சிகாகோ: தங்கமுருகன் விழா
டிசம்பர் 14, 2013 அன்று சிகாகோ பெருநகரின் இந்துக் கோவிலில் தங்கமுருகன் விழா கொண்டாடப்பட்டது. காலை எட்டுமணி அளவில் திருப்பள்ளியெழுச்சி பின்னர் அபிஷேகம், அலங்காரத்துடன் நிகழ்வு துவங்கியது. வள்ளி தேவசேனாபதி தங்கமுருகனை தங்கநிறப் பல்லக்கில் வைத்து சிறுவர் மற்றும் பெரியவர்கள் காவடியாட்டம் ஆடி, "வரவேணுமே முருகேசனே" என்னும் திருப்புகழ் பாடி மேடைக்கு அழைத்து வந்து அமர்த்தினர். டாக்டர் மல்லிகா இராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். சிகாகோவின் பல பகுதிகளிலும் இருக்கும் சங்கீத மற்றும் நாட்டியப் பள்ளிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் பிறரும் குமரகுருபரனைப் போற்றிப் பன்னிரண்டு மணிநேரம் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி சிறப்பானது.

தங்கமுருகன் விழாவை 13 ஆண்டுகளாக நடத்திவருகிறார் திரு. கோபாலகிருஷ்ணன் இராமசுவாமி. திருமதி உமையாள் முத்து இப்படிப்பட்ட விழாவை உலகின் எந்தப் பகுதியிலும் பார்த்ததில்லை என்று புகழ்ந்தார். முருகனின் அருளிருக்க, நாளும் கோளும் என்ன செய்யமுடியும் என்னும் அருணகிரிநாதரின் கந்தரலங்காரப் பாடலை மேற்கோள்காட்டி விளக்கினார்.

விழாவின் சிறப்பம்சங்களாக 'சினிமாவில் சிவகுமரன்' என்னும் தலைப்பில் சுமார் 70 சிறுவர்களின் இசை-நாட்டிய நாடகம் அமைந்தது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், முருகனருளால் தென்னிந்தியாவிலிருந்து வடக்கு நோக்கி நடந்தே சென்று அங்கே 'காசி மடம்' நிறுவிய குமரகுருபர சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, நீதிநெறி விளக்கத்திலிருந்து நல்ல கருத்துள்ள நாடகம், திருப்புகழ் பற்றிய கேள்வி-பதில் எனப் பல வகைகளில் சிறுவர்கள் பங்கேற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி, நடித்தது பாராட்டுக்குரியது. முருகன் பஜனைப் பாடல்கள், வயலினிசை, வீணையிசை, மிருதங்க ஒலி என்று பக்க வாத்தியங்களுடன் கந்தர் அனுபூதியும் பாடி அசத்தினார்கள். எல்லாவற்றிற்கும் சிகரமாக 'லிட்டில் முருகா ஷோ' என்று எட்டு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முருகன் வேடமிட்டு மேடையை அலங்கரித்தது கண்கொள்ளாக் காட்சி.

இந்த வருட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திரு. நமசிவாயம், "பழனிமலைக் குமரனையும், சுவாமிமலைக் குருபரனையும் இன்று 'குமரகுருபரனாக' ஒருங்கே தரிசித்த பேறுபெற்றேன்" என்று லெமான்ட் நகர் தங்க ஆறுமுகனை அறுபடை வீடுகளுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அமெரிக்காவில் வளரும் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ்க்கடவுள்மீது ஈடுபாடு உண்டாக்குவதே தங்கமுருகன் விழாக் குழுவின் நோக்கம். அதன்படி அன்று பங்கேற்ற முன்னூறு சிறுவர்களுக்கும் சான்றிதழ், பரிசு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

உமாபதி பட்டர்,
சிகாகோ

© TamilOnline.com