விடைபெற்றுச் செல்லும் விருந்தாளி
ஒரு பெண்ணின் வாழ்வில் பூப்பெய்திய காலம் முதல் மாதவிடாய் தவறாமல் மாதாமாதம் வரும் விருந்தாளி. வராமல் போனால் கவலை உண்டாக்கும், வந்த பின்னர் உடலில் சோர்வுண்டாக்கும்; இந்த விருந்தாளி 50 வயதை நெருங்கும்போது, விடைபெற்றுச் சென்றுவிடும். ஒரு சிலருக்குச் சற்று முன்பின்னாக இது நிகழலாம். அவரவர் குடும்ப வரலாற்றுப்படி, தாய் அல்லது சகோதரிகளுக்கு எந்த வயதில் மாதாவிடாய் நின்றதோ கிட்டத்தட்ட அதே வயதில் இது நிகழக்கூடும். மாதவிடாய் சட்டென்று நின்றுபோகும் அதிருஷ்டம் பல பெண்களுக்கு உண்டு. ஆனால் பெரும்பாலானோருக்கு இது பல உபத்திரவங்களைச் செய்துவிட்டுப் பிரியாவிடை பெற்றுச் செல்லும். இந்தத் தொல்லைகள் 40 வயது முதல் ஆரம்பமாகலாம். ஐந்து வருட காலம்வரை நீடிக்கலாம். இந்தக் காலகட்டத்தை ‘Perimenopause’ என்று மருத்துவ ரீதியில் சொல்வோம். மாதவிடாய் வராமல் முழுதாக ஒரு வருடம் ஆனபின்னரே மாதவிடாய் நிற்றல் (Menopause) என்று சொல்வோம்.

அறிகுறிகள்
* மாதவிடாய் முன்னுக்குப்பின் முரணாக வருதல்: ஒரு சிலருக்கு 3 வாரத்திற்குள் வரலாம். இன்னும் பலருக்கு 45 அல்லது 50 நாட்கள் தள்ளி வரலாம். 3-5 நாட்கள் இருக்கும் சீரான உதிரப்போக்கு ஒருவாரம் அல்லது 10 நாட்கள் நீடிக்கலாம்.
* தூக்கமின்மை
* அதிகப் படபடப்பு
* சோர்வும், சோகவுணர்வும் பெருகுதல்
* உடல் அடிக்கடி சூடாகப் போதல் (Hot Flashes)
* இரவுநேரத்தில் உடல் வியர்த்துப் போதல் (Night Sweats)
* தலைமயிர் கொட்டுதல், தலைமயிர் மெலிதல்
* பெண்குறி வறண்டுபோதல்
* புணர்ச்சியில் ஆர்வம் குறைதல்
* அடிக்கடி சிறுநீர் கழிக்க நேருதல்
* மார்பகங்கள் சுருங்குதல்

இந்த அறிகுறிகள் எல்லாமே இருக்கலாம், ஒன்றிரண்டு இருக்கலாம், இவை வந்து வந்து போகலாம். இந்த அறிகுறிகள் சில மாதங்களில் அதிகமாகவும் சில மாதங்களில் குறைவாகவும் இருக்கலாம்.

காலாகாலத்தில் தானாக நின்று போகும் மாதவிடாய் தவிர வேறு காரணங்களால் மாதவிடாய் முன்கூட்டியே நிற்கலாம். மருத்துவக் காரணங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை (uterus) அகற்றிய பிறகும், சினைப்பை (Ovaries) இருக்குமேயானால் இந்த அறிகுறிகள் சில வருடங்களுக்கு நீளலாம். சினைப்பை முற்றிலும் முட்டை உருவாகும் பணியை நிறுத்திய பின்னரே இவை நிற்கும். புற்றுநோய் மருந்துகளும் மாதவிடாயை உண்டாக்கலாம். ஒரு சிலருக்கு 40 வயதிற்கு முன்னரே சினைப்பை வேலை செய்வது நின்று போய்விடலாம். இதை Premature ovarian failure என்பார்கள்.

மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகும் இந்த அறிகுறிகள் 1-5 வருடங்களுக்கு பல்வேறு தீவிரத்தில் இருக்கலாம். மாதவிடாய் நின்றுபோனவர்களுக்குக் குறிப்பாகத் தூக்கமின்மையும் சிறுநீரக உபாதையும் தொடரும்.

பின்விளைவுகள்
வயதின் காரணமாக நடக்கும் சராசரி நிகழ்வுதான் இது என்ற போதும், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில பின்விளைவுகள் ஏற்படும். இவற்றை அறிந்துகொள்வது நல்லது.

