மதுரை ஜி.எஸ்.மணி
தமிழின் தேர்ந்த கர்நாடக சங்கீத வித்வான் கலைமாமணி மதுரை ஜி.எஸ். மணி. தமிழிசைக்கடல், தமிழிசை வேந்தர், சங்கீத ரத்னா, சங்கீத ஜோதி, காயக ரத்னம், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது, மகாராஜபுரம் சந்தானம் விருது உள்ளிட்ட பலவற்றைப் பெற்றவர். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதத்தில் இவர் எழுதியிருக்கும் கீர்த்தனைகள் பரவலான வரவேற்பைப் பெற்றவை. அகில இந்திய வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளைத் தந்துள்ளார். திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனுக்குத் துணை இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். இவரது "கர்நாடக இசையும் சினிமாவும்" என்ற ஒலிப்பேழை பலரது பாராட்டுதலைப் பெற்ற ஒன்று. ஸ்ரீ அன்னைமீது டி.வி. கபாலி சாஸ்திரி இயற்றிய பாடல்களை 'Prayers' என்ற பெயரில் ஒலிப்பேழையாக்கி உள்ளார். தேவாரம், திருவாசகம், பஜனைகள் என்று பல ஒலிப்பேழைகள் தந்துள்ளார். உலகெங்கும் சென்று கர்நாடக இசை குறித்த செயல்வழி உரைகள் நடத்தி வருகிறார். தென்றலுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

கே: உங்களுக்குள் இசையார்வத்தைத் தூண்டியது யார்?
ப: என்னுடைய சகோதரிகள் பாபு ஐயங்கார் என்பவரிடம் இசை பயின்றார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அதில் ஆர்வம் வந்தது. நானும் கற்றுக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் அப்பாவிடம் சொல்லி, என்னைக் கூட்டிக்கொண்டு போய் சொல்லிக் கொடுத்தார். அவர்தான் எனக்கு வழிகாட்டி. ஆனால் இசையில் இன்ஸ்பிரேஷன் என்றால் ஜி.என். பாலசுப்பிரமணியம்தான். இந்துஸ்தானிக்கு ஓம்கார்நாத் தாகூர் மற்றும் உஸ்தாத் படே குலாம் அலிகான். நான் டெல்லியில் நான்கு வருடங்கள் வேலை பார்த்தேன். அப்போது இந்துஸ்தானி சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவது பழக்கமானது. கவ்வாலி, கஜல் என்று எல்லாவற்றுக்கும் போவேன். நண்பர்கள், உறவினர்கள் வீட்டுப் பஜனை என்று நிறைய அமெச்சூர் கச்சேரிகள் செய்திருக்கிறேன். 1957வரை டெல்லியில் இருந்தேன். 57ல் திருமணமானது. அந்த ஆண்டிலேயே பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் இணை இசையமைப்பாளராகச் சேர்ந்தேன். சில வருடங்களுக்குப் பின் மீண்டும் கர்நாடக சங்கீதத்திற்கே திரும்ப வந்து விட்டேன்.

கே: என்ன காரணம்?
ப: இசையார்வம்தான். சினிமாவில் நான் வேலை பார்த்தபோது கூட நிறையக் கச்சேரிகள் செய்திருக்கிறேன். கல்யாணம், ராம நவமி, உற்சவங்கள் என்று நிறையச் செய்தேன். மேலும் அப்போ சினி ஃபீல்ட் ரொம்ப டிமாண்டிங் ஆக இருந்தது. ஒருநாளைக்கு ஐந்து மணி நேரம் கூட ஓய்வு கிடைக்காது. எப்போதும் வேலைதான். எனக்கோ நிறையக் கச்சேரிகள் செய்ய ஆசை. அதனால் முழுக்கவே கர்நாடக சங்கீதத்துக்கு நேரம் ஒதுக்க, சினி ஃபீல்டை விட்டுக் கர்நாடக சங்கீதத்துக்கு வந்தேன்.

கே: நீங்கள் ஹிந்துஸ்தானியும் பாடுவீர்கள் அல்லவா?
ப: ஆமாம். அது எனக்கு மிகவும் பிடித்தமானது.

