டாலஸ்: அவ்வை அமுதம்
ஜனவரி 18, 2014 அன்று அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த சுமார் 60 குழந்தைகள், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, ஜாயஸ் மாண்டிசோரி பள்ளியில் நடத்திய அவ்வை அமுதம் போட்டியில், அவ்வையாரின் பொன்மொழிகளைப் பொருளுடன் ஒப்பித்து வியக்க வைத்தனர். அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் தமிழில் பேசினாலே அதிசயமாகக் கருதப்பட்ட காலம் போய், தமிழகக் குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தமிழில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் தமிழ் மறைகளை ஆழமாகக் கற்று அதன்வழி நடக்கவேண்டும் என்பதற்காக, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினர், 'ஒரு குறளுக்கு ஒரு டாலர்' போட்டியை நடத்தி வருகிறார்கள். அவ்வையாரின் பொன்மொழிகளான ஆத்திசூடி, நல்வழி, மூதுரை, கொன்றைவேந்தன் ஆகியவை உள்ளடங்கிய அவ்வை அமுதம் போட்டி இந்த ஆண்டு தொடங்கியது. 8 பேர் ஆத்திசூடியின் 109 செய்யுள்களையும் பொருளோடு கூறினர்; 43 பேர் வெவ்வேறு ஆத்திசூடி செய்யுள்களை கூறினர்.

மூன்றே வயதான ஸ்ருஜனா பதின்மூன்று ஆத்திசூடிகளைக் கூறி மலைக்க வைத்தார். அவருடைய அண்ணன் 109 செய்யுளையும் கூறியவர். அண்ணன் படிப்பதைக் கேட்டுத் தானும் கற்றுக்கொண்டுள்ளார். அதே வயதான சண்முகவ் 7 ஆத்திசூடிகளை ஒப்பித்தார். தவிர, அவ்வை கண்ட அன்னையும் பிதாவும், திருவள்ளுவரும் நட்பும், அவ்வையும் கல்வியும் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. 25 குழந்தைகள் பங்கேற்றுப் பேசினர். பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத் தலைப்புகள் கொடுக்கப்பட்ட போதும் அவர்களும் ஆர்வத்தோடு பேசினர்.

குழந்தைகள் கட்டுரைப் போட்டியில் திருக்குறள் கூறும் வாய்மை, அவ்வை காட்டும் அறவழி, அவ்வையும் பெண்மையும் என்ற தலைப்புகளில் 12 குழந்தைகள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். பெரியவர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது. ஆத்திசூடியைப் பெற்றோர்களும் அறிந்திருந்த போதிலும், அவ்வையாரின் நல்வழி, மூதுரை, கொன்றை வேந்தன் குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை. இந்தப் போட்டிகளின் வழியே பிள்ளைகளுடன் சேர்ந்து தாமும் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தனர். பெற்றோருக்கும் சிறப்பு வகுப்புகள் ஆரம்பிக்கக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் சிறப்பு தமிழ் கலந்துரையாடல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டாக்டர். தீபா தலைமையில், பழனிசாமி, ஜெய்சங்கர், விவேக், சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

வழக்கமான திருக்குறள் போட்டி பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது. போட்டிகளின் முடிவும் பரிசளிப்பு விழாவும், பிப்ரவரி 22ம் தேதி திருவள்ளுவர் விழாவாகக் கொண்டாடப்படும். இவற்றுக்கான பொறுப்பாளர் டாக்டர். ராஜ் தலைமையில் தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். சிறப்பு விருந்தினராக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் C.I.O. ஆன திரு. ஜெய் விஜயன் பங்கேற்கிறார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இயக்குனர்கள் வேலு ராமன் மற்றும் விசாலாட்சி வேலு ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

© TamilOnline.com