அர்க்கான்சா: 'மண்வாசனை' பொங்கல் விழா
வால்மார்ட்டின் தலைமையிடமான அர்க்கான்சா மாநிலத்தின் பென்டன்வில்லில், பொங்கல் விழாவின் அங்கமான கிராமச் சந்தை பெரும் வரவேற்பை பெற்றது. மண்வாசனை என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் நடனங்கள், குறுநாடகம், குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள், பறை நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த ஆண்டு கிராமச் சந்தையை உருவாக்கித் தமிழக மண்வாசனையை அமெரிக்காவுக்கே கொண்டுவந்து விட்டார்கள். பெஞ்சு, பேப்பர்கள், பிஸ்கட், வடை, டீ என நம்மூர் டீக்கடையை அப்படியே நகலெடுத்து சூப்பர் ஸ்டார் டீக்கடை என்ற பெயரில் திறந்து விட்டனர். அருகில் வரிசையாக கமல் போட்டோ ஸ்டூடியோ, கருமாரியம்மன் கூழுக்கடை, ஸ்ரீதேவி வளையல்கடை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பஞ்சாயத்துக் கூடம் என தமிழகத்தின் ஒரு கிராமத்தை இடம்பெயர்த்துக் கொண்டு வந்துவிட்டனர்.

பஞ்சாயத்து போர்டு டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாக, வைக்கோல் போர், ஏர், வண்டிச் சக்கரங்கள் இருக்க, ஊர்நடுவே கிராமிய நடனத்துடன் பொங்கல் வைத்து குலவையிட்டு, கும்மி அடித்து, பறையிசை முழங்கி விழாவை ஆரம்பித்தனர், விளக்கேற்றி, சூடம் காட்டி அச்சுப்பிசகாமல் கிராமப் பொங்கலை நினைவுபடுத்தினர். பலூன் உடைக்கும் 'க்விக் கன் முருகன்' பலூன்கடை கூட இருந்தது. சந்தைக்கு வரும் கூட்டத்தினரை, மைக்செட் சகிதம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தஞ்சாவூரிலிருந்து விழாவுக்காகவே போர்டுகள், வளையல், தோடுகள், பாசிமணி, ஹேர்பின், கொண்டை.ஊசி என அனைத்து ஐட்டங்களும் தருவிக்கப்பட்டிருந்தன. தஞ்சாவூர் ஸ்பெஷல் சாப்பாட்டு இலைகூட! பென்டன் அம்மன் நடனக் குழுவினர் அம்மன் சன்னதி போல் செட் போட்டு பல்வேறு பாடல்களுக்கு ஆடினார்கள். குடிகாரக் கணவன் அம்மனை பார்த்து சவால் விடுவதாகவும், அதனை பார்த்து அதுவரையிலும் சிலையாக இருந்தவர் ஆவேசமாக எழுந்து நடனம் ஆடினார்!

செயின்ட்லூயிஸ் அமெரிக்கத் தமிழ் கலைக்குழுவின் பறையிசை நடனம் சிறப்பு நிகழ்ச்சியில் பொற்செழியன் தமிழர்களின் பாரம்பரியக் கலையான பறையிசை நடனம், சிலம்பாட்டம் குறித்துப் பேசினார். பென்டன்வில்லில் பெண் கிடைக்காத டி. ராஜேந்தர், பெண் பார்க்க மூன்றாம் உலகத்திற்குச் செல்ல, அங்கே பேட்மேனும் ஸ்பைடர்மேனும் அவருக்குப் போட்டியாக வர, கலகலப்பான குறு நாடகம் அரங்கம் ஏறியது.

க்ளூலஸ் கூட்டம் குழுவினரின் நடனம் விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியாக அமைந்தது. இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படப்பாடலில் வரும் லண்டன் பிரிட்ஜ் வரிகளுக்கு ஒரிஜினல் அமெரிக்கர்களையே நடனம் ஆட வைத்துவிட்டனர். அதற்காக லுங்கி, டிராயர் அணிந்து வீடியோ பார்த்து பிரத்யேக பயிற்சியில் ஈடுபட்டனர். பார்வையாளர்களிடம் பெறப்பட்ட 1500 டாலர் நன்கொடையை மாதா அறக்கட்டளை மற்றும் தீக்ஷா கல்வித் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்கள். தமிழ் கவிதைப் போட்டிகளும் இடம்பெற்றன.

மதிய உணவாக சக்கரைப் பொங்கல், வடை பாயசம், அப்பளம் சாம்பார், பொறியல், அவியல், சாம்பார், போளி உள்ளிட்ட பதினாறு வகை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. வந்திருந்த 750 பேரில் பெரும்பாலானோர் வேட்டி சட்டை, சேலை எனப் பாரம்பரிய உடையில் இருந்தனர். பதிமூன்று வருடங்களாகப் பொங்கல் விழாவை, அமைப்பு ரீதியாக அல்லாமல், சகதமிழர் என்ற தோழமை உணர்வுடன் மட்டுமே நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

சின்னமணி

© TamilOnline.com