கே: நீங்கள் ஹிந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொண்டீர்களா?
ப: சங்கீதத்தைப் பொருத்தவரை எனக்கு ஒருமுறை கேட்டால் பாராயணம் ஆகிவிடும்.

கே: ஓ!
ப: அது இறைவன் கொடுத்த வரம். ஒருவர் பாடியதைக் கேட்டு அதேமாதிரி என்னால் திருப்பிப் பாட முடியும்.

கே: நல்லது. உங்களது குரல் வளத்திற்கும் கம்பீரத்திற்கும் என்ன காரணம், எப்படி அதைப் பராமரிக்கிறீர்கள்?
ப: அதற்கெல்லாம் யோகப் பயிற்சிதான் காரணம். கூடவே பிராணாயாமமும் செய்து வருகிறேன்.

கே: இன்றைய இளம் இசைக்கலைஞர்கள் தங்கள் குரலைப் பரமாரிக்க என்ன அறிவுரை தருவீர்கள்?
ப: பாடுவதில் முதிர்ச்சி வரும்வரை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். அது வந்துவிட்டால் அதன்பிறகு ஓரளவு சாதகம் போதும்.

கே: பல மொழிகளில் நீங்கள் 350க்கும் மேற்பட்ட சாகித்யங்களை இயற்றியுள்ளீர்கள். அதுபற்றிச் சொல்லுங்களேன்.
ப: எனக்கு 24 வயதாக இருக்கும்போதே நான் இம்முயற்சிகளை ஆரம்பித்துவிட்டேன். அப்போது எனக்குத் தோணுவதை, மனதில் வருவதை ஒரு நோட்புக்கில் எழுதிக் கொண்டிருப்பேன். அதைப் பாடிக் கொண்டிருப்பேன். அதைக் கேட்டுச் சிலபேர் நன்றாக இருக்கிறதே என்று வாங்கிக் கொண்டு போவார்கள். பாடுவார்கள். அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்ததுதான் அது. சொல்லப்போனால் என் கையில் ஒண்ணுமே இல்லை. தெய்வீக அருள்தான் இதற்கெல்லாம் காரணம்.

கே: உங்களுடைய முதல் சாகித்யம் எது என்று நினைவில் இருக்கிறதா?
ப: இருக்கிறது. "கயல் கண்ணியே" என்கிற தமிழ்ப் பாட்டு. ராகம், சக்கரவாகம். இரண்டாவது "ராஜ சுஹாமணி" என்கிற சம்ஸ்கிருதப்பாட்டு.

கே: உங்கள் பாடல்களெல்லாம் புத்தகமாக வந்திருக்கிறதா?
ப: தமிழில் வந்திருக்கிறது. 'தென்னவன் இசை உலா' என்பது பெயர். நேற்றுக்கூட சாயிபாபா கோயிலில் அதை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

கே: ஆடியோவிலும் வந்திருக்கிறதா?
ப: ஆமாம். அந்தப் புத்தகத்தோடேயே அதன் சி.டி.யும் கிடைக்கும். 41 பாடல்களையும் அதில் நானே பாடி விளக்கியிருக்கிறேன். ஏனென்றால் வெறும் நொடேஷனாகக் கொடுத்தால் சரியாக வராது, பாடுவதற்குக் கஷ்டமாக இருக்கும் என்பதால் நானே சுருதியெல்லாம் விளக்கி அதில் பாடியிருக்கிறேன். அதைக் கேட்டுப் பயிற்சி செய்து பாட முடியும்.

கே: இந்த புக்கை ஆன்லைனில் ஆர்டர் பண்ண முடியுமா?
ப: இல்லை. என்னுடன் தொலைபேசியில் பேசினால் கிடைக்க நான் ஏற்பாடு செய்யமுடியும். என் நம்பர்: 044 24913600; 044 24465697.

கே: அந்தக் காலத்தில் நீங்கள் கேட்ட சங்கீதத்திற்கும், இன்றைய சங்கீதத்திற்கும் என்ன வேறுபாட்டைப் பார்க்கிறீர்கள்?
ப: பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தில் எல்லாருமே மிக நன்றாகப் பாடுகிறார்கள்.

