பிப்ரவரி 2014: வாசகர் கடிதம்
தென்றல் டிசம்பர் 2013 இதழ் கிடைத்தது. மிக்க நன்றி. கண்புரை அறுவை மருத்துவம் செய்துகொண்டதனால் உடனே வாசிக்க இயலவில்லை. இப்போதும் என் உதவியாளர் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தேன். என்னைப் பற்றிய அருமையான அறிமுகம் மகிழ்ச்சித் தந்தது. திரு. சுந்தர ராமசாமி அவர்கள் என்னைப்பற்றிச் சொன்ன சொற்களைப் பதிவு செய்திருப்பது முக்கியமானது. 'தேடல்' நாவலில் இருந்து சுவையான ஒரு பகுதியை வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். எழுத்தாளர் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவு.

மறைந்த எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை அவர்களைப் பற்றிய அஞ்சலி அருமை. அவருடைய ஆரம்பகால குறுநாவல் ஒன்று என்னைக் கடுமையாகப் பாதித்தது. புஷ்பா தங்கத்துரையாகவும், ஸ்ரீவேணுகோபாலனாகவும் எழுதிய அவர் தன் மணிக்கொடி பாணியையும் தொடர்ந்திருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. தமிழ்நாடன் பற்றிய உங்கள் அஞ்சலியும் மனதில் கரைகிறது.

அமெரிக்காவாழ் தமிழர்களுக்கும் இதர உலகத் தமிழர்களுக்கும் ஒரு பண்பாட்டுப் பாலமாக அமைந்திருக்கும் தென்றல் தமிழ் மக்களின் இல்லங்களிலெல்லாம் வீசட்டும்.

பொன்னீலன்,
மணிக்கெட்டிப் பொட்டல், தமிழ் நாடு.
ponneelan1940@gmail.com


*****


பதினான்காவது படியை எட்டிய தென்றலுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இலியோராவின் கதையின் இறுதிப் பாராக்களைப் படித்தவுடன் உள்ளம் சிலிர்த்து விட்டது என்று கூறினால் மிகையாகாது. சீதா துரைராஜின் 'சிக்கல்' வேலவனின் வரலாறு சிறப்பாக இருந்தது. இசையுதிர் காலத்தின் சவால் ராஜா சவால் பிரமாதம். தென்றல் கொஞ்சி நடனமாடி வாசகர்களை வசீகரித்து வரவேற்க வைத்தது. நன்றி.

கமலா சுந்தர்,
வெஸ்ட் விண்ட்சர், நியூ ஜெர்ஸி



© TamilOnline.com