தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், சைவசமய வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர் பலருள் குறிப்பிடத் தகுந்தவர் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார். இவர், 1878, பிப்ரவரி 20 அன்று, கோயம்புத்தூரில் உ. கந்தசாமி முதலியார் - வடிவம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த கந்தசாமி முதலியார் மிகுந்த சைவப்பற்றுக் கொண்டவர். ஆறுமுகநாவலரின் மாணவர். பேரூர் புராணம், ஸ்ரீ சுப்பிரமணியர் திருவிரட்டை மணிமாலை, வெள்ளை விநாயகர் பதிகம், பச்சை நாயகியம்மை பிள்ளைத் தமிழ், திருக்கொடுமுடி புராணம் உள்ளிட்ட பல சைவ நூல்களின் ஆசிரியர். ஆரம்பக் கல்வியை வைத்தியலிங்கம் பிள்ளையிடம் பயின்ற சுப்பிரமணிய முதலியார், தமிழ் மற்றும் சைவக் கல்வியைத் திருச்சிற்றம்பலம் பிள்ளையிடம் பெற்றார். உயர்நிலைக் கல்வியை கோவை அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும், எஃப்.ஏ பட்டப்படிப்பை, கலைக் கல்லூரியிலும் பயின்றார். தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். தமிழ்ப் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். சட்டக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றுக் கோவையில் வழக்குறைஞரானார். அக்காலகட்டத்தில் அவருக்கு மீனாட்சியம்மாள் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் திடீரென அந்த அம்மையார் காலமானதால் சில ஆண்டுகளுக்குப் பின் மனைவியின் உறவினரான மீனாட்சி என்ற பெண்ணை மணம் புரிந்துகொண்டார்.
தந்தை ஒரு தமிழ்ப் பண்டிதராகவும், சைவநூல் அறிஞராகவும் இருந்ததால் பல தமிழ்ச் சான்றோர்கள் இல்லம் வந்து செல்வர். அவ்வழியே சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோரின் அறிமுகமும் நட்பும் முதலியாருக்கு வாய்த்தது. முதலியாரின் இளவயதிலேயே, கயப்பாக்கம் சாதாசிவ செட்டியார் கோயம்புத்தூரில் சிலகாலம் தங்கிப் பெரியபுராண உரை ஆற்றியபோது அவருக்குக் கையேடு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமுதல் பெரிய புராணத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. தினந்தோறும் பெரியபுராணத்தைப் பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எழுத்து, பேச்சு என இரண்டிலும் வல்லவராக இருந்ததால் நாடெங்கும் பயணம் செய்து திருமுறைக் கூட்டங்களில் கலந்து கொண்டதுடன், சைவம் பற்றியும், தேவார, திருவாசகத் திருமுறைகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். 'சேக்கிழார்', 'சேக்கிழாரும் சேயிழையார்களும்', 'கருவூர்த்தேவர்', 'மாணிக்கவாசகர் (அ) நீத்தார் பெருமை', 'வாகீசர் (அ) மெய்யுணர்தல்', 'அர்த்த நாரீஸ்வரர் (அ) மாதிருக்கும் பாதியான்', 'செம்மணித்திரள்', 'திருத்தொண்டர் புராணத்துள் முருகன்' போன்றன அவரது உரைநடை நூல்களாகும். இவற்றில் 'சேக்கிழார்' சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாகப் பச்சையப்பன் கல்லூரியில் 1930ல் சுப்பிரமணிய முதலியார் நிகழ்த்திய சொற்பொழிவின் தொகுப்பு. 1933ல் வெளியான அதுதான் அவரது முதல் நூலும். 'கருணாம்பிகை பிள்ளைத்தமிழ்', 'கந்தபுராணப் போற்றிக் கலிவெண்பா', 'திருப்பேரூர் இரட்டை மணிமாலை' போன்ற செய்யுள் நூல்களையும் படைத்துள்ளார். பதினோராம் திருமுறையான 'க்ஷேத்திர திருவெண்பா'விற்கு இவர் எழுதியிருக்கும் உரை குறிப்பிடத்தகுந்த ஒன்று.