கே: இல்லை அந்தக் காலத்தில் எல்லாம் பாடல்களை நிறுத்தி நிதானமாகச் சொல்லித் தருவார்கள். ரெகார்ட் பண்ண முடியாது என்றெல்லாம் கட்டுப்பாடு இருந்தது இல்லையா?
ப: அந்தக்காலத்தில் எல்லாம் எங்களை அத்தனை ஆழம் வரும்வரை திருப்பித் திருப்பி பாடச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். டிரில் வாங்கி விடுவார்கள். அப்படி வரும்வரை நாம் பாடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

கே: ஆனால் இன்றைக்கு உள்ளவர்கள் ஒரே நாளில் ஒரு பாடலைக் கற்றுக் கொண்டு அடுத்த க்ளாஸ் வரும்போது அடுத்த பாடலுக்குப் போய் விடுகிறார்கள், இல்லையா? அதனால் ஏதாவது உங்களுக்கு குறைபாடுகள் தெரிகிறதா என்று கேட்கிறேன்.
ப: இசை என்பதே 'Slow and steady wins the race'தான். நேற்றுக் கச்சேரியில்கூட நான் முன்பே பாடிய பாடலைத்தான் பாடினேன் என்றாலும் நான் கருத்தூன்றி மிகவும் கவனமாகப் பாடவேண்டும். சரியான கட்டுப்பாட்டுக்குள் நம்மை வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பயிற்சி ரொம்ப முக்கியம். தினந்தோறும் சாதகம் செய்யத்தான் வேண்டும். நான் கச்சேரிக்கு வரும்போதுகூடக் காலையில் அரைமணி நேரம் சாதகம் செய்து விட்டுத்தான் வந்தேன்.

கே: நீங்கள் இசை சொல்லித் தருகிறீர்களா?
ப: ஆமாம். ஸ்கைப்பில் ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் நான் ரொம்ப தொடக்கநிலை சங்கீதம் சொல்லித் தருவதில்லை. கொஞ்சம் நன்றாகப் பாடுகிறவர்களாக இருந்தால் சொல்லிக் கொடுப்பேன். நான் கத்துக்க வறவாள்ட உங்களுக்கு சங்கீதம் கத்துக்கணுமா, இல்ல பாட்டுக்கள் கத்துக்கணுமான்னு கேட்பேன். ஏன்னா ஸ்கைப்பில் அடிப்படை சொல்லிக் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம். கேட்கறவாளுக்குப் பொறுமை இருக்காது. ஆனா கீர்த்தனைகள் அப்படி இல்ல. 300, 350 கிருதிகள் என்கிட்டேர்ந்து கத்துக்கலாம். இதற்கு என்னோட gsmani1008@gmail.com என்ற மெயில் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

கே: சினிமா இசை, கர்நாடக சங்கீதம் இதோட சினிமாவிலும் நடிச்சிருக்கீங்க. அதுபத்திச் சொல்லுங்க...
ப: 10, 15 படங்கள் செய்திருக்கிறேன். எல்லாம் சின்னச் சின்ன ரோல்கள். நான் ஏற்கனவே சினி ஃபீல்டில் இருந்ததால் சிலபேர் "இதைப் பண்ணிக் கொடுங்களேன் சார்" என்று கூப்பிடுவார்கள். கமல், விஜய்காந்த் எல்லாருக்கும், புதியவர்களுக்கும் தெரியும். "சார் நீங்க வாங்களேன்" என்பார்கள். நானும் 'சரி' என்று சொல்லி நடித்துக் கொடுப்பேன்.

கே: முதல் படம் என்ன, அந்த அனுபவம் எப்படி இருந்தது...
ப: ராஜா மலையசிம்மன் என்பது என் முதல் படம். ஆறுமுகம், காதலர்தினம், ஆளவந்தான்னு நிறைய படங்களில் சின்னச் சின்ன ரோல்கள் நடித்திருக்கிறேன். (பார்க்க: Facebook) ஆனால் எனக்கு இசைதான் முக்கியம் என்பதால் நிறைய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. தவிர்த்தே வருகிறேன். விலகியே இருக்கிறேன். எனக்கு ஆத்ம திருப்தியைத் தருவது இசைதான்.

