திருலோக சீதாராம்
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பாரதி புகழ் பரப்பிய பாவலர் என்று பலவகைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருப்பவர் திருவையாறு லோகநாத சீதாராம் என்னும் திருலோக சீதாராம். ஏப்ரல் 1, 1917ல் தஞ்சையை அடுத்த திருவையாற்றில் லோகநாத சாஸ்திரிகள்-மீனாட்சியம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் சீதாராம். ஊர் பெயர், தந்தை பெயர் என இரண்டையும் இணைத்து பிற்காலத்தில் திருலோக சீதாராமாகப் புகழ்பெற்றார். இளவயதிலேயே தந்தையை இழந்தார். அதனால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே கற்க முடிந்தது. வேதம், சம்ஹிதை போன்றவற்றைக் கற்றுச் சிறிதுகாலம் புரோகிதர் தொழிலில் ஈடுபட்டார். ஆனால் அதில் ஈடுபாடில்லாததால் பத்திரிகை மற்றும் எழுத்துத் துறையில் நுழைந்தார். ஆற்காட்டுத் தூதன் என்ற இதழில் சிலகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் 'சிவாஜி' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். தி. ஜானகிராமன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற எழுத்தாளர்களை அதில் எழுதவைத்தார். சிவாஜி கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் வெளிவந்தது. கலை, இலக்கியத் திங்களிதழான இதில் கு.ப.ரா., எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, அரங்க சீனிவாசன் என பல தலைசிறந்த படைப்பாளிகள் பங்களித்துள்ளனர். கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதி, எழுத்தாளராகப் புகழ்பெற்றது சிவாஜி மூலம்தான்.

சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் திருலோக சீதாராம். அவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழின்மீது பெருவிருப்புக் கொண்டிருந்தார். இலக்கிய நுகர்ச்சிக்காக 'தேவசபை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பழம்பெரும் நூல்களிலுள்ள உண்மைகளை உலகுக்கு உரைப்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். அதற்காகத் தமிழ்ச்சான்றோர் பலரையும் அழைத்துவந்து சிறப்புரையாற்றச் செய்தார். புதுமைப்பித்தன், ஜானகிராமன் இவர்களுடன் எஸ்.எஸ். வாசன் உள்ளிட்ட பலரும் அதில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். பாரதியாரின் பாடல்கள் சீதாராமை மிகவும் ஈர்த்தன. தம்மை பாரதிக்கு புத்திரனாகவே வரித்துக் கொண்டவர், ஆண்டுதோறும் அவருக்கான கர்ம காரியங்களைச் செய்து வந்ததுடன், தாம் செல்லும் இடந்தோறும் பாரதியின் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி அவர் தம் புகழைப் பரப்பினார். பாரதி குடும்பத்தினர்மீது மிகுந்த அன்பு பூண்டிருந்ததுடன் பாரதி மறைவுக்குப் பின் கடையத்தில் வசித்துவந்த அவர்களைத் திருச்சிக்கு வரவழைத்து தாமே அவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்தார். தம்மாலியன்ற உதவிகளைச் செய்து அக்குடும்பத்தைப் பராமரித்தார். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி திருலோக சீதாராமின் மடியிலேயே தலைவைத்து உயிர் நீத்தார் என்பதிலிருந்தும், தனது மூத்தமகளின் திருமணத்தின்போது தங்கம்மாள் பாரதிக்குத்தான் அவர் முதல்மரியாதை செய்தார் என்பதிலிருந்தும் பாரதிமீதும், பாரதி குடும்பத்தினர் மீதும் சீதாராம் கொண்டிருந்த அன்பு விளங்கும்.

திருலோக சீதாராம் மன, இத மாச்சரியங்கள் அற்றவர். நாத்திகர்கள் பலரும் அவரது நண்பராக இருந்தனர். அவர்மீது பெருமதிப்புக் கொண்டிருந்தனர். அவர்களுள் அறிஞர் அண்ணாவும் ஒருவர். அண்ணாவைப் பற்றி சீதாராம்,

அண்ணாவென்றே இளைஞர்
அன்போடரு கணைவார்
பண்புடைய சொல் ஒன்றாற்
பச்சையன்பு பாய்ச்சிடுவார்....


என்று எழுதியிருக்கும் பாடல் குறிப்பிடத்தகுந்தது. அதுபோலக் கவிஞர் பாரதிதாசனும் திருலோக சீதாராமின் மிக நெருங்கிய நண்பராக இருந்தார். திருலோக சீதாராம் பற்றி அவர்,

இவனுயர்ந்தான் அவன் தாழ்ந்தான் என்னும்
இன வேற்றுமை ஓர் அணுவும் இல்லான்
எவன் பொதுவுக்கு இடர்சூழ்ந்தான்
அவன் தாழ்ந்தான் அஃதில்லான் உயர்ந்தான் என்று
நுவல்வதிலே திருலோகன் அஞ்சாநெஞ்சன்


