அஞ்சலிதேவி
தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நாட்டியமும் பயின்றார். வளர்ந்தபின் நாடகங்களில் கதாநாயகியாக நடிக்கத் துவங்கினார். பிரபல இசையமைப்பாளரும், நடன இயக்குநருமான ஆதிநாராயண ராவ் அஞ்சலிதேவியால் ஈர்க்கப்பட்டார். தனது நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்ததுடன் பின்னர் திருமணமும் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னர் அஞ்சலிதேவியின் திரைப்பிரவேசம் நிகழ்ந்தது. பிரபல இயக்குநர் சி. புல்லையா 'கொல்லபாமா' என்ற படத்தில் மோகினி வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அந்தப் படம் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெளியாகி வெற்றி பெற்றது. படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. 1954ல் ஏவி.எம்மின் தயாரிப்பான 'பெண்' படத்தில் ஜெமினிகணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். 1955ல் வெளியான 'கணவனே கண்கண்ட தெய்வம்' அஞ்சலிதேவியின் வாழ்க்கையில் திருப்புமுனையானது. தெலுங்கு, தமிழ் இரண்டிலுமே வெற்றிப்பட நாயகி ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்.டி.ராமராவ்., நாகேஸ்வர ராவ் எனப் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். பல்வேறு விருதுகளும், கௌரவங்களும் இவரைத் தேடிவந்தன. நீண்டகாலமாக நோயுற்றிருந்த இவர், ஜனவரி 13 அன்று காலமானார். அஞ்சலிதேவிக்கு தென்றலின் அஞ்சலி.



© TamilOnline.com