கே: மெல்லிசை, கர்நாடக சங்கீதம் கஜல், ஹிந்துஸ்தானி, நடிப்பு, இசையமைத்தல் என்று நீங்கள் ஒரு ஆல்ரவுண்டராக இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் செய்ய எப்படி நேரம் கண்டுபிடிக்கிறீர்கள்?
ப: என்னுடைய சிந்தனை எப்போதும் இசை மற்றும் ஆன்மீகமாகத் தான் இருக்கும். இசைக்கு ஆன்மீகப் பக்கம் ஒன்றுண்டு. அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். மற்றதெல்லாம் பின்னால்தான். எனக்குக் கர்நாடக சங்கீதம் ரொம்ப முக்கியம். தியாகராஜ சுவாமிகள், தீக்ஷிதர் கிருதிகளை அவர்களது வாழ்க்கை வரலாறுகளை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறேன். அதிலும்கூட ஒரு வயலின், மிருதங்கம் வைத்து அதை நடத்துவேன். ஏழெட்டு தியாகராஜ கீர்த்தனைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் அவர் என்ன சொல்கிறார், ஏன் சொல்கிறார், ஏன் ராம நாமத்தைப்பற்றி அடிக்கடி சொல்கிறார் என்பதையெல்லாம் சொல்லுவேன். அதுபோல தீக்ஷிதரை எடுத்துக்கொண்டு, அவரது தேவி வழிபாடு, தேவி கீர்த்தனைகள், பிற சாஹித்யங்கள், சிறப்புகள், ஏன் எப்படி என்பதெல்லாம் அதில் பேசுவேன்.

கே: உங்களுடைய இஷ்டதெய்வம் எது?
ப: நான் மதுரையைச் சேர்ந்தவன். சின்ன வயதிலிருந்தே இஷ்டதெய்வம் மீனாட்சிதான். என்னுடைய பாடல்களில் 'ராஜ பூஜித' என்ற முத்திரை வரும். சம்ஸ்கிருதம், தெலுங்கில் வரும். தமிழில் வராது. ஏனென்றால் 'ராஜபூஜித' என்பது சம்ஸ்கிருத வார்த்தை. 'தென்னவன் இசை உலா' என்ற புத்தகத்தில் உள்ள ஒரு பாடலை இன்றைக்கு எல்லாரும் பாடுகிறார்கள். கல்யாண வீடுகளிலும் பாடுகிறார்கள். "தோரணப் பந்தலிலே" என்பது அந்தப் பாடல். நேற்றுக்கூட அதை நான் பாடினேன். இரண்டு வருஷத்துக்கு முன்பு இங்கு வந்திருந்தபோது ஒரு கல்யாணத்துக்குக் கூப்பிட்டிருந்தார்கள். போயிருந்தேன். அங்கே இந்தப் பாடலைப் பாடினார்கள். அதை இயற்றியது நான் என்பது அவர்களுக்குத் தெரியாது. நான் ஒண்ணும் சொல்லலை. மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் எட்டு, ஒன்பது பேர் சேர்ந்து அந்தப் பாடலைப் பாடினார்கள்.

கே: உங்களுடைய மறக்கமுடியாத நினைவுகள்...
ப: மறக்கமுடியாத நினைவுன்னா ஜி.என்.பி., ஆலத்தூர் பிரதர்ஸ், படே குலாம் அலிகான், ஓம்கார்நாத் தாகூர் போன்றவர்களுடைய கச்சேரிகளை எல்லாம் நேரில் கேட்டதுதான். இன்றைக்கும் அந்தக் கச்சேரிகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: ஒரு மகன். ஒரு மகள். மகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

கே: அவர்கள் இசை வழியில் வந்து கொண்டிருக்கிறார்களா?
ப: என்னுடைய இரண்டாவது பேத்தி ஸ்ரீநிதி மிகவும் நன்றாகப் பாடுவாள். 13, 14 வயதுதான் ஆகிறது. என்னிடம் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டிருக்கிறாள். நல்ல ஞானம் இருக்கிறது. அப்புறம் அவளுடைய விருப்பம்.

