சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்
அன்புள்ள சிநேகிதியே:

தங்களை அன்புள்ள அம்மா என்று கூப்பிடலாம் இல்லையா? எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. அப்பா என் சிறுவயதிலேயே இறந்து விட்டார். அம்மா இரண்டாவது மனைவி. நான் ஒரே பெண். பெரியம்மாமூலம் பல அக்கா, அண்ணன்மார்கள் உண்டு. ஆனால் தொடர்பில்லை. காரணம், பெரியம்மா உயிருடன் இருந்தபோதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உறவு ஏற்பட்டு ஒரு கட்டாயக் கல்யாணம் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவள் நான்தான். தனிமையிலேயே வளர்ந்தேன். அப்பா என்மீது மிகவும் உயிராக இருப்பார் என்று அம்மா சொல்லியிருக்கிறார். என்ன பிரயோஜனம்? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை.

காலேஜ் படிக்கும்போது எல்லாரையும்போல எனக்கும் காதல் ஏற்பட்டது. வேறு மதம். அம்மா எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள், வேண்டாம் என்று. அந்த வயதில் அம்மாவையே நறுக், நறுக்கென்று கேள்விகள் கேட்டிருக்கிறேன். அம்மாவுக்குத் தெரியாமல் மதம் மாறித் திருமணம் செய்துகொண்டேன், அப்போதாவது அவர்கள் வீட்டு மனிதருடன் எனக்கு உறவு கிடைக்குமென்று. பிறகு அம்மா காலில் விழுந்தேன். அம்மாவுக்கும் என்னைவிட்டால் ஆதரவில்லை. ஆகவே மறுபடி ஒன்று சேர்ந்தோம். இருந்தாலும் ஒரு வருடத்தில் அம்மா ஹார்ட் அட்டாகில் இறந்துவிட்டார்கள். நான் காரணமாக இருந்திருப்பேனோ என்ற குற்றவுணர்வு இப்போதும் இருக்கிறது. அம்மா போய் 15 வருடமாகி விட்டது. எனக்கு வயது 37.

தற்காலிகமாக அமெரிக்கா வந்து இங்கேயே தங்க முயற்சி எடுத்து இப்போதுதான் கிரீன் கார்டு கிடைத்தது. ஆனால் நிம்மதியாக இருந்தோம் என்று இல்லை. எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வு. பயந்து பயந்து செலவு பண்ண வேண்டியிருந்தது. சமீபத்தில் எனக்கு உடம்பு வேறு சரியில்லை. சதைக்கட்டி (Fibroid) இருந்து கருப்பையை அகற்றிவிட்டார்கள். எவ்வளவு வேதனைப் பட்டேன் என்று உங்களுக்குத் தெரியாது. குழந்தை பிறக்கும் வாய்ப்பும் போய்விட்டது. அந்த வெறுப்பில் சாமி கும்பிடுவதைக்கூட விட்டுவிட்டேன்.

என்னுடைய கணவருடைய அம்மா வந்து எங்களுடன் தங்கியிருக்கிறார்கள். அவர்களுடன் என் கணவர் சில மாதங்களாக அவர் மதத்தின் தொழுகையிடத்துக்குப் போக ஆரம்பித்தார். நான் மறுத்துவிட்டேன். என் மாமியார் என்னைத் தொந்தரவு செய்து அங்கே போகச்செய்தார். ஆனால் மனசு ஒட்டவில்லை. என் கணவருக்கு அங்கே நல்ல நண்பர்கள் கிடைக்க அவர் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தார். எனக்கு இதைப் பார்த்து என்ன தோன்றியதோ தெரியவில்லை, பக்கத்தில் உள்ள சிநேகிதிகளுடன் சேர்ந்து நான் என் மதக் கோவில்களுக்குப் போக ஆரம்பித்தேன். எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்ததுபோல் தோன்றியது. ஆனால் வீட்டில் என்னை வெறுக்க ஆரம்பித்தார்கள். இப்போது என் மாமியார் சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து என் கணவர் என்னை விவாகரத்து செய்யப் பார்க்கிறார். அவர்கள் மதத்தில் ஒரு பெண். அவர் விவாகரத்துப் பெற்றவர். அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். என் நிலைமையை யோசித்துப் பாருங்கள். நான் அவர்கள் வழிக்குப் போகாததால் எனக்கு இந்த தண்டனை. இப்போதுதான் கிரீன் கார்டு கிடைத்து ஒரு வேலையில் அமர்ந்திருக்கிறேன். "குழந்தை இல்லை என்று கவலைப்படாதே, நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்" என்று எனக்கு ஆறுதல் சொன்னவர், இப்போது மொத்தமாக மாறிப் போய்விட்டார்.