* மாதவிடாய் நின்றபிறகு இதயநோய் வருவதற்கான சாத்தியக் கூறு அதிகரிக்கும்
* ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு அதிகரிக்கும்
* உடலின் எடை கூடலாம்
* எலும்புகள் வலுவிழக்கும். இதனால் எலும்பு முறிவு நிகழலாம். குறிப்பாக மெலிந்த தேகம் உடையவர்களுக்கு இந்த எலும்புத் தேய்மானம் அதிகமாகக் காணப்படும்

இதனால் சின்ன வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டால் ஹார்மோன்கள் மூலம் இந்தப் பின்விளைவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தீர்வு முறைகள்
மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதா என்பதை அறிந்து கொள்ள இரத்தத்தில் FSH, LH ஹார்மோன்கள் அளவைப் பரிசோதிக்கலாம். இவை அதிகமாகவும் இருக்கலாம். குறைவாகவும் இருக்கலாம். மாதவிடாய் முற்றிலும் நின்றபிறகு FSH LH, அதிகமாகவும் எஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருக்கும். பெண்ணின் உடலில் சுரக்கும் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதாலேயே மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன்களை மருந்தாக உட்கொண்டால் பல அறிகுறிகள் குறையும். இதைத் தகுந்த அளவு உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்த மாத்திரைகளுக்கும் பின்விளைவுகள் உண்டு. குறிப்பாக மார்பகப் புற்றுநோய் சாத்தியக்கூறு அதிகரிக்கும். SSRI (Effexor) என்று சொல்லப்படும் மனஅழுத்த மருந்தும் இந்த சூடாகும் தன்மைக்கும் (hot Flashes) தூக்கமின்மைக்கும் உதவும். Ambien, Lunesta போன்ற தூக்க மருந்துகள் தேவைப்படலாம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து தூங்காதபோது இவற்றை உட்கொள்ளலாம்.

எலும்புத் தேய்மானம் இருந்தால் அதற்கும் Fosamax, Actonel என்ற மருந்துகள் உள்ளன. கால்சியம் மற்றும் விடமின் D எடுத்துக் கொள்வது நல்லது. பால், தயிர் உண்பவர்களுக்கு அதிகமாகக் கால்சியம் தேவையில்லை. ஆனால் அவற்றை உண்ணாதவர்களுக்கு கண்டிப்பாகக் கால்சியம் தேவை.

மாதவிடாய் நிற்றல் வயதானதால் ஏற்படும் உடல்மாற்றம். இந்த இயற்கையான மாற்றத்தை ஏன் ஒப்புக்கொள்ளாமல் செயற்கையாக மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்று வாதிடுவோர் உண்டு. அவரவர் மனநிலைப்படி இதைக் கையாள்வது நல்லது.

ஒரு சிலர் தாவரம் மூலம் கிடைக்கும் ஹார்மோன்களை நாடுவர். இது சோயா, கொண்டைக் கடலை, உளுந்து போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. Bio identical Harmone என்ற மருந்துகளும் கிடைக்கின்றன. Black Cohosh என்ற மூலிகையும் உதவலாம் ஆனால் இவற்றிற்கு FDA அங்கீகாரம் கிடையாது.

யோகாசனத் தீர்வுகள்
சீராக முச்சு விட உதவும் பிரணாயாம, யோகாசன முறைகளும், மனத்தை ஒருநிலைப்படுத்தும் யோகாசன முறைகளும், தியான முறைகளும் இந்தக் காலகட்டத்தில் உதவும். இதற்கு அறிவியல் சான்றுகளும் உள்ளன.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23304220, http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18617867

புகைபிடிக்காமல் இருத்தல் இந்த உபாதை காலத்தில் உதவுகிறது. தினம் உடற்பயிற்சி செய்வதும் இந்தத் தொந்தரவுகள் அதிகமாகாமல் இருக்க உதவும். சோர்வாக இருக்கும்போதும் நடை பயில்வது நல்லது. குறைந்த எடைகளைக் கொண்டு எடைப்பயிற்சி செய்வது எலும்பு தேய்மானத்தைக் குறைக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு: mayoclinic.org

மங்கையராய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும். மாதவிடாய் படுத்தாமல் விலக இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தவம் செய்திருக்க வேண்டுமோ என்னவோ! மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற நம்பிக்கையோடு இயற்கை தரும் இந்த உபாதையைச் சமாளிப்போம்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com