பழம் தின்னாத குரங்கு
மன்னர் கிருஷ்ணதேவராயர் தன் அமைச்சர்களுடன் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார். அருகில் ஒரு தட்டில் பழரசங்களும், பானங்களும், பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த குரங்கொன்று ஒரு பழத்தை எடுத்துக் கொண்டு ஓடியது.

பதறிய பாதுகாவலர்கள் அதனைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அதுவோ தாவிக் குதித்து மரத்தின் மேல் ஏறித் தப்பி ஓடிவிட்டது.

மன்னருக்குக் கடுங்கோபம்! தன் அந்தரங்க அறைக்குள் குரங்கு வந்து செல்லுமளவுக்குப் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த காவலாளிகளைக் கடுமையாகத் திட்டியதுடன், உடனடியாக அந்தக் குரங்கைப் பிடித்துக்கொண்டு வந்து தன்முன் நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களைச் சிறையில் அடைத்துவிடுவதாகவும் கூறினார். பயந்து போன காவலர்கள் குரங்கைத் தேடிக்கொண்டு ஓடினர்.

மறுநாள் காலை அரசவை கூடியபோது அந்தக் குரங்கைப் பிடித்து வைத்திருந்தனர் காவலர். மன்னர் அங்கு வந்தார். குரங்கைப் பிடித்து விட்டதாகவும், பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்காகத் தங்களை மன்னித்துவிடும்படியும் கேட்டுக்கொண்டனர்.

குரங்கு மன்னரைப் பார்த்ததும் பல்லைக் காட்டி 'ஈ' என்று இளித்தது. அதனால் மன்னருக்குச் சினம் அதிகமானது. "என்ன அலட்சியம்! இந்தக் குரங்குக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், சொல்லுங்கள்" என்றார் அவையினரைப் பார்த்து ஆத்திரத்துடன்.

"இந்தக் குரங்கைக் காட்டுக்குத் துரத்தி விடுங்கள்", "பட்டினி போட்டுக் கொன்று விடுங்கள்", "பாதாளச் சிறையில் அடையுங்கள்" என்று பலர் பலவிதமாகக் கூறினர். ஆனால் தெனாலிராமன் மட்டும் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.

"என்ன ராமா, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாயே ஏன்?" என்று கேட்டார் மன்னர்.

"மன்னா, பழத்தைக் கண்டால் பிடுங்கியாவது தின்பது குரங்கின் இயல்பு. அதற்காக அதனை தண்டிப்பது சரியல்ல என்பது என் எண்ணம்" என்றான் ராமன்.

அதைக் கேட்ட மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "சரிதான். வரவர நான் எதைச் சொன்னாலும் எதிராகப் பேசுவதே உன் வழக்கமாகி விட்டது. உனக்கு ஒரு மாத காலம் அவகாசம் தருகிறேன். இந்தக் குரங்கைப் பழம் தின்னாத குரங்காக நீ மாற்றிக் காட்டு பார்க்கலாம். உடனடியாக நான் இதனை விடுதலை செய்து விடுகிறேன். உனக்கும் பரிசு தருகிறேன். இல்லாவிட்டால் குரங்கோடு சேர்த்து உனக்கும் பாதாளச் சிறைதான்" என்றார்.

"அப்படியே ஆகட்டும் மன்னா" என்று சொல்லிக் குரங்குக் கூண்டோடு தன் வீட்டிற்குப் புறப்பட்டான்.

"இனி ராமனுக்குப் பாதாளச் சிறைதான்" என எண்ணி தெனாலிராமனின் எதிரிகள் மகிழ்ந்தனர்.

சில நாட்கள் தான் உண்ணும் உணவை மட்டுமே குரங்கிற்கு அளித்து வந்தான் தெனாலிராமன். பிறகு ஒருநாள் அதற்கு ஒரு வாழைப்பழத்தை அளித்தான். ஆனால் அதற்குள் சிறிதளவு சுண்ணாம்பைக் கலந்திருந்தான். ஆர்வத்துடன் பழத்தைத் தின்ற குரங்கு நாக்கு வெந்து, கண்கள் கலங்கித் தவித்தது. மறுமுறை மிளகாய்ப் பொடி கலந்த மாம்பழத்தைத் தந்தான். குரங்கு அதை உண்டுவிட்டுத் தவித்தது. இதுபோலப் பழத்துக்குள் எதையாவது வைத்துக் குரங்குக்கு அளிப்பதும், அதைத் தின்ற குரங்கு தவிப்பதும் தொடர்ந்தது. நாளடைவில் எந்தப் பழத்தைக் கண்டாலும் குரங்கு அஞ்சி, பழங்கள் உண்பதை அறவே நிறுத்திவிட்டது. பலமுறை சோதித்துப் பார்த்த தெனாலிராமன், திருப்தியடைந்து, மன்னர் குறிப்பிட்ட நாளில் குரங்குடன் அரண்மனைக்கு வந்தான்.

"ராமா, உன் குரங்கு பழத்தைத் தின்னுமா தின்னாதா?" என்றார் மன்னர் கிண்டலாக. அதற்குத் தெனாலிராமன், "மன்னா, நீங்களே சோதித்துப் பாருங்களேன்" என்றான்.

வீரர்களில் ஒருவன் ஒரு வாழைப்பழத்தை எடுத்து குரங்கின் முன் நீட்டினான். அதுவோ சட்டை செய்யாமல் எங்கோ பார்த்தது. அதனால் அவன் பழத்தைக் கூண்டுக்குள் போட்டான். உடனே பயம் மற்றும் ஆத்திரத்துடன் குரங்கு அந்தப் பழத்தை எடுத்து வெளியே எறிந்தது. ‘கீச், கீச்' என்று கத்தியது. மன்னருக்கு ஆச்சரியம் தாளவில்லை.

மற்றொரு வீரன், மாம்பழத்தை எடுத்துக் குரங்கின் முன் நீட்டினான். குரங்கு அதைப் பிடுங்கி எறிந்ததுடன் அங்கும் இங்கும் துள்ளியது. பின் அவன் கையை ஆத்திரத்துடன் கடித்துக் காயப்படுத்தியது. மன்னர் திகைத்துப் போனார். அவையினரும், ராமனின் எதிரிகளும் வாயடைத்துப் போயினர்.

"ராமா, என்ன இது ஆச்சரியம்?! குரங்கேற்காத பழமுண்டோ? எப்படி இதனைச் சாதித்தாய்?" என்றார் மன்னர் வியப்புடன்.

"மன்னா, நான் எப்படி இதனைச் சாதித்தேன் என்பதெல்லாம் உங்களுக்கு எதற்கு? நீங்கள் சொன்னபடி குரங்கைப் பழம் தின்னாத குரங்காக மாற்றிக் காட்டிவிட்டேன். அவ்வளவுதான். இயல்பை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் முயன்றால் முடியும் என்பதைக் காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்தமைக்கு மிக்க நன்றி" என்றான் தெனாலிராமன்.

அரவிந்த்

© TamilOnline.com