டிசம்பர் 7, 2013 அன்று அரோராவிலுள்ள ப்ரிஸ்கோ சமுதாய மையத்தில் சிகாகோ தமிழ்ச் சங்கம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. சின்னஞ் சிறார்கள் தமிழில் பாட்டு, நாடகம், கவிதை, மாறுவேடம், பழமொழிகள், நாடகம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
வேல் வேல், வெற்றி வேல் என்று ஆன்மீகம், சினிமா, நகைச்சுவை எல்லாம் கலந்து ஒரு சூறாவளி நடனத்தை தொடர்ந்து, கொழுகொழுன்னு பிறந்தவளே மற்றும் மதுர ஜில்லா பாடலுக்கு ஆடி கலக்கியது அடுத்த தலைமுறை. பிடில் இசையுடன், மரங்கள் தமிழ்ப் பள்ளிப் பாட்டுக்குத் தாமே மரங்களாக மாறி நம்மை மகிழ்வித்தார்கள் கர்னி தமிழ்ப் பள்ளி மாணவர்கள். இதனை தொடர்ந்து, திரைப் பாடல்களுக்கு ஆட்டம் ஆடியது இளைய நட்சத்திரப் பட்டாளம். இடையிடயே, சின்னஞ்சிறார் தமிழ்ப் பெரியோர்போல் மாறுவேடமிட்டு மகிழ்வித்தனர்.
பதினோரு வயதேயான நாகசுதன் அய்யாசாமி, பல்வேறு நட்சத்திரங்களாக வந்து ஆடி, நடித்துக் கலக்கினார். லொள்ளு சபா பாணியில் 'சுவைமிக்கது இந்திய உணவா, அமெரிக்க உணவா' என்ற நாடகமும், கிராமப் பஞ்சாயத்து சாயலில் 'நல்ல முறையில் நடக்க வேண்டியது குழந்தைகளா? பெற்றோர்களா?' என்ற நாடகமும் நடத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்கள் நேப்பர்வில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்.
சிகாகோ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பழமொழிப் போட்டி வெகு சிறப்பு.. பின்னர் சிறுவர்களின் மெல்லிசை ரசிகர்களின் மனங்களில் ரீங்காரம் இட்டுச் சென்றது. ஆகாஷ், தேஷ்னா, மதுரா, ரித்திக், தீபா, ஸ்னேஹா இளமையும் ரம்யமும் கலந்து நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தனர். திரு. பிரேம் நன்றியுரை நல்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
மு. சிற்றரசு, இல்லினாய் |