சான் டியேகோ: பொங்கல் விழா
ஜனவரி 12, 2014 அன்று சான் டியேகோ தமிழ் அகடமி பொங்கல் திருநாள் கொண்டாடியது. மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கோல அச்சுக்களைக் கொண்டு மாணவர்கள் மனையை அலங்கரிக்க, மூன்று பொங்கல் பானைகளை ஏற்றிப் பொங்கல் விழாவை ஆசிரியைகள் திருமதிகள் ஆர்த்தி கண்ணனும், பத்மா சுவாமியும் துவக்கி வைத்தனர். பிஞ்சு விரல்களால் அரிசியை மாணவர்கள் அள்ளிக் கொடுக்க பெற்றோர் முகத்தில் அத்தனைப் பிரகாசம்! ஒவ்வொரு முறை பொங்கல் பொங்கிய போதும் "பொங்கலோ பொங்கல்" என ஆரவாரித்தனர்.

குழந்தைகளுக்கு கும்மியடிக்கவும், மாவிலைத் தோரணம் கட்டவும், படங்களுக்கு வண்ணம் பூசவும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்லிக்கொடுத்தனர். மூத்த ஆசிரியர் திரு. ராஜாராமன், பொங்கல், அதைக் கொண்டாடும் முறை மற்றும் அவசியம் ஆகியவற்றை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். பள்ளித் தொடர்பு உதவியாளர் திரு. கதிரவன் தமிழ்வாணன் அனைத்து நிகழ்வுகளை புகைப்படம் எடுத்தார். தமிழ் நாட்டிலிருந்து வந்த பாட்டி ஒருவர் கிராமத்தில் குடும்பத்தோடு பொங்கலைக் கொண்டாடிய நிறைவு வந்ததாக மகிழ்ச்சியுடன் கூற, விழா இனிதே நிறைவேறியது.

வலையகம்: www.tamilforkids.com/tamilschool

தகவல்: மீனா குணா
படம்: கதிரவன் தமிழ்வாணன்

© TamilOnline.com