அம்டி (மகாராஷ்டிரத் தயாரிப்பு)
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டு - 2 பல்
கொத்துமல்லி - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
கடலைப்பருப்பை வேகவிட்டுத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரைக் கொட்ட வேண்டாம். கடலைப்பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலை நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். அதில் உப்பு, மசாலா போட்டு கடலைப்பருப்பையும் வடித்த நீரையும் ஊற்றிக் கிளறவும். வெல்லம் சேர்த்து, கொதி வரும்போது 10 நிமிடம் வைத்து இறக்கிக் கொத்துமல்லி நறுக்கிப் போட்டுச் சாப்பிடலாம். கெட்டியாக இருக்க வேண்டும். கொஞ்சம் கொத்துமல்லியும் அரைக்கிறபோது சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சுவை அதிகமாய் இருக்கும். இது சாதம், பூரி, சப்பாத்தி எல்லாவற்றிற்கும் ஏற்ற சைட் டிஷ்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர்

© TamilOnline.com