ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அது கடுமையான கோடைக்காலம். தாகமும், பசியும் அவரை வாட்டின. துறவியென்பதால் அவர் கையில் பணம் வைத்திருப்பதில்லை. அவரருகே ஒரு பயணி உட்கார்ந்திருந்தார். அவர் சுவாமி விவேகானந்தரைப் பார்த்து வழியெங்கும் கிண்டல் செய்தார், "சின்ன வயது, திடமான உடல். இதை வைத்துக்கொண்டு உழைத்துப் பிழைக்காமல், பிச்சை எடுக்கிறாயே, வெட்கமாக இல்லை!" என்று பலவாறாக திட்டியபடி வந்தார். விவேகானந்தரோ பதில் ஏதும் கூறாமல், அமைதியாக அமர்ந்திருந்தார்.
ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. கொளுத்தும் வெயிலால் வாடிய விவேகானந்தர் நிழலில் அமர இடம் கிடைக்குமா என்று தேடினார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அனுமதிக்காததால், கொளுத்தும் வெயிலிலேயே அமர நேர்ந்தது. அதைக்கண்டு அவருடன் பயணம் செய்த நபர், மீண்டும் கிண்டல் செய்தார். சுவாமி விவேகானந்தர் அப்போதும் ஏதும் பேசவில்லை மௌனமாகவே அமர்ந்திருந்தார்.
அப்போது அங்குமிங்கும் நோக்கிக் கொண்டு யாரையோ தேடியபடி ஒருவர் அங்கு வந்தார். விவேகானந்தரைக் கண்டதும் வணங்கினார். தான் கையில் கொண்டிருந்த வந்திருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்து உண்ணுமாறு வேண்டினார். திகைத்தார் சுவாமி விவேகானந்தர், "நீ யாரப்பா?' என்று அன்புடன் வினவினார்.
அவரோ, சுவாமிஜியை வணங்கியவாறே, "ஐயா, நான் இந்த ஊரில் கடை வைத்திருக்கிறேன், நான் பகல் உணவு உண்டுவிட்டு, சற்றுத் தூங்குவது வழக்கம். இன்று பகலில் தூங்கும்போது ஸ்ரீராமன் என் கனவில் வந்தார். அவர் என்னிடம், உங்கள் உருவத்தைக் காட்டி, 'என் பக்தன் பட்டினியாக இருக்கிறான். அவனுக்கு உடனே உணவு கொண்டுபோய்க் கொடு!' என்று கட்டளையிட்டார். நான் முதலில் அதை சாதாரணக் கனவு என்று நினைத்தேன். ஆனால் கனவில் தொடர்ந்து உங்கள் உருவம் வந்தது. நீங்கள் இருக்கும் இடமும் தெரிந்தது. உங்களுக்கு உணவளிப்பதற்கான கட்டளையும் ஸ்ரீ ராமபிரானிடமிருந்து வந்த வண்ணமே இருந்தது. ஆகவே அந்தக் கட்டளைப்படியே இங்கு வந்தேன். தயவுசெய்து இந்த உணவை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
சுவாமி விவேகானந்தரும், அன்புடன் அவன் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரயில் சகபயணி, சுவாமிகளின் அருகே வந்து வணங்கி, "என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் பெருமை அறியாமல் தவறாகப் பேசிவிட்டேன். சன்யாச தர்மத்தின் உயர்வை இன்று உணர்ந்துகொண்டேன்" என்று கூறித் தொழுதார். |