ஜனவரி 2014: வாசகர் கடிதம்
13 ஆண்டுகள் விரைந்து சென்றுவிட்டனவா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் உங்கள் குழுவின் உன்னதமான உழைப்பு, வாசகர்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைத் 'தென்றல்' பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நாளுக்கு நாள் சிறப்பாக வளர்ந்து வரும் தென்றல் இன்னமும் தழைத்தோங்கி, ஆண்டாண்டு காலங்கள் வாழ வேண்டும் என்றும் எதிர்கால சந்ததியருக்குத் தமிழின் அருமை புரியவைத்து இங்கேயும் தமிழுக்கு வல்லமைமிக்க சரித்திரம் படைக்கவேண்டும் என்றும் மனமார வாழ்த்துகிறோம்.

மார்கழி சங்கீத சீசனுக்கு தகுந்தாற்போல இசையுதிர் காலத் துணுக்குகள் மனதை நெகிழச் செய்தன. பாரதியாரின் பிறந்தநாள் நினைவாகச் சுட்டும் விழிச்சுடரின் தீட்சண்யமான பார்வையால் ஒற்றர்களை அறிந்த சம்பவங்கள் பாராட்டப்பட வேண்டியவை. கீதா பென்னட்டின் அம்மாவின் முடிவு உணர்ச்சி மயமானது. கவிஞர் யுகபாரதி நல்ல அறிமுகம். தமிழர்களை ஒன்றிணைக்க திருக்குறள் போட்டி நல்ல வழி என்று சொல்லும் வேலு ராமன் அவர்களின் தமிழ்ப பற்றும் சேவையும் மகத்தானவை.

ஹரி கிருஷ்ணன், கதிரவன் எழில்மன்னன், மரு. வரலட்சுமி நிரஞ்சன், சித்ரா வைத்தீஸ்வரன், அரவிந்த், சீதா துரைராஜ், பா.சு. ரமணன், சுப்புதாத்தா என்று எல்லோரும் தென்றல் வாசகர் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளனர். எண்ணற்ற எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களின் படைப்புக்களையும் தென்றலில் படித்து அறிந்து வியப்புற்றிருக்கிறோம். அதற்காகவும் தென்றலுக்கு நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா

*****


இயேசுபெருமான் பிறந்த கிறிஸ்துமஸ் மாதமான டிசம்பரில் வந்த 'இலியோரா' சிறுகதை உள்ளத்தைத் தொட்டது. அதை வெளியிட்ட தென்றலுக்கு நன்றி. சிறுகதை இலக்கணப்படி ஒரு நல்ல இலக்கியம் படைத்த தேவி அருள்மொழி அண்ணாமலைக்குப் பாராட்டுக்கள். அவர்கள் மேற்கோள் காட்டிய விவிலிய வசனங்கள் பழைய மொழிபெயர்ப்பில் உள்ளவை. அண்மையில் வந்த பொது மொழிபெயர்ப்பான 'திருவிவிலியம்' நூலிலிருந்து பயன்படுத்தியிருந்தால் அவர்களின் எழுத்தோவியத்துடன் மேற்கோள்களும் சிறப்பாகப் பொருந்தியிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

டாக்டர் என்.ஜே. ஞானையா,
ஆனஹைம், கலிஃபோர்னியா

*****


நாங்கள் மாதந்தோறும் தென்றல் படிப்பவர்கள். குறிப்பாக அதில் வரும் 'சுப்புத் தாத்தா சொன்ன கதை' என் மகளுக்கும் மகனுக்கும் ரொம்பப் பிடிக்கும்.

ஷோபனா ராதாகிருஷ்ணன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

*****


தெற்கிலிருந்தெழும் காற்றைத்
தென்றலெனச் சொன்னாலும்
மேற்கிலிருந்து வரும் மாத
இதழுக்கும் அது பொருந்தும்.

ஏற்றமுடன் எங்களுக்கு
இதமளிக்கும் தமிழ் மொழியே!
போற்றுகிறேன் உன்றனது
பழமையையும் பண்பினையும்!

ஆசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

டாக்டர். சக்ரபாணி சேதுமாதவன்,
கிங்ஸ்ட்ரீ, தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com