காவிரி மத்தியத்தில் அமைந்துள்ள பஞ்சாங்க க்ஷேத்திரங்களில் இரண்டாமிடம் வகிப்பது திருப்பேர்நகர் அப்பால ரங்கநாதர் ஆலயம். மற்றவை ஸ்ரீரங்கப்பட்டினம் (ஆதிரங்கன்), திருவரங்கம் (கஸ்தூரி ரங்கன்), திருக்குடந்தை (சாரங்கன்), திருவிந்தளூர் (பரிமளரங்கன்) என்பனவாகும். திருப்பேர்நகர் காவிரி, கொள்ளிடம் இடையே அமைந்துள்ளது. கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடியில் இருந்து பேருந்து போகிறது. பூதலூர் ரயிலடியில் இருந்தும் 'கோயிலடி' எனும் பெயர் கொண்ட இத்தலத்திற்குப் போகலாம். இத்தலத்தில் எம்பெருமான் எழுந்தருளுவதற்கு முன்பாகவே பிராட்டியார் எழுந்தருளி விட்டார். பிராட்டி முன்பே தோன்றியதால் ஸ்ரீநகர் என்றும் ஸ்ரீரங்கத்திற்கு அப்பாலுள்ள ரங்கநாதர் என்பதால் அப்பாலரங்கர் என்றும், ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருப்பதால் 'கோயிலடி' என்றும் இத்தலத்திற்குப் பெயர்கள் ஏற்பட்டன. பிரம்மாண்ட புராணம் இத்தலத்தின் பெருமைகளைப் பேசுகிறது. நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் போன்றோர் மங்காளாசாசனம் செய்துள்ளனர். மூலவர் நாமம் அப்பக்குடத்தான். தாயார் ஸ்ரீகமலவல்லி. தீர்த்தம்: இந்திர புஷ்கரணி, வடகாவிரி, பொன்னி நதி. தலவிருக்ஷம்: பலாச வனம். இது நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட, மோட்சப்பேறு பெற்ற திவ்யதேசமாகும். இத்தலப் பெருமாளைச் சேவித்தால் எமபயம் நீங்கும். திருமணம், புத்திர பாக்யம் கிடைக்கும்.
ஒரு சமயம் உபரிச்ரவஸ் என்ற மன்னன் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு வருந்தும்போது அவனது குலகுரு சர்வ பாபமும் நீங்க, புண்ணியம் கிடைக்க தவம் செய்ய பலாசவனமே சிறந்தது என்று கூறினார். மன்னனும் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான். அவன் முன்பு சிவபெருமான் தோன்றி தோஷம் நீங்க மந்திரம் உபதேசித்தார். தினம் மஹாவிஷ்ணுவை மனதில் நினைத்து நியமத்துடன் பூஜை செய்யும்படியும், அந்தணர்களுக்கு தினமும் உணவளிக்கவும் ஆணையிட்டார். அவனும் அவ்வாறே செய்து வந்தான். திருமால், ஸ்ரீதேவியின் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டவும், பக்தர்களை சோதிக்கவும் மோட்சம் அளிக்கவும் இத்தலத்தில் எழுந்தருளினார்.
திருமால் ஒரு வயோதிக அந்தணராக உருக்கொண்டு குரல் நடுங்க வேதமந்திரம் உச்சரித்தவாறு கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியில் மன்னன்முன் தோன்றினார். மன்னனும் அவரைப் பணிந்தான். பெரியவரும், "மன்னா எனக்குப் பசி காதை அடைக்கிறது உணவுக்கு ஏற்பாடு செய்" என்றார். அவனோ, "பெரியவரே அந்தணர்கள் நீராடச் சென்றுள்ளனர். அவர்கள் அனுஷ்டானங்கள் முடிந்து வந்ததும் பூஜையை முடித்துவிட்டு உணவு சாப்பிடலாம். நீங்களும் உணவை உண்டுவிட்டு வாருங்கள்" என்றான். உடனே பெரியவர், "என்னைக் காக்கச் சொல்வது உசிதமில்லை. பசித்தவனுக்கு உடன் உணவளிக்க வேண்டும் என்று வேதம் கூறுவதை நீ அறியாதது ஏன்?" என்று சொல்லி எண்ணற்ற வேதியர்களாக உருமாறிக் காட்டினார்.
உடனே மன்னன் அவரை அமர்த்தி உணவளிக்கப் பலநூறு பேருக்கான உணவை அவர் ஒருவர் மட்டுமே உண்டு, "என் பாதி வயிறுதான் நிறைந்தது" என்றார். மன்னனோ கண்களில் கண்ணீர் மல்க, "மீண்டும் உணவளிக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றான். பகவானோ, "எனக்கு அசதியாக உள்ளது. நான் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்" என்றார். பாதி பசியில் உறங்குவது தகாது என மன்னன் மறுத்து மன்றாடினான்.
பெரியவர் உருவில் வந்த பகவானோ, "எனக்கு உணவு வேண்டாம். நெய்யினால் செய்யப்பட்ட அப்பம் மட்டும் போதும். நான் இளைப்பாறிய பின்பு தா" என்றார். மன்னனும் அவ்வாறே ஒப்பி அவர் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தான்.
மன்னன் அவ்விடம் விட்டு அகன்றதும், திருமகள் பெருமாளின் திருமார்பில் சேர்ந்தாள்.
மன்னனும் நெய்க்குடம் நிறைய அப்பத்தைக் கொண்டு வந்து பெரியவரை வேண்ட, பகவான் மகிழ்ந்து அதில் தனது வலக்கரத்தை வைத்து ஆசி கூறி ஏற்று, மன்னனுக்குத் திருக்காட்சி அளித்தார். 'அப்பக்குடம்' ஏற்றதால், மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க 'அப்பக்குடத்தான்' ஆனார். மன்னனுக்கும் மோட்சம் அளித்தார். மன்னனுக்கு மட்டுமல்ல; மார்க்கண்டேயனுக்கு சிரசில் தனது வலக்கரம் வைத்து "என்றும் சிரஞ்சீவியாக இரு" என்று வாழும் வரத்தைத் தந்தவரும் இவர்தான். அப்பக்குடத்தானைத் தொழுது அனைத்து நலன்களையும் பெறுவோம்.
சீதா துரைராஜ் |