பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் (90) காலமானார். 1924, செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கடரத்னம்-புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர். வறுமையான குடும்பம் என்பதால் கல்வி பாதியிலேயே நின்று போனது. பின்னர் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவங்கினார். 1941ல் 'தர்மபத்தினி' என்ற படத்தின்மூலம் இவரது திரையுலக அறிமுகம் நிகழ்ந்தது. முதல் படத்தின் மூலமே ஸ்டார் நாயகன் ஆனார். தொடர்ந்து 'மாயாபஜார்', 'லைலா மஜ்னு', 'அனார்கலி', 'ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம்', 'மிஸாம்மா', 'பாலராஜு', 'பிரேம் நகர்' எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இவர் நடித்த 'தேவதாஸ்' திரையுலகிற்கே மறக்க முடியாத படமானது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்திருக்கும் நாகேஸ்வரராவ் தமிழிலும் நடித்துள்ளார். 'ஓர் இரவு', 'மாயக்கன்னி', 'மாதர்குல மாணிக்கம்', 'எங்கவீட்டு மகராணி', 'வாழ்க்கை ஒப்பந்தம்' போன்ற படங்கள் முக்கியமானவை. இந்திய அரசின் 'பத்மவிபூஷண்', 'தாதா சாகிப் பால்கே' விருது, 'ஃபிலிம்ஃபேர்' விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். இவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகியோரும் தெலுங்கின் வெற்றிக் கதாநாயகர்களாக உள்ளனர். நாகேஸ்வரராவுக்குத் தென்றலின் அஞ்சலி.
|