என் மாமியார் விசா முடிந்து இன்னும் சில நாள்களில் கிளம்பி விடுவார்கள். இருந்தாலும் அதற்குள் இருவரும் சேர்ந்து என்னை வெளியில் துரத்தி விடுவார்களோ என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. தூக்கம் வராமல் தவிக்கிறேன். உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறேன்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே:

என்னுடைய சிந்தனையின் போக்கில் சில கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

* நீங்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத் தெரிந்தவர். சோதனைகளைக் கண்டு பயம் தேவையில்லை.

* 15 வருடக் காதல் கணவர் திடீரென்று மனம் மாறினால், உங்கள் பங்கில், பழைய காதல் உணர்வுகளைக் கொண்டு வரக்கூடிய உபாயங்களை நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

* எப்போது, எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை இத்தனை வருடங்களாகச் செலுத்தினீர்களோ அதேபோல இரண்டு கோவில்களுக்கும் செல்ல முயற்சி செய்து பாருங்கள். மதமோ, கலாசாரமோ அதன் கோட்பாடுகளை அந்தந்தக் கோணத்தில் பார்க்கும்போது மனதின் இறுக்கம் குறைகிறது. அவருக்கோ, உங்களுக்கோ மதம் பெரிதாகப் பட்டிருந்தால் இத்தனை வருடங்கள் இந்த உறவு நீடித்திருக்காது. இப்போது அது பெரிதாகப் படும் காரணம், உங்கள் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தனிமையும், வெறுமையும்தான்.

* எப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* ரத்தத்தினால் ஏற்படும் உறவுகள் அருமைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இப்படி யோசித்துப் பாருங்கள். எல்லாரும் மிகமிக ஆசையாக பிரேமிப்பது கணவன்-மனைவி உறவுதான் இல்லையா? அது ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும், ஒருவர் மற்றொருவருக்காக உடலையும் உள்ளத்தையும் அர்ப்பணிக்கும்போது வாழ்க்கை இனிக்கிறது இல்லையா? ஆகவே பிறர் உங்களை நேசிக்கும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள்.

* இதை எழுதும்போது எனக்கு மிகச் சமீபத்தில் ஒரு vacationல் என் நண்பரின் குடும்பத்தில் ஏற்பட்ட அனுபவம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் தோழியின் மகன் உடற்குறைபாடு கொண்டவர். ஒரு நல்ல பெண் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். அந்த மருமகள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறாள். ஆனால் வீட்டு வேலை, சமையல் வேலை என்று எதுவும் செய்வதில்லை. கொஞ்சம் கறாராகவும் கண்டிப்பாகவும் இருக்கிறாள். அதுபற்றிக் கேட்டதற்கு அந்தத் தோழி சொன்னாள், "என் மகனுக்கு வேண்டியதை தொழில்முறையில் செய்து அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறாள் இவள். அதனால் என் மகனுக்கு நான் தாயாய் இருப்பதுபோல இவளுக்கும் தாயாய் இருந்துவிட்டுப் போகிறேன். அப்படியே எனக்கே முடியாமல் போகும்படி ஒரு காலம் வந்தால் எங்கள் உறவு மாறிப்போகும். எனக்கு அவள் தாயாய் மாறுவாள்" என்றாள். என்ன நம்பிக்கை! என்ன விவேகம் அந்தத் தாய்க்கு. எனக்கு மனம் சிலிர்த்துப் போய்விட்டது.

* யாருக்கு யார் வேண்டுமானாலும் எந்த உறவிலும் செயல்படலாம். சகோதரியாய் இருக்கலாம்; சிநேகிதியாய் இருக்கலாம். தாயாயும் இருக்கலாம். உங்கள் கணவருக்கு நீங்கள் எந்த உறவாகவும் செயல்படலாம். ஆகவே அன்புக்கும் உறவுக்கும் நீங்கள் ஏங்க வேண்டாம். நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.

* உங்கள் கணவருக்கு இது ஒரு தற்காலிக நிலைதான். கொஞ்சம் முனைந்து பாருங்கள். பார்வையை மாற்றித் திருப்பிப் பாருங்கள். அவர் திரும்ப வருவார். மாமியாரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com