வடகரோலினா: பொங்கல் விழா
ஜனவரி 19, 2014 அன்று வடகரோலினா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை கேரி கலைமன்றத்தில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்தன. தொடர்ந்து தலைவர் திருமதி. சாருலதா குருபரன் உரையாற்றியதோடு புதிய சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

முதலில் 'ஸீரோ கிராவிட்டி' குழுவினரின் மெல்லிசை நடைபெற்றது. தொடர்ந்து திரு. செல்வன் பச்சமுத்து இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய தகவல்களைக் கொடுத்தார். அடுத்து, தளிர் ஆர்ட்ஸ் அகடமியின் நடனம் நடைபெற்றது. பின்னர் சிறுவர்கள் வேட்டியுடன் "அடடா ஆரம்பம்" என்றவொரு நடனத்தை வழங்கினர். கற்பகவள்ளி சாய்சங்கர் இயக்கிச் சிறுமிகள் ஆடிய தசாவதார நடனம் மனதைக் கவர்ந்தது. ஜெயந்தி அறிவுடைநம்பியின் வழிகாட்டலில் பொங்கல் பாடல்களைச் சிறுவர்கள் பாடினர். அடுத்ததாக வந்த குழந்தைகள் "அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா" என்று பாடியாடிக் கலகலப்பூட்டினர்.

பரதநாட்டியத் தில்லானாவை திருமதி. சுகந்தினி சந்திரசேகரன் நேர்த்தியாக இயக்கியிருந்தார். பாரதியாரின் பாடல்களை திருமதி. ரம்யா வரதராஜனின் மாணவர்கள் பாடினார்கள். திரு. கண்ணுத்துரை லோகேந்திரனின் இயக்கத்தில் 'பிரச்சினை' என்ற நாடகம் மேடையேறியது. திருமதி. சாந்தி சுப்பிரமணியனின் ஒருங்கிணைப்பில் குழந்தைகள் நடனமாடினர். பின்னர் சாருலதா குருபரன் தயாரிப்பில் பொங்கல் பற்றிய வில்லுப்பாட்டு நடைபெற்றது. சிவகாமி அண்ணாத்துரையின் நடன அமைப்பில் "மாமா மாமா" பாடலுக்கு குழந்தைகள் நடனமாடினர். பின்னர், ஏ.ஆர். ரகுமானின் பாடல்களுக்கு நங்கையர் நடனமாடினர். அடுத்து, அபிநயம் அகடமி மாணவியரின் கண்ணன் பாட்டு பரதநாட்டியம் நடைபெற்றது.

எதிர்வரும் FETNA நிகழ்வுகளைப் பற்றிய தொகுப்பின் பின்னர் திருவாளர்கள் செந்தில்குமார் சுப்பிரமணியம், சோனை தர்மர் ஆகியோரின் இயக்கத்தில் "எங்கே போகிறோம்" என்ற நாடகம் மேடையேறியது. திரு. அழகானந்தம் கிருஷ்ணானந்தனின் மாணவர்களின் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர். திருமதி. அனிதா ஜெயராமன் நடன அமைப்பில் 'ராஜாராணி உல்லாச நடனம்' நடைபெற்றது. பின்னர் கரயோகி பாடல்களை இளம்பெண்கள் பாடினர். திருமதி. சிவகாமி அண்ணாத்துரையின் நடன அமைப்பில் "ஊதா கலரு ரிப்பன்" பாடலுக்குச் சிறுவர்கள் நடனமாடினர். தொடர்ந்து வந்த "உன்னைக் காணாமல் நான் இங்கு" என்ற பாடலுக்கு அற்புதமான கதக்களி நடனமொன்றை நிவேதா மற்றும் அனுமீனா சொர்ணா நடன அமைப்பில் இளநங்கையர் ஆடியனர்.

தொடர்ந்து சுகந்தினி சந்திரசேகரனின் நெறியாள்கையில் "கோபியர்கள் கோகுலத்தில் கூட்டம் கூடினார்", "கோல்கள் ஆடுவோம்" என்ற பாடல்களுக்குச் சிறுமியர் கும்மி அடித்தனர். சிவகாமி அண்ணாத்துரையின் நெறியாள்கையில் "டெடி பியர் பிஸ்தா" பாடல் கலவை நடனமொன்றைச் சிறுவர்கள் ஆடினார்கள். பட்டிமன்றத்தில் "தமிழ் இலக்கியங்கள் மக்களைச் சென்றடையப் பெரிதும் உதவி புரிவது எழுத்தாற்றலா? பேச்சாற்றலா?" என்ற தலைப்பில் விவாதித்தார்கள். அடுத்து அனு ஜெயராம் குழுவினர் பழமை புதுமை ராக் அன்ட் ரோல் கலவை நடனமொன்றை வழங்கினர். தளிர் ஆர்ட்ஸ் அக்கடமியின் இன்னிசை விருந்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன்

© TamilOnline.com