சி.கே. சுப்பிரமணிய முதலியாருக்கு நீடித்த புகழைத் தேடித்தந்தது அவர் பெரியபுராணத்துக்குப் பல்லாண்டு காலம் ஆராய்ந்து எழுதிய உரைநூலே. பெரியபுராணத்திற்கு ஆறுமுகநாவலர் எழுதிய உரை காரைக்காலம்மையார் பாடலோடு முற்றுப்பெற்று விட்டது. மழவை மகாலிங்கய்யர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திரு.வி.க., வா. மகாதேவ முதலியார் உள்ளிட்ட பிறரது உரைகள் வெளிவந்திருந்தாலும் அவை அரும்பத உரையும் குறிப்புரையுமாகவே இருந்தன. ஆக, முதன்முதலாக முழுமையான, விரிவான ஆய்வுரையை எழுதியவர் சி.கே. சுப்பிரமணிய முதலியார்தாம். தமக்கு வழிகாட்டியாக அமைந்தது வா. மகாதேவ முதலியார் எழுதிய 'பெரியபுராண ஆராய்ச்சி' நூல்தான் என்கிறார் தம் நூலின் முன்னுரையில். பெரியபுராணத்தின் கதைத்தலைவர் சுந்தரர்தான் என்றும், கதைத் தலைவியர் பரவையார், சங்கிலியார் என்றும் முதன்முதலாகத் தம் நூலில் தக்க சான்றுகளோடு குறித்தவர் சுப்பிரமணிய முதலியாரே! இந்நூல் அறிஞர்கள் பலரது பாராட்டைப் பெற்றது. இவ்வுரை ஏழு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் உரை 1937ல் வெளியானது. இறுதியுரை வெளியான ஆண்டு 1954. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இதற்காக உழைத்திருக்கிறார். பாடல், விளக்கம், குறிப்புரை என்பவை தவிர, பெரியபுராணத்தில் கூறப்பெறும் திருத்தலங்களைப் பற்றிய செய்திகளைப் புகைப்படங்களுடன் விரிவாக விளக்கியும், நாயன்மார்கள் சென்ற வழித்தடத்தை நில வரைபடமாகத் தந்தும் சிறப்பான பணி புரிந்துள்ளார். ஆதினகர்த்தர் சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன் உரையில், "சிவக்கவிமணியின் பேருரை சேக்கிழார் சுவாமிகளது ஆழ்ந்த தெய்வீகக் கருத்துக்களை அகழ்ந்தெடுத்த பெரியதோர் அருட்புதையல். இதைச் சைவ சமயத்தின் களஞ்சியம் எனலாம்" என்று புகழ்ந்துரைத்துள்ளார்.
போற்றுதிருத் தொண்டர் புராணத்தின் பேருரையை வேற்றுமை இன்றி விரித்துரைத்தான் நீற்றணிசெய் கோவையுறை சுப்ரமணிக் கோமான் குறுமுனியாத் தேவைநிகர் அண்ணல் சிறந்து
என்று பாராட்டுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
"இது ஒரு பெருங்காப்பியம்; அங்ஙனமின்றிப் பல சரிதங்கள் சேர்ந்த ஒரு கோவை எனச் சிலர் எண்ணுவர். அது சரியன்று. சுந்தரமூர்த்திகளைத் தலைவராகவும், பரவையார் சங்கிலியார் என்ற இருவரையும் தலைவியராகவும் கொண்ட அவர்கள் கயிலையிலிருந்து ஒரு காரணம்பற்றிப் பூவுலக்தில் அவதரித்து, உலகத்தார்க்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருள்களையும் காட்டி, உணர்த்தி, உய்வித்து மீளவும் திருக்கயிலை சேர்ந்தார்கள் என்பது காப்பியத்தின் உட்பொருள். இதில் தலைவன் தலைவியர் கூட்டம், பிரிவு முதலிய அகப்பொருளும், போர் முதலிய புறப்பொருளும் சூரியன் உதயம், அத்தமனம் ஆகிய பொழுதின் சிறப்புகளும் பெரும்பொழுது சிறுபொழுது முதலிய பகுப்புகளும் இன்னும் பெருங்காப்பிய உறுப்புகள் முற்றும் சிறப்பாய் அறியக் கிடக்கும்" என்று சுப்பிரமணிய முதலியார் நூலின் முன்னுரையில் குறிப்பது சிந்திக்கத்தக்கது. மேலும் அவர், "இப்புராணத்தின் பயனானது இருள் போக்குதல் என்க. என்னை? இருள் இருவகைப்படும். புறவிருள் ஒன்று. சிந்தையுள் நின்ற அகவிருள் மற்றொன்று. புறவிருள் போக்குபவன் செங்கதிரவன். அதுபோல உயிரினிடத்துப் பொருந்திய ஆணவம் என்னும் வலிய இருளைப் போக்குவது இத்தொண்டர் புராணம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வ.உ. சிதம்பரம் பிள்ளையும், சி.கே. சுப்பிரமணிய முதலியாரும் மிகநெருங்கிய நண்பர்கள். இதுபற்றி முதலியார், "என் நண்பர் திரு வ.