மற்றவர் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறொரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும்.
முதலில் தன்னை நம்பு. உனக்குள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன என்பதனை உணர். அதற்கேற்றவாறு செயல்படு. நீ சாதிக்கவல்லவன் என்பதில் உறுதியாக இரு. உன்முன் பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகி விடும்.
உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும்கூட அவர்களை வெல்லமுடியாது.
அறிவு, இதயம் இரண்டில் எதன்படி நடப்பது என்ற குழப்பம் வந்தால் நீ உன் அறிவை நம்புவதைவிட, உன் இதயத்தையே நம்பு. அதுவே உன்னைத் தெளிவான முடிவுக்கு அழைத்துச் செல்லும்.
நீ உன்னை எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய். பலவீனன் என்று நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வல்லவன் ஆவாய். ஆகவே உயர்வாகவே நினை. பாவி என்றோ தாழ்ந்தவன் என்றோ நினைத்துச் சோர்ந்து போகாதே. உன்னால் எதுவும் முடியும் என்பதை மறக்காதே!
துன்பத்தைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல்காற்று மோதத்தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத்தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாகப் படமெடுக்கத்தான் செய்யும். துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில்.
கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் அல்ல; தன்மீதே நம்பிக்கை இல்லாதவன்தான் நாத்திகன்.
அச்சமே நரகம். அச்சமே கீழ்மை. அச்சமே குற்றம். ஆகவே ஒருவன் எப்பொழுதும் எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் அச்சமற்றவனாக விளங்க வேண்டும்.
நடந்து போனதைக் கண்டு வருந்தாதே! எல்லையற்ற எதிர்காலம் உன்முன்னால் பரந்து விரிந்திருப்பதைப் பார். நம்பிக்கையோடு செயல்படு.
ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிய யாரும் விரும்பவதில்லை. முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். பின்னர் நீ கட்டளையிடுபவனாய் உயரமுடியும். பிறரை அடக்கி ஆள நினைப்பவன் ஒருபோதும் தலைவனாக முடியாது. அவ்வாறு ஆனாலும் அவனால் அதில் நிலைத்திருக்க முடியாது.
தைரியம் உள்ளவனாக இரு. ஒருபோதும் மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே! அற்ப விஷயங்களில் உன் கவனத்தைச் செலுத்தாதே. வெற்றி மட்டுமே உனது குறிக்கோளாக இருக்கட்டும். முட்டாள்தான் தவறுகள் செய்து கொண்டிருப்பான். தைரியசாலி பாவமான காரியங்களைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டான்.
முன்னேறிக் கொண்டே இரு. முறையற்ற ஒரு செயலைச் செய்துவிட்டதாகவே நீ நினைத்தாலும் அதற்காக சோர்ந்து வருந்திக் கொண்டிருக்க வேண்டாம். அந்தத் தவறை அன்று நீ செய்யாமல் இருந்தால் இன்று நீ இந்த நிலையை அடைந்திருக்க முடியும் என்று நம்புகிறாயா? ஆகவே உன் லட்சியத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு முன்னேறிக் கொண்டே இரு.
உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடி கொண்டிருக்கிறது. அதனை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். சோம்பித் திரியாதீர்கள். உங்களால் எதுவும் முடியும். நம்பிக்கை வையுங்கள். முதல் தேவை நம்பிக்கைதான். அது ஒன்றுதான் இப்போதைய பிரச்சனைகளுக்கு முதல் தீர்வு.
யார் எதைப் பெறுவதற்குத் தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்குப் பிரபஞ்சத்தின் எந்தச் சக்தியாலும் முடியாது.
காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்து, காற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. பாய்மரங்களைச் சுற்றி வைத்திருக்கும் கப்பல்கள் பயனடைவதில்லை. குற்றம் காற்றின்மீதா? அதுபோலத்தான் மனித வாழ்வும். சிந்தித்துச் செயலாற்றத் தெரிந்தவன் அதன்வழி செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமேதான் வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.
ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேசபக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
பகை, பொறாமை போன்றவை வேண்டாம். அவற்றை நீ செலுத்தினால் பின்னர் அவையே உனக்கு வட்டியும், முதலுமாகத் திரும்ப வரும். ஆகவே, அவற்றை விடுத்து, உன் குறிக்கோளை நோக்கிய பயணத்தை மேற்கொள்வாயாக!
நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் கடமைகளை, உன் சுக துக்கங்களை மறந்து செய்துவந்தால் போதும். அதுவே மிகப்பெரிய தேச சேவையாகும்.
சுவாமி விவேகானந்தர் |