மருத்துவரைத் தெய்வமாக மதித்துவந்த காலம் போய், வர்த்தகராக மதிக்கும் காலம் இப்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இது ஒருவிதமான கலாச்சாரப் பிறழ்வாகத் தெரியலாம். இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவரைக் கேள்வி கேட்பதோ, மருத்துவரின் ஆலோசனைக்கு மறுப்புத் தெரிவிப்பதோ அவ்வளவாக நடைமுறையில் கிடையாது. ஆனால் அமெரிக்காவில் நோயாளியை ஒரு தனி நபராக, வர்த்தக ரீதியில் காண்பது பழக்கமாகி வருகிறது. இதனால் நோயாளி கள் தெரிந்து கொள்ளவேண்டியவை என்ன என்பதை இங்கே காண்போம்.
மருத்துவரின் கேள்விகளுக்கு உண்மை யான பதில்களைச் சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாதவரை அழைத்துச் சென்றால், கூடுமானவரை நோயாளியின் பதிலை அப்படியே மொழிபெயர்க்க முயலுங்கள். நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்பதை விட நோயாளி என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம். நேரடியான பதில்களைக் கொடுங்கள்.
இந்தியாவிலோ அல்லது வேறு இடத்திலோ உங்கள் உடல்நிலையை வேறு மருத்துவர் பரிசோதித்திருந்தால் அந்த விவரங்களைச் சேகரித்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவி லேயே வெவ்வேறு இடத்தில் மருத்துவரை அணுகியிருந்தால் அந்த விவரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மருத்துவ விவரங்களின் நகலைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் உங்களது மருத்துவ விவரங்களை மற்றவர் அறியாவண்ணம் பாதுகாக்கும் உரிமையும் உங்களுக்கு உண்டு. சமீபத்தில் இயற்றப்பட்ட 'Health Insurance Portability and Accountability Act (HIPAA) என்ற சட்டம் இந்த உரிமை களை நோயாளிகளுக்கு வழங்குகிறது. இதனால் மருத்துவமனை அலுவலகத்தில் 'Privacy rights', 'Release Authorisation form' என்ற சில படிவங்களில் உங்களிடம் கையெழுத்து வாங்கலாம்.
உங்கள் மருத்துவக் காப்பீடு (Health Insurance) விவர அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கவேண்டும். உங்களின் நோய்ப் பட்டியலையும், மருந்துகளின் பட்டியலையும் எப்போதும் சட்டைப் பையில் வைத்திருப்பது நல்லது. அவசரநிலை ஏற்பட்டாலோ அல்லது எதிர்பாராத நிலையில் மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தாலோ இது பெரிதும் உதவும். மருத்துவரை எந்தக் காரணத் திற்காகச் சந்திக்க நேர்ந்தாலும் இந்தப் பட்டியல் உங்களிடம் இருப்பது நல்லது. நான் கண் மருத்துவரைத் தானே காணப் போகிறேன், அவருக்கு என் நீரிழிவு நோய் பற்றிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பது தவறு. எந்த நோய் பற்றிய விவரம் தங்களுக்குத் தேவை என்பதை மருத்துவர்களின் நிர்ணயத்துக்கே விடுவது நல்லது. இந்திய மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் தங்கள் மாத்திரைகளை அந்த மருந்தின் pharmocological பெயர் தெரியும்படியான மருந்து அட்டையைத் தங்களிடம் பாதுகாத்து வைத்துக் கொள்வது அவசியம்.
மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்ய முடிவு செய்தால் அவற்றின் விவரங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஒரு சில மருத்துவர்கள் தாங்களாகவே விவரங்களை சொல்லலாம். ஆனால் பல மருத்துவர்களிடம் நீங்கள்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிவரும். உங்களுக்கு அதன் அவசியம் புரியா விட்டால் அதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பரின் மகன் மருத்துவப் பள்ளியில் படிக்கிறான், அவனைக் கேட்டு கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் மருத்துவருக்கே உங்கள் நோயைப் பற்றியும், பரிசோதனை யின் அவசியம் பற்றியும் நன்கு தெரியும்.
உங்கள் மருத்துவர் புதிய மாத்திரைகள் கொடுத்தால் அதன் பின்விளைவுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பரிசோதனைகளின் முடிவுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவை அசாதாரணமானவை என்று தெரியவந்தால் சரியான அளவுகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் நோய் பற்றிய அதிக விவரங்களை வலைத் தளத்திலோ அல்லது வேறு புத்தகத்திலோ படித்து அறிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் இவை பல சந்தேகங்களை எழுப்பலாம். அவற்றை உங்களின் மருத்துவரிடமே கேட்டுத் தீர்த்துக்கொள்ளுங்கள்.
பல நேரங்களில் உங்கள் மருத்துவர் உங்களையே சில முடிவுகள் எடுக்கச் சொல்லலாம். வெவ்வேறு தீர்வு முறைகளை விளக்கிய பின்னர் முடிவு உங்கள் கையில் என்ற நிலை வரும்போது அந்த விவரங்களை நன்கு அறிந்திருப்பது முடிவு எடுப்பதை எளிமையாக்குகிறது. சமீபத்தில் நியூ யார்க் டைம்ஸ் நாளேட்டில் நோயாளிகளை முடிவுசெய்யச் சொல்லும் வழக்கம் பற்றிக் காரசாரமான விவாதம் நடந்தது. நன்கு படித்த நோயாளிகள் பலர் இருப்பதாலும் முடிவுகள் தவறும் நேரத்தில் பலர் சட்டத்தைக் கையில் எடுப்பதாலும் பல மருத்துவர்கள் இந்த முறையைக் கையாளுவதுண்டு.
நோய் தீவிரமானால் உங்களின் விருப்பம் என்ன என்பதை முன்னரே மருத்துவரிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம். 'Advance Directives' என்று சொல்லப்படும் இந்த முறையினால் நோயாளியின் விருப்பத்தை நோயின் தீவிரம் அதிகமாகுவதற்கு முன்னரே மருத்துவர் அறிந்துகொள்ள முடிகிறது. இதைப்பற்றி அடுத்த இதழில் விவரமாகக் காணலாம். கூடுமானவரை ஒரே மருத்துவரை முதன்மை மருத்துவராக (Primary Care doctor) வைத்திருப்பது நல்லது. ஒரு மருத்துவரின் கருத்துக்கள் உங்களுக்கு உடன்படாத நேரத்தில் 'second opinion' என்ற பெயரில் வேறு மருத்துவரை நாடுவதும் இங்கே பிரபலமான பழக்கம்.
ஆக, தகுந்த ஆலோசனை பெற்று உங்கள் உடல் நலனைக் காப்பது உங்கள் கையிலேயே உள்ளது. மருத்துவரை சர்வ நோய் நிவாரண அதிபதியாகவோ அல்லது இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்கிடும் விஞ்ஞானியாகவோ அதுவும் இன்றி வெறும் உடல்நல வர்த்தகராக மட்டுமோ காணாமல் உங்கள் நோய் பற்றி உங்களின் அறிவை வளர்க்க உதவும் நண்பராக, ஆலோசகராகக் கருதவேண்டும். அப்படிக் கருதினால் மருத்துவரிடம் உங்களுக்கு நல்லுறவு ஏற்படும். உங்கள் உடல், மனதுடன் உங்களுக்கே நல்லுறவு ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் உடல்நிலை குணமாக உங்களுடைய பங்கு மருத்துவரின் பங்கைவிட அதிகம் என்பதை மறந்து விடாதீர்கள்.
நலமாய் வாழ வாழ்த்துக்கள்!
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |