பாரதி படைப்புகளைத் தொகுப்பதும் ஆய்வதுமே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்த எழுத்தாளர் ரா.அ. பத்மநாபன் (96) சென்னையில் காலமானார். தனது 16ம் வயதில் ஆனந்த விகடனில் பணிதுவக்கிய பத்மநாபன் பின்னாளில் தினமணி கதிர் மற்றும் தி இந்து நாளிதழ்களில் பணியாற்றினார். பாரதியாரின் படைப்புகளைத் தொகுத்து "பாரதியம்" பரவக் காரணமானார். பாரதியாரின் ஐந்து அரிய புகைப்படங்களில் இரண்டு புகைப்படங்கள் இவர் தேடிக் கண்டுபிடித்தவையே. பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள், இந்தியா இதழில் பாரதியார் எழுதிய படைப்புகள் எனப் பலவற்றைத் தேடி ஆய்ந்து பதிப்பித்துள்ளார். 1957ல் இவர் வெளியிட்ட பாரதியாரின் புகைப்படங்கள் அடங்கிய 'சித்திர பாரதி' மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. குழந்தைகளுக்காக இவர் எழுதிய 'பாரதி' என்ற புத்தகம் தேசிய புத்தக அறக்கட்டளை மூலம் 16 மொழிகளில் வெளியிடப்பட்ட பெருமை உடையது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் திறன் பெற்றிருந்த பத்மநாபன், வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகளை ஆவணப்படுத்தியுள்ளார். 32 நூல்கள் எழுதியிருக்கும் ரா.அ.பத்மநாபன், பாரதி ஆய்வியலின் மிகச் சிறந்த முன்னோடி. அவருக்கு தென்றலின் அஞ்சலி.
|