தென்றல் பேசுகிறது...
அண்மையில் வந்த மிக நல்ல செய்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதே. 6.7 சதவீதமாக இருக்கும் வேலையற்றோர் விகிதம் கவலை தருவதாகத்தான் இருக்கிறது. செப்டம்பர் 2009ல் இது 10 சதவீதத்தைத் தொட்டுவிட்டு, இன்றைய நிலையை அடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இடைப்பட்ட காலத்தில் அரசுக்கு ஏகப்பட்ட பொருளாதார முட்டுக்கட்டைகள். சற்றும் பொதுஜன அக்கறையில்லாமல் அரசியல் லாபத்துக்காகவே செய்யப்பட்ட பொருளாதார அடைப்பு (shutdown) காரணமாக தேசியப் பூங்காக்கள் உட்படப் பொதுவிடங்கள் மூடப்பட்டுப் பலர் வேலையிழந்ததும் இங்கே நினைக்கத் தக்கது. அரசின் ஆக்கமுறைச் செலவினமே ஒரு நாட்டின் உற்பத்தி, பொருளாதாரம் ஆகியவற்றைப் பின்னின்று ஊக்குவதாகும். அப்படியிருக்க அதிலே கைவைத்தால் சோர்வும் தளர்ச்சியும் தவிர்க்க முடியாது. இத்தனை எதிர்ச்சக்திகளுக்கும் இடையே அதிபர் ஒபாமாவின் தளராத நடவடிக்கைகளால்தான் மேலே கூறிய தெம்புதரும் உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் இடைத்தேர்தல் வரப்போகும் நிலையில் பாராளுமன்றம் ஒரேயடியாக முடக்கப்பட்டுவிடவில்லை என்று காண்பிக்கவும் எதிர்க்கட்சி சில சலுகைகளைக் காண்பித்து வேளாண் சட்டம், வரவுசெலவுத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் ஒத்துழைத்திருக்கலாம். காரணம் எதுவானாலும், நடந்தது நல்லதற்கே. வரவுசெலவுத் திட்டம், வேளாண் மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதால் பொருளாதாரம் புத்துணர்வு பெறும் என்கிற நிலையில் ஃபெடரல் ரிசர்வின் தூண்டல் தொகுப்பை (stimulus) படிப்படியாக வீரியமிழக்கச் செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.

*****


தமிழகத்தில் கலைஞர் குடும்பத் தகராறு பொது அரங்கத்தில் வெடித்திருப்பதும். ம.தி.மு.க.வும் பா.ஜ.கவும் போன்ற கொள்கை இணக்கமல்லாத தேர்தல் காலக் கூட்டணிகளும், கேஜரிவாலும் சகாக்களும் டெல்லியில் தொடர்ந்து நடத்தும் கேலிக்கூத்தும், பெண்கள்மீது நடந்த வண்ணமிருக்கும் பாலியல் வன்முறைகளும் என்று இந்தியாவைப் பொறுத்தவரை கவலைப்பட நிரம்ப உள்ளது. "எவரேனும் நரேந்திர மோடிக்குக் குழி தோண்டினால் அதற்குள் அவசரமாகக் குதித்துவிடுகிறார் ராகுல் காந்தி" என்று ஒருவர் எழுதியிருந்தார். டி.வி. சேனல் ஒன்றில் ஆர்னப் கோஸ்வாமி-காந்தி இளவலின் 'சுவையான' நேர்காணலைப் பார்த்தவர்களுக்கு இது புரியும். இவற்றையெல்லாம் மறக்கக் கிரிக்கெட்டையும் சினிமாவையும் பார்த்துக்கொண்டு சொப்பன வாழ்வில் மகிழ்கிறது பாரத சமுதாயம். இதுவும் கடந்து போகும் என்பதுதான் எமது நம்பிக்கையும்.

*****


உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஆர்வத்தோடு பங்கேற்கும் 'தென்றல் சிறுகதைப் போட்டி' இந்த இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய போட்டிகளில் இல்லாத ஒரு சிறப்பு, இந்த முறை தமிழகத்திலுள்ளோரும் இதில் பங்கேற்கலாம் என்பதே. முந்தைய போட்டிகளைப் போலவே மிகத் தரமான கதைகளை, புதிய எழுத்தாளர்களை வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டுபோக இது உதவும். தமிழ் வளர்வது பல்கலைக் கழகங்களில் மட்டுமல்ல, அந்த மொழியை எழுதும், வாசிக்கும், பேசும் பற்றாளர்கள் இருப்பதனால்தான். கடல்கடந்த தேசத்திலும் இந்த நேசத்தைத் தூண்டி வளர்க்கும் கருவியாகத் தென்றல் தொடர்ந்து பணியாற்றுவதில் பெருமிதம் அடைகிறது. அரியதொரு சிற்பி மற்றும் இசைவாணரின் நேர்காணல்கள், சிறுகதைகள் மற்றும் பல வண்ணமிகு அம்சங்களோடு மீண்டும் ஓர் இதழை உங்கள் கரத்தில் வைக்கிறோம்.

வாசகர்களுக்கு மகா சிவராத்திரி மற்றும் வேலன்டைன் நாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

பிப்ரவரி 2014

© TamilOnline.com