மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: வேடன் பிடிபட்டான்
"போரில் ஆயுதமெடுக்க மாட்டேன்" என்று தன்னிடம் போருக்காக உதவிகேட்டு வந்திருந்த துரியோதனிடத்திலும் அர்ஜுனனிடத்திலும் கண்ணன் சொன்னபோதிலும், யுத்தத்துக்காகப் பாண்டவர்களும் துரியோதியனாதியர்களும் தயாராவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிலிருந்தே கண்ணன் போர் வரத்தான் போகிறது என்பதை நிச்சயித்துக்கொண்டு, அதற்கான முன் தயாரிப்புகளை அப்போதே தொடங்கியிருந்தான் என்று, துரோண பர்வத்தில் அவன் அர்ஜுனனிடத்தில் பேசுவதை வைத்து அனுமானிக்க முடிகிறது.

இந்தக் குறிப்பிட்ட இடம், கடோத்கசனுடைய பராக்கிரமம் வளர்ந்துகொண்டே போய், இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று துரியோதனன் கருதி, கர்ணனை வற்புறுத்தி அவன்மேல் இந்திரனிடமிருந்து பெற்ற சக்தியாயுதத்தைப் பிரயோகித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய பதினான்காம் நாள் நள்ளிரவில் நடைபெற்ற யுத்த சமயத்தில் வருகிறது. பதினான்காம் நாள் சூரிய அஸ்தமன சமயத்தில் ஜயத்ரத வதம் நடைபெற்ற பிறகு, வழக்கம்போல் போர் நிறுத்தப்படாமல், மறுநாள் அதிகாலை வரையில் தொடர்கிறது. நள்ளிரவில் கடோத்கசன், சக்தியாயுதத்தால் இறக்கிறான். இங்கே, ஒரு வியப்பான உண்மையைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பு "அரசரே! அந்தக் கடோத்கசன், சத்துருவினுடைய நாசத்தின் பொருட்டு இந்தக் காரியத்தையும், விசித்திரமும் மிக்க ஆச்சரியமுமான வேறு காரியத்தையும் செய்தான்; அந்த ஸமயத்தில் சக்தியினால் உயிர்நிலை பிளக்கப்பட்ட அவன், மலைபோலவும் மேகம் போலவும் பிரகாசிக்கின்ற (உருவத்துடன்) விளங்கினான். பிறகு அந்த ராக்ஷஸேந்திரனான கடோத்கசன் பிளக்கப்பட்ட தேகமுள்ளவனாகவும் சரீரம் அசைவற்றவனாகவும் நாவை இழந்தவனாகவும் பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டு உயிரை விட்டு ஆகாயத்திலிருந்து தலைகீழாக விழுந்தான்..... கொல்லப்பட்டவனாயிருந்தும், தன் தேகத்தினாலேயே உமது சைனியத்தினுடைய ஒரு பாகத்தை இவ்வாறு நாசம் செய்தான்" என்று குறிப்பிடுகிறது, (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 5 துரோண பர்வம், கடோத்கசவத பர்வம், அத்தியாயம் 180, பக்கம் 723). பல பதிப்புகளில் கடோத்கசன் விழுகையில், "உன் உருவத்தைப் பெருக்கிக்கொண்டு விழு" என்று பீமன் சொன்னதாக வருவதுபோல் இல்லாமல், உருவத்தைப் பெருக்கிக்கொள்ள கடோத்கசன், கடைசி நிமிஷத்தில் தானே முடிவெடுத்ததாகத்தான் மூலம் சொல்கிறது. பீமன் அவ்வாறு சொன்னதற்கான வாக்கியங்கள் கும்பகோணம் பதிப்பின் மொழிபெயர்ப்பில் இல்லை.

