BATM: பொங்கல் விழா
ஜனவரி 25, 2014 அன்று வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழாவை கேள் ரஞ்ச் நடுநிலைப்பள்ளியில் நடத்தியது. காலையிலேயே விளையாட்டுத் திடலில் கரும்புகள், கோலங்கள் என்று அலங்காரங்கள் அமர்க்களப்பட்டது. திறந்த வெளியில் பொங்கல் தயாராகி, அரங்கத்தில் கலைநிகழ்சிகள் துவங்க ஆரம்பிக்கையில், அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மன்றத் தலைவர் திரு. சோலை அழகப்பனின் உரையைத் தொடர்ந்து பரதத்துடன் கலை நிகழ்சிகள் தொடங்கின. ஆடல், பாடல் வகைகளைச் சிறியவர் பெரியவர் வித்தியாசமின்றி மன்றக் குழுவினர் கலந்து வழங்கினர். சான் ரமோன் நகர மேயர் பில் கிளார்க்ஸன் (Bill Clarkson) அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஒரு சிற்றுரை ஆற்றினார். வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவை தலைவர் முனைவர். தண்டபாணி குப்புசாமி அவர்கள் விழாவுக்கு வந்திருந்தார்கள். அரங்கத்திலிருந்தோர் மறைந்த தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார் அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஏப்ரல் மாதக் கடைசியில் பெரிய அளவில் சித்திரைத் திருவிழா ஃப்ரீமான்ட் நகரில் நடைபெற உள்ளது. கலை நிகழ்சிகள், பாரம்பரிய உணவுகள் அடங்கிய சிறப்பான விழாவாக, தமிழர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், கலைக் குழுக்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் info@ bayareatamilmanram.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்ப் பாடல், ஆடல், பேச்சுத் திறமைக்கான தேடல் நிகழ்ச்சியின் ஆரம்பச் சுற்றுக்கள் விரைவில் துவங்க உள்ளன. வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் தயாரிக்கும் இந்நிகழ்ச்சி IndTV USAவில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்.

கணேஷ் பாபு,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com