குருவந்தனம் - 2014
ஜனவரி 18, 2014 அன்று சான்டா கிளாராவில் உள்ள மிஷன் சென்டர் கலையரங்கத்தில் 'குருவந்தனம்' என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தேறியது. வளைகுடாப் பகுதியின் சிறந்த கர்நாடக இசைப் பாடகியான திருமதி. காயத்ரி சத்யா தமது குருவான சங்கீத பூஷணம், ஆசார்ய சூடாமணி திரு. O.V. சுப்ரமணியம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியைக் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

குரு O.V. சுப்ரமணியம் அவர்கள் இசை மேதைகளான டைகர் வரதாச்சாரியார், பொன்னையா பிள்ளை, T.S. சபேஸ ஐயர்,, சாத்தூர் கிருஷ்ணா ஐயங்கார் ஆகியவர்களுடைய சிஷ்யர், ராமபிரானின் பக்தர். அவர் டெல்லியில் 60 வருடங்கள் வசித்து இசை பயிற்றுவித்தார். அவருடைய புத்திரர்களாகிய O.S. தியாகராஜன், O.S.சுந்தர், O.S.அருண், திரு. O.S. மோகன் கர்நாடக இசையிலும் நாமசங்கீர்த்தனையிலும் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

இந்த ஆண்டு குருவந்தனம் நிகழ்ச்சியை மூன்று பகுதிகளாக தொகுத்து வழங்கினர். முதல் பகுதியில் வழக்கமாக பங்கேற்கும் இசைப்பள்ளி மாணவர்கள் தனியாகவும் குழுக்களாகவும் கீர்த்தனைகளைப் பாடினார்கள். இதில் பங்கேற்றவர்கள் சத்குரு வித்யாலயா, ஸ்ரீ பாதுகா அகாடமி, ஸ்ருதி வித்யா மியூசிக் அகாடமி, கீதா வித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஜெயஸ்ரீ தாசரதி, அகிலா ஐயர், கல்பகம் கௌஷிக், வசுதா ரவி, O.S. தியாகராஜன், டெல்லி P. சுந்தர்ராஜன் ஆகியோரின் மாணவர்கள்.

இரண்டாம் பகுதியில் மனோதர்ம சாஸ்திரப்படி ஒவ்வொரு மாணவரும் பக்க வாத்தியங்களோடு 15 நிமிடங்கள் பாடினார்கள். இதில் பங்கேற்றவர்கள்: நியதி ஸ்ரீராம் (காயத்ரி சத்யாவின் சிஷ்யை), சஹானா வெங்கடேசன் (ஜெயஸ்ரீ தாசரதியின் சிஷ்யை), சஹானா பிரசன்னா (வசுதா ரவியின் சிஷ்யை), ராகவ் கணேஷ் (P. மோகனாவின் சிஷ்யர்), அபர்ணா தியாகராஜன் (டெல்லி P. சுந்தர்ராஜனின் சிஷ்யை), விக்னேஷ் தியாகராஜன்-வயலின் (டெல்லி P. சுந்தர்ராஜனின் சிஷ்யர்), மற்றும் அருண் ஸ்ரீராம்-மிருதங்கம் (ஸ்ரீராம் ப்ரம்மானந்தனின் சிஷ்யர்).

மூன்றாம் பகுதியாக செல்வி. கீதா ஷங்கரின் 2 மணி நேரக் கச்சேரி நடைபெற்றது. இவர் நெய்வேலி சந்தானகோபாலனின் சிஷ்யை. ஸ்ருதி சாரதி-வயலின் (அனுராதா ஸ்ரீதரின் சிஷ்யை) மற்றும் விக்ரம் சத்யா பாரதி-மிருதங்கம் (நெய்வேலி R. நாராயணனின் சிஷ்யர்) கீதா ஷங்கருக்கு பக்கவாத்தியங்கள் வாசித்தனர். கீதா ஷங்கர், Carnatic Idol USA 2011 விருதை வென்றவர். கீதா பாடிய தியாகராஜ கீர்த்தனைகளான குருலேக இடுவன்டி, சொகசுகா ம்ருதங்க தாளமு, குருவாருமஹிமல, சிந்தயரெ சத்குரும் மற்றும் தில்லானா கேட்டோரைக் கட்டிப் போட்டதென்றால் மிகையாகாது. இந்த இசை விருந்து நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்தது.

சுதா லக்ஷ்மிநாராயணன்,
சான் டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com