ஜனவரி 18, 2014 அன்று டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது. டாக்டர். மஹாலக்ஷ்மியின் தலைமையில் அமைந்த புதிய செயற்குழுவின் முதல் விழா இது. சிறுவர், சிறுமியர் நிகழ்ச்சிகளில் கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கிராமிய நடனங்கள் கருத்தைக் கவர்ந்தன. கண்டாங்கிச் சேலை, வேஷ்டிகளுடன் குழந்தைகள் வலம்வந்தது கண்கொள்ளாக் காட்சி. சூப்பர் டான்சர்ஸ் போட்டியில் பலரும் பங்கேற்றுத் திறமைகளை நிரூபித்தனர்.
'படவா கோபி'யின் நகைச்சுவைப் பேச்சு (Stand up comedy) நிகழ்ச்சியின் சிகரமாக இருந்தது. கல்லூரி நாட்களில் 'மிமிக் படவாஸ்' என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தியதாகவும், கோபிக்கள் பலர் இருந்த அந்த இடத்தில் அவரை அடையாளம் காட்டியது "படவா" என்ற அடைமொழி என்று கூறினார்.
தன் மிமிக்ரியாலும், பேச்சு சாதுரியத்தாலும் குழந்தைகளைக் கட்டிப்போட்டது சிறப்பு. பின் கமல், ரஜினி, டி.ஆர். மஹாலிங்கம், டி. ராஜேந்தர் எனப் பலகுரல் மன்னராக மாறிப் பெரியோர்களையும் அசத்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் சிறு ஆங்கிலப்படம் ஒன்றிற்கான பின்னணி, வசனங்கள் எனத் தன் குரலில் மாறி, மாறி வெளிப்படுத்தி அவையைக் கலகலக்க வைத்தார்.
கலைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகளை கோபியும் அவர் மனைவி ஹரிதாவும் வழங்கினர். இறுதியாக, சிவாஜி கலைமன்றம் வழங்கிய 'ஹாலிவுட் அழைக்கிறது' நாடகத்துடன் விழா நிறைவுற்றது. தென்றலின் மூலம் நிகழ்ச்சிபற்றி அறிந்து நியூ ஜெர்ஸியிலிருந்து திருமதி கலா சுந்தர் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது.
தகவல்: லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா படம்: கற்பகம் அரவிந்தன். |