சிறுகதை, நாவல், நாடகம், தொலைகாட்சித் தொடர்கள், திரைப்படம் என எழுத்தின் எல்லாத் தளங்களிலும் தன் தனித்துவத்தை நிறுவி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் ம.வே. சிவகுமார். நெய்வேலியைச் சேர்ந்த இவர், இளவயதுமுதலே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். முதல் சிறுகதை 1979, டிசம்பர் 'கணையாழி' இலக்கிய இதழில் பிரசுரமாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, தினமணி கதிர், விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இவரது தனித்துவத்தை அடையாளம் காட்டின. இவரது 'முடிகொண்டான்' என்ற சிறுகதைக்கு 1982ன் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்தது. 1985ல் இவர் கல்கியில் எழுதிய 'உக்கிராணம்' சிறுகதைக்கும் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான பரிசு கிடைத்தது. கணையாழியில் இவர் எழுதிய 'கடைச்சங்கம்' குறுநாவல் பிரபல எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றது.
சிறுகதைகளோடு நாவலும் எழுதத் துவங்கினார். தினமணி கதிரில் இவர் எழுதிய 'வேடந்தாங்கல்' தொடர் இவரது எழுத்தாற்றலைப் பறைசாற்றியது. முதல் சிறுகதைத் தொகுதி 'அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்' 1986ல், ஜெயகாந்தனால் வெளியிடப்பட்டது. 1987ல் வெளியான 'நாயகன்' சிறுகதைத் தொகுதி சிறந்த சிறுகதைகளை உள்ளடக்கியதாக இருந்தது. வங்கி சார்பாக பல நாடகங்களை எழுதியும், நடித்தும், இயக்கியும் பரிசு பெற்றார்.
நாடகத்தைத் தொடர்ந்து திரைப்படத்துறையிலும் ஆர்வம் கொண்டார். சத்யஜித்ரே, மிருணாள் சென், ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றோரின் கலைப்படைப்புகள் இவரை ஈர்த்தன. திரைத்துறையில் சாதிக்கும் எண்ணத்தில் தீவிரமாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். திரு. முக்தா சீனிவாசனின் 'முக்தா ஃபிலிம்ஸில்' சேர்ந்து திரைப்படத்துறையில் பயிற்சிபெற்றார். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. கமல் இவரது படைப்பாற்றலை மேலும் ஊக்குவித்தார். இவரது 'வேடந்தாங்கல்' நாவல், கமலின் முன்னுரையுடன் வெளியானது. பறவைகளின் சரணாலயமாக இருக்கும் குடும்ப அமைப்புதான் 'வேடந்தாங்கல்' என்றாலும், சிவகுமார் சூழலுக்காகவும், வாழ்க்கைக்காகவும் மனிதர்கள் தரிக்கும் பல்வேறு வேடங்களைத் தாங்குவதையே இந்நாவலில் சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து கமல்ஹாசனே, 1992ல் 'நவீன சிறுகதைகள்' என்ற சிவகுமாரின் சிறுகதை தொகுப்பைத் தலைமைதாங்கி வெளியிட்டார். தொடர்ந்து கமலின் 'தேவர்மகன்' திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார் சிவகுமார்.
அதே ஆண்டில் தன்னையும் தனது கனவுகளையும் மையமாக வைத்து இவர் எழுதிய 'பாப்கார்ன் கனவுகள்' கல்கியில் தொடராக வெளியாகி பாராட்டுப் பெற்றது. அதை 'உங்கள் ஜுனியர்' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. அதனாலும் சொந்தமாகத் தன் நூல்களைப் பதிப்பித்ததாலும் இழப்பு ஏற்பட்டது என்றாலும் கலையார்வம் குன்றாமல் நாடகம், தொலைக்காட்சி, திரைத்துறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார். பூர்ணம் விஸ்வநாதன் முன்னிலையில் 'பாப்கார்ன் கனவுகள்' நாடகமாக மேடையேறிப் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து சென்னை தொலைக்காட்சியில் சிவகுமார் எழுதிய நாடகம், பூர்ணம் விஸ்வநாதன் நடிப்பில் வெளியானது. இவர் ஜெய்ப்பூரில் அரங்கேற்றிய 'விமோசனம்' நாடகம் அகில இந்திய அளவில் நடந்த வங்கி நாடகப் போட்டியில் சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் போன்ற பரிசுகளைப் பெற்றது. சன் தொலைக்காட்சியில் இவரது 'ஆலயம்' தொடர் வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஜெயா டி.வி.யில். சிவகுமாரின் வசனத்தில் 'வீட்டுக்கு வீடு லூட்டி' என்ற நகைச்சுவைத் தொடர், 500 வாரங்களுக்கும் மேல் வெளியாகி இவருக்குப் புகழ் சேர்த்தது.
அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி. கஸ்தூரி ரங்கன், ஆதவன், சுப்ரமண்ய ராஜு போன்றோரால் ஊக்குவிக்கப்பட்டவர் சிவகுமார். "சிவகுமாரின் எழுத்து குழப்பம் இல்லாமல் தெளிவாய் இருக்கிறது. பாஷையைக் கையாளும் லாவகம் புதுசாய் இருக்கிறது. மன நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் இடங்களில் பிசிறில்லாமல் இருக்கிறது" என்று பாராட்டுவார் மறைந்த எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜு. "எனக்குக் கதை எழுதச் சொல்லிக்கொடுத்த ம.வே. சிவகுமார், ஆதவனின் தாக்கம் அதிகமுள்ளவர்" என்று கூறும் பா. ராகவன், "இவரது 'பாப்கார்ன் கனவுகள்' தொடர்கதை, கல்கியில் வெளிவந்தது. சராசரிக்கும் மேலேயே ரசிகனாக இருக்கும் ஒருவன், பிரபலமாக முயற்சித்தால் என்ன ஆகும்? வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன், சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறான். நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த சிறப்பான படைப்பு இது. மனைவியின் நகைகளை அடகுவைத்து விடுகிறான் கணவன். மாமனார் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறார். நகைகளை அணிந்து கொண்டு, மனைவி நமஸ்காரம் செய்கிறாள். "நகைகளுடன் சேர்த்து, இத்தனை நாள் இந்த அழகையும் அல்லவா அடகு வைத்து விட்டோம்" என்ற குற்ற உணர்வு ஏற்படுவதாக எழுதியிருந்தது அருமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பு 'வாத்தியார்'. கொஞ்சம் தைரியமான எழுத்து என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் பற்றி எழுதியிருப்பார். ஒரு நடிகனின் ரசிகனாக இருக்கும்போது, அவரது போட்டியாளராக இருக்கும் இன்னொரு நடிகனை நாம் கிண்டல் செய்யவும், வெறுக்கவும் வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் நம்மால் கிண்டல் செய்யப்பட்டவர், அவரது தகுதியை, சிறப்பை, வெளிப்படுத்தும்போது, ஏன் அவர் அவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார், நாம் ஏன் அவரை விமரிசனம் செய்யும் இடத்திலேயே தங்கி விடுகிறோம் என்பது புரிய ஆரம்பிக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்களை ஒரு காரக்டராகவே ஆக்கி, எழுதிய சிறுகதை இது" என்று மதிப்பிடுகிறார்.
ம.வே.சிவகுமாரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு ஒன்றைக் கிழக்கு பதிப்பகம் 'வாத்தியார்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இவரது கதை மாந்தர்கள் அனைவருமே மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த எளிய மனிதர்கள். வார்த்தை ஜாலமோ, மயக்குமொழியோ, தேவையற்ற வர்ணனைகளோ இல்லாமல் கதையை நகர்த்திச் செல்லும் பாணி இவருடையது. குறும்பு கொப்பளிக்கும் தனித்த நடைக்குச் சொந்தக்காரர். கூடவே நிஜத்தை மிக மென்மையாக, அதே சமயம் முகத்தில் அறையும்படிச் சொல்லுவதில் தேர்ந்தவர். ம.வே.சிவகுமாரின் எழுத்துத் திறமையைப் பாராட்டி அவருக்குத் தனது பாக்கெட் நாவல் மூலம் சிறப்பிதழ் கொண்டு வந்ததுடன், அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை 'அக்மார்க் சிறுகதைகள்' என்ற தலைப்பில் தொகுப்பாக வெளியிட்டும் ஊக்குவித்துள்ளார் பாக்கெட் நாவல் அசோகன். திரைப்படத்துறையில் சாதித்தே தீருவது என்ற இலட்சியத்துடன் தீவிரமாக இயங்கி வருகிறார், ம.வே. சிவகுமார்.
அரவிந்த் |