என்றிவரைப் புகழ்ந்துரைத்திருக்கிறார்

பாரதிதாசனுக்குப் பொற்கிழி அளிக்கும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர் திருலோக சீதாராம்தான். அதுபோல சாதாரண கிராமத்து இளைஞராக இருந்த சுரதாவின் கவித்திறனை இனங்கண்டு அவருக்கு வானொலியில் கவிதை படிப்பது உட்பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தம் இதழில் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையை முதன்முதலில் தன் சிவாஜி இதழில் வெளியிட்டவரும் திருலோக சீதாராம்தான். வாலியைக் கவிஞர் ச.து. சுப்ரமண்ய யோகியாரிடமும் திரு கி.வா.ஜ. அவர்களிடமும் அறிமுகப்படுத்தியவர் இவர்தான் என வாலி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். உதவி செய்வதையே நோக்கமாகக் கொண்டு எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த திருலோக சீதாராமை "திருலோக சஞ்சாரி" என்று பாராட்டியுள்ளார் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

'சிவாஜி'யைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூரிலிரிந்து 1942ல் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் 'கிராம ஊழியன்' இதழைத் துவக்கினார். அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் திருலோக சீதாராம். ஆரம்ப காலத்தில் அரசியல் பத்திரிகையாக இருந்த கிராம ஊழியன் காலப்போக்கில் மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாறியது. கு.ப.ரா.வின் எழுத்தால் ஈர்க்கப்பட்ட திருலோக சீதாராம், அவரை கிராம ஊழியன் இதழின் கௌரவ ஆசிரியராக நியமிக்க ஏற்பாடு செய்தார். கு.ப.ரா.வின் காலம்முதல் அவ்விதழ் மாதமிருமுறை வெளிவரத் தொடங்கியது. கு.ப.ரா.வின் மறைவுக்குப் பின் வல்லிக்கண்ணனின் எழுத்துத்திறனை அறிந்து அவரை கிராம ஊழியனுக்குத் துணையாசிரியராகக் கொண்டுவந்து சேர்த்தார். தமிழிலக்கிய வரலாற்றில் 'கிராம ஊழியன்' இதழின் பங்கு மகத்தானது. தன் நண்பர் தி. ஜானகிராமனை கிராம ஊழியனுக்கு எழுதவைத்தார். புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, ஈழத்துக் கவிஞர்களான நாவற்குழியூர் நடராஜன், சோ. தியாகராஜன், க.இ. சரவணமுத்து ஆகியோரின் கவிதை, கட்டுரைகளையும் கிராம ஊழியன் வெளியிட்டது. அதில்தான் புதுமைபித்தன் 'வேளூர் வெ. கந்தசாமி கவிராயர்' எனும் பெயரில் "ஓஹோ உலகத்தீர் ஓடாதீர்" என்னும் புகழ்மிக்க தம் அங்கதக் கவிதையை எழுதினார்.

திருலோக சீதாராமின் இலக்கியத் தேர்ச்சிக்கு ஓர் அத்தாட்சியாக அமைந்தது 'இலக்கியப் படகு' என்கிற அவரது தொகுப்பு. 'சிவாஜி' இதழில் இவர் எழுதிய முக்கியமான கட்டுரைகள் அந்நூலில் தொகுக்கப்பட்டன. இவர் திறன் கண்ட எஸ்.எஸ். வாசன் ஆனந்த விகடனில் இவரைத் தொடர் எழுதப் பணித்தார். காத்திரமான அக்கட்டுரைகள் அவருக்குப் புகழைச் சேர்த்தன. பின்னர் அவை தொகுக்கப்பட்டு 'புதுயுகக் கவிஞர்' என்ற தலைப்பில் நூலாகியது. இது தவிர்த்து பல தனிப்பாடல்களை எழுதியுள்ளார். 'குருவிக்கூடு', 'கந்தர்வ கானம்', 'உடையவர்' போன்ற நீள்கவிதைகளையும் எழுதியுள்ளார். கந்தர்வ கானத்தைத் திருலோக சீதாராமின் நண்பர் டி.என். ராமசந்திரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 'கவிஞர் அச்சகம்' என்ற அச்சகத்தை நிறுவி அதன்மூலம் நல்ல நூல்களை வெளியிட்டார். இளையோரை ஊக்குவித்தார். பத்திரிகை, அச்சகப் பணிகளிலும், தேசிய இயக்க நற்பணிகளிலும் தம் சொத்துக்களை இழந்தார் என்றாலும் அது குறித்துக் கவலை கொள்ளாமல் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தார். தேசிய இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார். விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததுடன், அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'மனுதர்ம சாஸ்திரம்' குறிப்பிடத்தகுந்த நூலாகும். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ஜெர்மானிய நாவலை 'சித்தார்த்தன்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். தெலுங்கு ஓரங்க நாடகங்களைத் தமிழில் பெயர்த்தியிருக்கிறார்.

சுயம்புவாக தம்மைத் தாமே வளர்த்துக் கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்த திருலோக சீதாராம், ஆகஸ்ட் 23, 1973 அன்று தன் 57ம் வயதில் காலமானார்.

கூட்டிப் பெருக்கிக்
கழித்து வகுத்தும்
கணக்கறியாப் பாட்டில்
படுதுயராயின ஏதும்
பகுத்தறியாது
ஏட்டில் பெருக்கி
எழுதிய எல்லாம்
இலக்கியமாய்ப்
போட்டுவைப்போம்.
இது போதும்.
இதுவே நாம் புரிதவமே!


- திருலோகசீதாராம்

பா.சு. ரமணன்

© TamilOnline.com