செவிட்டு மணி
இவள் திங்கட்கிழமை ஊருக்குக் கிளம்புகிறபடியால், குழந்தையை இன்று மருத்துவமனையில் வைத்தே பார்த்துவிட்டு வருவது என்று முடிவானது. இத்தனைக்கும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தது, சாதாரணமாக சுகப்பிரசவமாக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்க்கு மூன்றாவது நாள் அனுப்பி விடுவார்கள். இவளும் வழக்கமாகச் சட்டை அல்லது காலுறை மற்றும் பேபி பவுடர் சகிதமாகப் போய் பார்த்துவிட்டு வந்து விடுவாள். ஆனால் நண்பர் மனைவிக்கு சுகப்பிசவம் நடந்திருந்தாலும், குழந்தை பிறந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக மூச்சுப் பிரச்சனை காரணமாக சில நாட்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்க வேண்டியிருந்ததால் வீட்டிற்கு திரும்பும் நாளை அனுமானிக்க இயலாமல் இருந்தது.

"ஞாயித்துகிழமை ஊருக்குக் கிளம்புகிற வேலையிருக்கும், இன்றைக்கு ஆஸ்பத்திரியிலேயே போய்ப் பார்த்திட்டு வந்திரலாம். பிஸ்கட் டின்னும் ஆப்பிளும் நேற்றே வாங்கி வைச்சிட்டேன்."

எனக்கும் தியா பிறந்ததுக்கப்புறம், குழந்தைவாசனை மிக்க அந்த மருத்துவமனைக்குச் செல்வது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், பிரசவத்துக்குப் பின்னர் கலைந்த நிலையில் இருப்பவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும் என்றிருந்தது. காரில் செல்லும் பொழுது, "நான் லாபியில் இருக்கிறேன் நீ போய் பார்த்திட்டு வா" என்றேன்.

"நான் பேசிட்டேன், நீங்கள் வரலாம். கூச்சமென்ன வேண்டிகிடக்கு?"

"சரி வர்ரேன்."

மருத்துவமனை வரவேற்பறையில் விசாரித்து ஆறாவது மாடியை அடைந்து அவர்கள் அறைக்கதவைத் தட்டி உள்ளே செல்வது வரைக்கும் குழந்தை அவர்களுடன்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அறையில் நண்பரும் அவர் மனைவியும் மட்டுமே இருந்தார்கள்.

வாழ்த்துச் சொன்னபொழுது இருந்த ஒரு கீற்றுச் சிரிப்பைத் தவிர வேறு மகிழ்ச்சியை அவர்கள் முகத்தில் காணமுடியவில்லை. "பிரசவ நேரத்தில் நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி சுந்தர்" என்ற நண்பர் மனைவியிடம், "ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவிக்கிடதானே நாம இங்கிருக்கோம்" என்றேன்.

எங்கள் முகம் முழுவதும் குழந்தை பற்றிய கேள்விச் சுழிகள் சுருண்டுகிடந்ததை அவர்கள் கவனித்திருக்க வேண்டும்.

"குழந்தை காலைவரை NICUவில் இருந்தது, காலை நர்சரிக்கு மாற்றி விட்டார்கள்."

"அப்படின்னா குழந்தையை உங்கள் அறையில் வைத்திருக்க மாட்டார்களா?"

"இல்லை, குழந்தை அவர்கள் கண்காணிப்பில் இருக்கிறாள். பால் கொடுக்கத் தாய் தேவைப்பட்டால் இந்த பஸ்ஸர் அலறும்" என்று சிவப்பு விளக்குகள் கொண்ட வட்ட வடிவிலான எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் போன்ற அழைப்புக் கருவியை காண்பித்தார்.

"ஆனால் இவள் அது அலறுவதற்கு முன் எப்பொழுதும் அங்கிருக்கிறாள். உண்மையில் அவர்கள்தான் பஸ்ஸர் வைத்திருக்க வேண்டும், இவள்தான் அடிக்கடி குழந்தையோடு இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள்" என்று அவர் சிரிக்க முயன்றார்.

"இருக்காதா பின்ன, அந்த சின்னது மனசில என்ன நினைக்குமோ!"