கடோத்கச வதம் நிகழ்ந்ததுமே, பாண்டவ சைனியம் முழுவதும் துக்கக்கடலில் ஆழ, அந்தச் சமயத்தில் "வாஸுதேவரோ மகிழ்ச்சி மிக மேலிட்டு, தம்மவருக்கு வருத்தத்தை உண்டுபண்ணுகிறவர் போல் ஸிம்மநாதம் செய்தார்.... பல்குனனைக் கட்டிக் கொண்டார்.... ஸந்தோஷத்தோடு காற்றினால் அசைக்கப்பட்ட மரம்போலக் கூத்தாடினார்" என்றெல்லாம் பாரதம் விவரித்துக்கொண்டே போகிறது (மேற்படி, பக்கம் 724). அர்ஜுனன் குழப்பம் எய்தினான். கண்ணனைப் பார்த்து, "கண்ணா! இப்போதுதான் நம் குமரன் மரித்திருக்கிறான். பகைவர்கள் நாசமானதுபோல இந்தச் சமயத்தில் நீ இப்படி நடந்துகொள்வது விபரீதமாக அல்லவா இருக்கிறது" என்று கேட்கவும், கண்ணன் விளக்கத் தொடங்குகிறான். நீண்ட அந்த விளக்கத்தின் போதுதான் நாம் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள செய்தி—பல காரணங்களில் சிலவாக—வெளிப்படுகிறது.

நூற்றிருபத்திரண்டாவது அத்தியாயத்தின் (பக்கம் 727) தொடக்கத்தில் கண்ணனுடைய பேச்சில் இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறது: "ஜராஸந்தனும் சேதிராஜனும் மிக்க பலசாலியும் நிஷாதபுத்திரனுமான ஏகலவ்யனும் முந்தியே கொல்லப்படாமலிருந்தால் இப்பொழுது (நமக்குப்) பயத்தைச் செய்பவர்களாயிருப்பார்கள்." இந்தக் குறிப்பிட்ட மூவரில் ஜராசந்தனை வதைத்தவன் பீமன்; ராஜசூய யாகம் தொடங்குவதற்கு முன்னர்—அதாவது யுத்தத்துக்குக் குறைந்தது பதினான்கு வருடங்களுக்கு முன்னர். அதற்குச் சில மாதங்கள் கழித்த பிறகுதான் ராஜசூய யாகத்தின் சமயத்தில், முதல் மரியாதையைப் பெறத்தகுந்தவர் யார் என்று கேட்ட சிசுபாலன் (சேதிராஜன்) கிருஷ்ணனால் வதைக்கப்படுகிறான். ஆக, "இப்போதிருந்திருந்தால் நமக்குப் பயத்தைச் செய்திருப்பார்கள்" என்ற கண்ணன் குறிப்பிடும் இருவரும் கொல்லப்பட்ட சமயத்தில், யுத்தத்துக்கான முகாந்திரம் கூட உருவாகியிருக்கவில்லை.

இந்த யாகம் முடிந்து, ஊருக்குத் திரும்பிய துரியோதனன் பொறாமைப்பட்டு, சகுனி, ஜயந்தம் என்ற ஊரில் மண்டபம் கட்டுவிக்கச் செய்து, சூதாட்டத்துக்குச் சம்மதிக்குமாறு தருமபுத்திரனை நிர்பந்தப்படுத்தி, அவர்களை வனவாசமும் அக்ஞாத வாசமுமாக பதின்மூன்று வருட காலம் கழிக்கச் செய்து, இந்தக் கால கட்டம் கழிந்து, பாண்டவர்கள் விராடனுடைய உபப்லாவ்யத்தில் ஒரு வருடம், மூன்று மாதம், இரண்டு நாள் தங்கியிருந்து (காலக் கணக்குக்குப் பார்க்க) சுருக்கமாக, யுத்தத்துக்குச் சுமார் 14 ஆண்டுகளுக்குச் சற்று மேலாக கழிவதற்கு முன்னரே இந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் ஜராசந்தனைக் கொன்றது பீமனாயினும், யாகத்துக்கு முன்னர் அவனைக் கொல்லவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தவன் கண்ணனே. (இங்கே இன்னொன்று. ஜராசந்த வதத்துக்கு, ஒரு புல்லை இரண்டாக வகிர்ந்து மறித்துப் போட்டு, பீமனுக்குக் கண்ணன் சமிக்ஞை காட்டியது மூலத்தில் இல்லை. ராமகிருஷ்ண மடத்துச் சுருக்கப் பதிப்பில், இந்தப் பகுதி மிகைப் பாடமாகக் காட்டப்பட்டுள்ளது. நமக்கு எவ்வளவு தவறான தகவல்கள் தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவும் இன்னோர் உதாரணம்.)

