ஜனவரி 25, 2014 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை போலிங்ப்ரூக் உயர்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் நடத்தியது. இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் செயலாளர் திரு. மணி குணசேகரன் வரவேற்புரையுடன் தொடங்கின. நிகழ்ச்சிகளைத் திருமதி. தேவி அண்ணாமலை மற்றும் திருமதி. ரம்யா லக்ஷ்மிநாராயணன் தொகுத்து வழங்கினர்.
நடனம், கவிதை, குறுநாடகம், நகைச்சுவைப் பேச்சு என பல அம்சங்களை கொண்டிருந்தது விழா. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். திரு. சிற்றரசு, திரு. சிவா, திருமதி. தேவி அண்ணாமலை ஆகியோரின் பொங்கல் கவிதைகள் மக்களை கிராமங்களுக்கு அழைத்துச் சென்றன. திரு. C.G. பிள்ளை அவர்களின் நகைச்சுவை நேரமும் விக்னேஷ் குழுவினரின் 'நவீன சிலப்பதிகாரம்' குறுநாடகமும் மக்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தின. சிறுவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் ஆடிய நடனங்கள் கரவொலி பெற்றன.
சங்கத் தலைவர் திரு. சோமு புதிய செயற்குழுவையும், வரவிருக்கும் ஆண்டுக்கான திட்டங்களையும் அறிமுகம் செய்தார். பொருளாளர் திரு. பிரசாத் மற்றும் திரு. நம்பி விளம்பரதாரர்களை அறிமுகம் செய்தனர். சிகாகோ ஆதரவற்றோர் இல்லத்துக்கு (Hesed House) எதிர்பார்த்ததைவிட அதிக நன்கொடை வழங்கினர் என்று திருவாளர்கள் வரதீஷ் மற்றும் அருள் பாலு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சோமு அவர்கள் விழா நாயகன் விஜய் தொலைக்காட்சி 'நீயா நானா' புகழ் திரு. கோபிநாத் அவர்களை அறிமுகம் செய்து அவரை மேடைக்கு அழைத்தார். சென்ற ஆண்டு மே மாதம் மேடையேறிய 'பொன்னியின் செல்வன்' நாடகத்தின் குறுந்தட்டை கோபிநாத் வெளியிட்டார். முதல் குறுந்தட்டை திரு. சவரிமுத்து மற்றும் திரு. அறவாழி பெற்றுக்கொண்டனர்.
நிறைவாக கோபிநாத் தலைமையில் சுமார் முப்பது பேர் பங்கேற்ற விவாத மேடை நடந்தது. "அமெரிக்காவில் வாழும் பெற்றோர்கள் பிள்ளைகளின் சுதந்திரத்தில் அதிகமாக தலை இடுகிறார்கள் (அ) தலையிட வேண்டிய அவசியம் இருக்கிறது" என்ற தலைப்பில் காரசாரமான விவாதம் நடந்தது. இங்கு பிறந்து வளர்ந்த இளைஞர்கள் பலர் தமிழில் வாதம் செய்ததது பெருமைக்குரியது. இறுதியில் கோபிநாத் அளித்த முடிவுரை மக்களைச் சிந்திக்கத் தூண்டியது. துணைத்தலைவர் திரு. சாக்ரடீஸ் நன்றியுரை வழங்கினார்.
அடுத்து, "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்னும் பாரதியின் வாக்கு மெய்ப்பட, தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து மே 24, 25 தேதிகளில் (Memorial Day weekend) மாபெரும் விழாவை நடத்தவுள்ளது. தமிழகத்தில் இருந்து தமிழறிஞர்களும், திரைப்படக் கலைஞர்களும் வந்து பங்கேற்க உள்ளார்கள்.
பிரேம் ஆனந்த், சிகாகோ படம்: ஆர்த்தமா அருளொளி ராஜாராம் |