தற்காலிகப் பிரிவை ஏற்றுகொள்ள முடியாத மனநிலையில் இருவரும் இருந்தார்கள். அதற்கப்புறமான பேச்சுகள் இதே நிலையைக் கடந்துவந்த பிற சக இந்தியக் குடும்பங்கள் பற்றியதாக இருந்தது.

*****


"நர்சரியில் ஒரு சமயத்தில் இருவருக்குத்தான் அனுமதி, அதனால் சுந்தர் நீங்கள் முதலில் வாருங்கள் அப்புறம் உங்கள் மனைவி வரலாம்" என்றார் அவர்.

நான் அவரோடு நர்சரியை நோக்கி நடந்தேன். எனக்குப் பிஞ்சுகள் தங்கியிருக்கும் அறையை அப்படி அழைப்பது ரொம்பப் பிடித்திருந்தது. சென்னையில் வாழ்ந்த சமயத்தில் பூந்தொட்டிகள் வாங்க வார இறுதிகளில் கிழக்குக் கடற்கரை சாலை நர்சரிகளில் அலைந்தது நினைவுக்கு வந்தது. இங்கு வந்துவிட்ட பிறகு "அந்தச் செடி நல்லாயிருக்கா, இது பூ பூத்திருக்கா தண்ணி தினமும் விடுகிறீர்களா கருவேப்பிலைப் பிள்ளை மாதிரி கருகமட்டும் விட்ராதீக" என்பதான பேச்சுக்கள் குறைவதற்கு வருஷங்கள் ஆனது. செடியானால் என்ன குழந்தையானால் என்ன.

நர்சரியில் தொட்டில் வயல், வெற்றுத் தொட்டில்கள். குழந்தைகளுடனும் சில.

மெலிதான ஒலியில் ஆங்கிலப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை விட விழித்திருந்த பிஞ்சுகள் நிறைய. ஒரு அழுகையில்லை. அந்த அறையே ஒரு புன்சிரிப்பை அணிந்து நிற்கிறதுபோலத் தோன்றியது.

நான் நண்பரிடம் "இசையை அனுபவிக்கிறார்கள் பாருங்களேன்" என்றேன். அங்கு அமர்ந்திருந்த நர்ஸ் நண்பரிடம் "She has been a wonderful child so far" என்றார்.

"இவள்தான் எங்கள் வீட்டின் புதுவரவு."

"அமர்க்களம், மிக நேர்த்தி" என்று அவரைத் தட்டி கொடுத்தேன்.

"நீங்கள் குழந்தையை வாரியணைக்க ஆசைப்படுகிறீர்களா?" என்றவாறு ஒரு கிருமிநாசினி புட்டியை என்னிடம் நீட்டினார் நர்ஸ்.

"நிச்சயமாக" குழந்தையை கன்னத்தில் ஒற்றியெடுத்து அவரிடம் ஒப்படைத்தேன். நான் வெளியே வந்த பிறகும் அவர் சிறிது நேரம் குழந்தையை அணைத்தவாறு நின்றுகொண்டிருந்தார்.

*****


"நீ போய்க் குழந்தையைப் பார்த்து விட்டு வா, நான் காரில் காத்திருக்கிறேன்."

மனைவி வர நான் எதிர்பார்த்ததைவிட அதிகநேரம் பிடித்தது. நல்லவேளை, இந்தியாவிலிருந்து அம்மா அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொழுது போனது தெரியவில்லை.

"வியாழக்கிழமைதான் குழந்தையை ஒப்படைக்கிறார்கள். அவள் குழந்தையின் பிரிவால் ரொம்பக் கஷ்டப்படுகிறாள், பார்க்க வருத்தமாயிருந்தது" என்றாள்.

"இன்னும் இரண்டு மூணு நாள்தானே, எல்லாம் சரியாய்விடும்" என்றேன்.

"அழுதுகிட்டே இருந்தாள், பஸ்ஸர் வேற அந்த நேரத்தில அடிச்சது. குழந்தையை கவனிக்க நர்சரிக்குச் சென்றுவிட்டாள்."

கொஞ்ச நேரம் அமைதியாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். பின்னர் சம்பந்தமே இல்லாமல் "இந்தியாவிலிருந்து அம்மாவும் அதே நேரத்தில்தான் மிஸ்ட் கால் கொடுத்தார்கள்" என்றேன்.

சுந்தர் பாலகங்காதரன்,
சான் டியேகோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com