ஆயிற்றா. ஏகலவ்யனும் ஜராசந்தனும் ஒன்றாக துவாரகையின்மேல் படையெடுத்து வந்ததாக இணையத்தில் சில தளங்கள் சொல்கின்றன. அவ்வாறாயின், இந்தப் படையெடுப்பின் போது ஜராசந்தன் உயிருடனிருந்திருக்க வேண்டும். அதாவது, ராஜசூய யாகத்துக்குச் சில/பல ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றிருக்கலாம். ஏகலவ்யன், கிருஷ்ணனை இரண்டுமுறை எதிர்த்துப் போரிட்டதாக இங்கே சொல்லப்படுகிறது.

ஆனால், யாரென்ன சொன்னாலும், நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பதினான்காம் நாள் நள்ளிரவு யுத்தத்தின்போது கண்ணன் அர்ஜுனனிடத்தில் பின்வருமாறு சொல்கிறான்: "உன் நன்மைக்காகவே அவன் (ஏகலவ்யன்) யுத்தமுனையில் என்னால் கொல்லப்பட்டான்" (பக்கம் 729). ஆக, ஏகலவ்யனைக் கொன்றவன் கண்ணன். அவன் கொல்லப்பட்டது யுத்தமுனையில். நாம் சென்ற இதழில் குறிப்பிட்டுள்ள தளங்களைச் சொல்வதைப் போல், கண்ணன் ஏகலவ்யனை முதுகில் குத்திக் கொல்லவில்லை; நேருக்கு நேரான யுத்தத்தில், போர்முனையில் கொல்லப்பட்டிருக்கிறான். இப்படி, அச்சத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடிய இம்மூவரும் ‘தனித்தனியாகக் கொல்லப்பட்டதாக’வும் கண்ணன் சொல்கிறான். ஆகவே மூவருடைய வதமும் வெவ்வேறு சமயங்களில், காலகட்டங்களில் நடைபெற்றிருக்கின்றது. ஏகலவ்யன், ராஜசூய யாகத்துக்கு வந்திருக்கிறான். சூதாட்டக் களத்தில் இவன் தென்படவில்லை; கண்ணனும் தென்படவில்லை. சூதாட்டம் நடைபெற்ற சமயத்தில் கண்ணன், ஸால்வ ராஜனுடன் போரில் ஈடுபட்டிருந்ததாக வனபர்வம், பதினான்காம் அத்தியாயத்தில் (கும்பகோணம் பதிப்பு, இரண்டாம் தொகுதி, வனபர்வம், பக்கம் 58) சொல்கிறான். ஆகவே, ஏகலவ்யனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடைபெற்ற யுத்தம், பாண்டவர் வனவாச காலத்தில்தான் நடந்திருக்க வேண்டும்.

இவ்வளவு பராக்கிரமசாலியான ஒருவனை நமக்கு என்வென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? வேடன்; பரம தரித்திரன்; அசக்தன்; துரோணரால் வஞ்சிக்கப்பட்ட பிறகு பறவை சுடக்கூட இயலாமல் போனவன்! என்பதாக.

மேற்கூறிய மூவர் இருந்திருந்தால் நமக்கு அச்சமூட்டியிருந்திருப்பார்கள் என்று கிருஷ்ணன் சொன்னாலும், அவர்கள் இருந்திருந்தால், அவர்களைக் களைவதற்கான வேறு உபாயங்களை அவனே உருவாக்கியிருந்திருப்பான் என்பதுதான் தெளிவு. ஏனெனில் போரில், பாண்டவர் பக்கத்துக்கு மறைமுகத் தலைவன் கண்ணனே. இந்தப் போர் கண்ணனுக்கும் துரியோதனாதியர்களுக்கும் நடந்த ஒன்றே. இதற்கான காரணங்களையும் காண்போம்.

அதற்கும் முன்னால் ஒன்று. திருதிராஷ்டிரனே மூத்த புதல்வன் என்பதனால், அவனுடைய மூத்த புதல்வனான துரியோதனனுக்கே முறைப்படி அரசுரிமை சென்றடைய வேண்டும் என்று பலர் வாதிடுகிறார்களே, அதன் வலு என்ன என்பதையும் சற்று அலசிவிடலாமா?

அடுத்த இதழில் அந்தப் பணியைத் தொடங்குவோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com