கர்நாடிக் சேம்பர் கான்சர்ட்: ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
ஜனவரி 11, 2014 அன்று 'கர்நாடிக் சேம்பர் கான்சர்ட்' (CCC) தனது ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவை மில்பிடாஸில் உள்ள ஷீர்டி சாய் பரிவார் அரங்கத்தில் கொண்டாடியது. கர்நாடக இசைக்கென இந்த மேடையை விரிகுடாப்பகுதியில் திருமதி. பத்மா மோகன் அமைத்துக் கொடுத்துள்ளார். இதன் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பிரபல இசைக் கலைஞர் திரு. நெய்வேலி சந்தானகோபாலனும், க்ளீவ்லாந்து தியாகராஜ ஆராதனையின் தலைவர் திரு சுந்தரமும் ஸ்கைப் வழியே தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக இசைக்கலைஞர்கள் திரு. ஸ்ரீகாந்த் சாரியும், திரு. H.V. ஸ்ரீவத்ஸனும் பங்கேற்றனர். கலிஃபோர்னியாவின் பதினேழாம் காங்கிரஸ் மாவட்டத்தில் போட்டியிடும் ரோ. கன்னா சிறப்பு வருகை தந்தார்.

விழாவில் பல்வேறு இசைப்பள்ளிகளின் மாணாக்கர்களான CCC குழந்தைகள் ஒரே மேடையில் பாடியது அற்புதம். இந்த நிகழ்ச்சிக்காக நெய்வேலி சந்தானகோபாலன் பல பாடல்களைத் தொகுத்து, இயற்றி, இசை வடிவமைத்து குழந்தைகளுக்குச் சொல்லி கொடுத்துள்ளார். ஏழு குழுவினராக வந்து பாடிய நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ராக தாள, சுருதி ஞானமும் உச்சரிப்பும் அசர வைத்தன. முதல் மூன்று குழுக்கள் தியான ஸ்லோகம், திருப்புகழ், பஞ்சதேவதா ஸ்துதியில் ஆரம்பித்தனர். பிறகு அடுத்த மூன்று குழுவினர் மேளகர்த்தா ராகங்களான மாயாமாளவகெளளை, சங்கராபரணம், கரகரப்ரியாவையும் அவற்றின் ஜன்ய ராகங்களையும் இணைத்துப் பாடினர். கடைசியில் சிறுவர்கள் குழு பாடிய ராகமாலிகைத் தொகுப்பு, நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது. CCC அமைப்பு இந்த வருடம் க்ளீவ்லாந்து தியாகராஜா ஆராதனையில் குழந்தைகளைப் பாட வைக்க உள்ளது.

ஆங்கிலத்தில்: ஹரி தேவநாத், ரேகா வைத்தியநாதன்
தமிழில்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com