இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர், அண்ணாமலை பல்கலையில் இளங்கலை விவசாயம் பட்டம் பெற்றவர். கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி மையத்தில் மேலாளர் பணியில் சேர்ந்து பணியாற்றினார். மத்திய அரசு கொண்டு வந்த 'பசுமைப் புரட்சி' திட்டத்தினால் மக்களுக்கு பயனேதும் விளையப்போவதில்லை; ரசாயன உரங்களால் மண் மாசுபட்டு வளம் கெடும்; பயிர்களின் இயற்கைத் திறன் அழியும் என்பதை உணர்ந்து அத்திட்டத்தை எதிர்த்தார். பணியிலிருந்து விலகி இயற்கை விவசாயம் காக்கப் போராடத் துவங்கினார். தமிழ்நாடெங்கும் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வூட்டினார். பாலவிடுதி அருகே கடவூர் கிராமத்தில், 35 ஏக்கர் நிலத்தில் 'வானகம்' என்னும் இயற்கை விவசாயப் பண்ணையை ஏற்படுத்தினார். அதன்மூலம் விவசாயிகளிடம் இயற்கை வேளாண்முறைக்கு மாறுமாறு தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். விவசாயத்தையும் மண்வளத்தையும் பாதிக்கும் இந்திய அரசின் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை வேளாண்முறையை வலியுறுத்திப் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகள் நடத்திவந்த அவர், ஒரு விழிப்புணர்வுப் பிரசாரத்திற்குச் சென்றிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்குத் தென்றலின் அஞ்சலி.
|