய தரிசனங்கள், பயணங்கள், ஸ்லோகங்கள், புகைப்படங்கள் என்று பலவற்றைக் கொண்டது. ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி என்று சொல்லலாம்.
காயத்ரி மந்திரத்தின் மகிமை பற்றிக் கூறும் மிக விரிவான கட்டுரை சிறப்பு.
வரலக்ஷ்மி விரதம், கோகுலாஷ்டமி, ஆவணி அவிட்டம், சங்கடஹர சதுர்த்தி எனப் பல தலைப்புகளில் படங்களும் கூடிய விரிவான தகவல்களும் நிறைந்துள்ளன. சுய அனுபவக் கட்டுரைகள் இந்த வலைப்பூவிற்கு மேலும் பலம்.

*****


இவற்றையும் நீங்கள் விரும்புவீர்கள்:
குழந்தைகளுக்கான வழிகாட்டி: dheekshu.blogspot.com
கோலங்கள், கோலங்கள்: chitrakolangal.blogspot.in
கவிதைக் கடல்: kaviyazhinisaran.blogspot.in
சமையல்: annaimira.blogspot.com
யோகம், சித்த மார்க்கம்: www.siththarkal.com

*****


ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com