நியூ ஜெர்சி: பாரதி சரிதை வில்லுப்பாட்டு
டிசம்பர் 15, 2013 அன்று, நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கமும், பாரதி சொஸைட்டி ஆஃப் அமெரிக்காவும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரர் கோயில் கலையரங்கில் நடைபெற்றது. குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகக் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி இயற்றி இயக்கி வழங்கிய 'மகாகவி பாரதி சரிதை' வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கவிமாமணியுடன், நகைச்சுவை நாயகர் திரு. மோகன் ராமன், நெல்லைத் தமிழ் மாமணி திரு. சங்கர், பக்கவாத்தியம் திரு. பால முரளி, சங்கத்தலைவி திருமதி. கவிதா இராமசாமி. இன்னிசைத் தென்றல் திருமதி. ராதிகா, டிரம்ஸ் வித்தகி செல்வி. சஹானா ஆகியோர் பங்கேற்றனர். நாட்டுப்புறப் பாடல்களை இலக்கிய நயம் சிறக்க எழுதியிருந்தார் கவிமாமணி. இடையிடையே கேள்விகளை நகைச்சுவை மிளிரக் கேட்டுத் திரு. மோகன் இராமன் கலகலப்பூட்டினார். கும்மி, ஆனந்தக்களிப்பு, காவடிச் சிந்து, தெம்மாங்கு, தாலாட்டு, சிந்துப் பாடல்கள் ஆகியவற்றோடு பாரதி கவிதைகளும் உணர்ச்சிகரமாக வழங்கப்பட்டன. பல செய்திகள் புதுமையாகவும் வியப்பாகவும் இருந்தன. பாரதியின் மறைவைப் பற்றி வில்லிசையில் தாளத்தை அடக்கிச் சோகம் ததும்பப் பாடல் வழங்கியபோது அவையில் பலர் கண்பனித்தனர். நிகழ்ச்சி நிறைவில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர். கிராமப்புறக் கலையின் சிறப்பு பலராலும் உணரப்பட்டது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com