கே: இளைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: இசையைக் கற்பது குறித்து சந்தோஷம்தான். ஆனால் அதை ரொம்ப எளிமை என்று நினைக்கக் கூடாது. கச்சேரி பண்ணுகிறார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். வாழ்க்கையின் இறுதிவரையில் என்னுடனே இசை இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இசையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். அவசிய தேவையும் கூட. கச்சேரி செய்யும் கலைஞராக வேண்டும் என்றால் அதற்குப் பல காரணிகள் வேண்டும். அதற்கு உழைக்க வேண்டிய தினுசே வேற. பாடறதை எல்லாரும் பாடலாமே. ஆனா கர்நாடக சங்கீதம் பாடினால் அது மனசுக்கு ஒரு இதத்தையும், அமைதியையும், சந்துஷ்டியையும் கொடுக்கக்கூடியது. அது குழந்தைகளுக்கு இப்பப் புரியாது. அவா இப்பப் பாடிட்டு ஒரு பத்து வருஷம் கழிச்சுத்தான் புரியும். அது ஆறுதலும் ஆனந்தமும் தரும். ஆன்மீகமும் தரும், நீங்கள் விரும்பினால்.

மத்த மொழிக் கீர்த்தனைகள் பாடினாலும் தமிழ்க் கீர்த்தனைகளும் பாடணும். ஏனென்றால் தமிழ்ப் பாட்டைத்தான் நன்னா உணர்ந்து புரிஞ்சு பாட முடியும். ஏன்னா மத்த பாடல்லாம் பாஷை புரிந்தால்தான் புரியும். அவ்வளவு உணர்ந்து பாடமுடியாது. பாவத்துக்கு அங்கே இடமில்லை. "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்றால் உங்களுக்குப் புரியும். தமிழ்க் கீர்த்தனைகள் நிறையப் பாடணும்.

கர்நாடக சங்கீதம் என்றால் என்ன என்று கேட்டீர்கள் என்றால், தமிழிசைதான் என்பது என் கருத்து. தமிழிசைதான் இன்றைக்கு கர்நாடக சங்கீதமாக ஐக்கியமாகிறது. நான் தமிழ் வெறியன்னு (fanatic) சொல்லலாம்.

கே: உங்களுடைய கிருதிகள் வேற மொழிகளில்ல நிறைய இருக்கு, இல்லையா?
ப: ஆமாம். அதனால்தான் தமிழ்க் கீர்த்தனைகள் எல்லாரும் பாடற மாதிரி வரணுமே ஈஸ்வரான்னு வேண்டிண்டேன். அதுக்கு மீனாக்ஷி அருள் பண்ணினா. அதை வெறும் ஸ்ருதியோட எளிமையாகப் பாடி ரிகார்ட் பண்ணி வச்சிருக்கேன். அதைக் கேட்டு யாரும் கத்துக்கலாம். மத்தபடி எனக்கு பெரிய கூட்டம் வந்துதான் பாடணும்னோ, கச்சேரி பண்ணனும்னோ ஆசைப்படலை. அஞ்சு பேர் உட்கார்ந்தாக்கூட நான் கச்சேரி பண்ணுவேன். என்னை மதிச்சு ஒரு வயலின் வித்வான், ஒரு மிருதங்க வித்வான் என்கூட உட்காறார் அப்படிங்கும்போது அவங்களை கௌரவப்படுத்தணும் இல்லையா.

கே: நேற்றைய கச்சேரியில் 'சிதம்பரனை, திகம்பரனை' பாட்டு ரொம்ப நன்னாக இருந்தது.
ப: ஆமாம். அது "னை, னை"ன்னு முடியும். 'தென்னவன் இசை உலா'வில் இருக்கிறது.

கே: நன்றி.
ப: ரொம்ப சந்தோஷம்.

உரையாடல்: ஸ்ரீவித்யா ரமேஷ்

© TamilOnline.com