உ. சிதம்பரம் பிள்ளையின் செய்திகளில் கலந்துகொண்டு சில வேலைகளைச் செய்தேன். ஸ்ரீ அரவிந்த கோஷ், திரு ஜி. சுப்பிரமணிய ஐயர் முதலான சுதேசி இயக்கத் தலைவர்களுடன் எனக்குக் கடிதப் போக்குவரத்தும் இருந்தது. திரு ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்களைக் கோயம்புத்தூருக்கு வரவழைத்துக் கெளரவித்தேன். விபின்சந்திரபால் அவர்களின் பிரசங்கங்களில் நான் மிகவும் ஈடுபட்டுக் கொண்டாடினேன். இவற்றிலெல்லாம் என் மனைவியும் என்னுடன் மிகவும் ஒத்துழைத்து வந்தாள். ஆயினும் அராஜகச் செயல்களில் நான் ஈடுபடவே இல்லை. இருந்தபோதிலும், அந்நாள் ஆங்கிலேய அரசாட்சியினர் என்மேல் கண்ணோக்கம் செலுத்தினர். மூன்றுவருட காலம் என் நடவடிக்கைகளைப் போலீசார் கவனித்து வருவாராயினர்" என்று குறிப்பிட்டுள்ளார். வ.உ.சி. சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவருக்காக வாதாடியவர் சி.கே.சுப்பிரமணிய முதலியார்தான். பிள்ளைக்குச் சிறையில் ஏற்பட்ட கொடுமைகளை முறையாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்து அவரின் வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்த பெருமை முதலியாருக்கே உரியது. வ.உ.சி.யின் சுதேசி இயக்கத்திலும் சுதேசிக்கப்பல் இயக்கத்திலும்கூட முதலியார் உதவியாக இருந்தார். வ.உ.சி.க்கும் முதலியார்மீது மிகுந்த அன்புண்டு. தனது மகனுக்கு முதலியாரின் பெயரான 'சுப்பிரமணியன்' என்பதையும், மகளுக்கு முதலியாரின் மனைவி 'மீனாட்சி' பெயரையும் சூட்டி அன்பு பாராட்டினார் வ.உ.சி.
சுப்பிரமணிய முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி ஆணையராகப் பணியாற்றியிருக்கிறார். கோவை நகரசபை உறுப்பினாராகவும், துணைத்தலைவராகவும் இருந்து சமய, சமூக நற்பணிகளைச் செய்திருக்கிறார். பெரியபுராணத்தைப் பரப்பும் முயற்சியில் 'சேக்கிழார் திருக்கூட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்திக் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் போன்றவற்றை நிகழ்த்திவந்தார். தம் ஆசிரியர் திருச்சிற்றம்பலம் பிள்ளை நிறுவிய கோவைத் தமிழ்ச் சங்கம் உயரப் பாடுபட்டதுடன் தமது இல்லத்திலேயே தேவாரப் பாடசாலை வைத்து நடத்தினார். சைவம்சார்ந்த பல கோயில்களின் மேம்பாட்டிலும் அக்கறை கொண்டிருந்தார். பட்டீசர் ஆலயத்திற்கு இவர் தமது சொந்தச் செலவில் செய்த திருப்பணிகள் அநேகம். தமக்குக் கிடைத்த பொற்பதக்கத்தைக்கூட இவர் ஆலயத்தில் சேக்கிழார் சிலை நிறுவப் பொன் தேவைப்பட்டபோது அளித்துவிட்டார். பல ஆலயக் கும்பாபிஷேக விழாக்களைப் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். இவரது பணியைப் பாராட்டும் விதத்தில் இவருக்கு 'சைவ உலகப் பரோபகாரி' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் இவருக்கு 'சிவக்கவிமணி' என்ற பட்டத்தை அளித்தது. 'திருமறை ஞானபானு' என்ற பட்டம் மதுரை ஆதினத்தால் வழங்கப் பெற்றது.
தமது வாழ்க்கை வரலாற்றை 'ஒரு பித்தனின் சுயசரிதம்' என்ற தலைப்பில் எழுதினார் முதலியார். ஆனால் அது அச்சேறவில்லை. பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்து வந்த அவருக்குத் துறவு வேட்கை மிகுந்தது. துணைவியாரும் காலமாகிவிடவே தனியரானார். சிதம்பரம் முத்துக்குமாரக் குருக்களை அணுகி அவரிடம் சிவதீட்சை பெற்றார். 'ஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகள்' என்று துறவுப் பெயருடன் பொதுவாழ்விலிருந்து விலகித் தூய ஆன்மிக வாழ்வை மேற்கொண்டார். பெரியபுராணத்தைப் பரப்புவதையே தம் ஆயுட்பணியாக மேற்கொண்டு வாழ்ந்த அவர், தமது 83ம் வயதில், ஜனவரி 24,1961 அன்று சிவனருளில் கலந்தார். சிவக்கவிமணியின் வளர்ப்பு மகளின் கணவர் சி.சு. கண்ணாயிரம், சிவக்கவிமணியாரின் நூல்களைப் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். (பார்க்க: sivakavimani.com) தமிழ் சைவ இலக்கியத்தின் மிகக் குறிப்பிடத் தகுந்த முன்னோடி சி.கே. சுப்பிரமணிய முதலியார் என்பது மறுக்க முடியாதது.
(தகவல் உதவி : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட "சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்" நூல்)
பா.சு.ரமணன் |