திருவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர்
தமிழகத்தின் நன்னிலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாஞ்சியம். பேருந்து, ரயில் ஆகியவை மூலம் இத்தலத்தை அடையலாம். நால்வராலும், அருணகிரிநாதர், வள்ளலார், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம். திருமகளை (ஸ்ரீ) வாஞ்சித்து (அன்பு வேண்டி) திருமால் தவம் இருந்த தலம் என்பதால் இது ஸ்ரீவாஞ்சியம். ஒருசமயம் திருமாலுக்கும் லக்ஷ்மிதேவிக்கும் ஊடல் ஏற்பட்டு லக்ஷ்மி பிரிந்து சென்றாள். அதனால் கவலையுற்ற மால் ஈசனை அணுகித் துதித்தார். ஈசன் லக்ஷ்மிதேவியிடம் "உன் கணவருடன் வாஞ்சையாக இருக்க வருவாயாக" என்று அழைக்க, லக்ஷ்மியும் அதனை ஏற்றுக்கொண்டாள். ஈசன், லக்ஷ்மிதேவியை வாஞ்சையுடன் அழைத்தமையால் ஈசன் வாஞ்சிநாதேஸ்வரர், ஸ்ரீவாஞ்சிலிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களைப் பெற்றார். ஈசன் இங்கே சுயம்பு. இறைவி மருவார் குழலி, வாழவந்த நாயகி.

ஈசன் காசி, காஞ்சி, காளத்தி எனப் பலதலங்களை பார்வதிக்குக் காட்டி, பின் 66 கோடித் தலங்களில் ஸ்ரீவாஞ்சியம் சிறந்த தலம் என்று கூற, அதன்பின் பார்வதிதேவி மனமகிழ்ந்து இங்கு வந்து வசிக்கத் திருவுளம் கொண்டார். வாழவந்த நாயகியாக வாஞ்சீசருடன் மாசிமாதம் சுக்ல பட்சம் மகத்தில் தோன்றினார். தலவிருட்சம்: சந்தன மரம். அதனால் கந்தாரண்யம் என்ற பெயரும் உண்டு. பிரம்மன், திருமால், சூரியபகவான், தேவர்கள் வந்து வழிபட்ட தலம். பிரளய காலத்திலும் அழிவில்லாதது. காசி, குருக்ஷேத்திரத்தை விட இங்கு வந்து பூஜித்துப் பலன் பெறுவோருக்கு நூறு மடங்கு அதிகப் பலன் என்கிறது தலபுராணம். இங்கு சுவாமிக்கு வாகனம், எமதர்மராஜன். பைரவர் யோக நிலையில் தமது தண்டங்களைக் கீழே வைத்துவிட்டு ஈசனைத் துதித்த நிலையில் இருக்கிறார். ராகு-கேது பரிகாரத்தலம். இரண்டு கிரகங்களுக்கும் தனித்தனித் தலம் இருந்தாலும் இங்கு இருவரும் ஒரே மூர்த்தியாக இணைந்து அருள்பாலிக்கின்றனர். இந்த அமைப்பு 'சண்ட ராகு' என வழங்குகிறது. இத்தலம் கிரதயுகத்தில் தங்கமயமாகவும், திரேதாயுகத்தில் வெள்ளிமயமாகவும், துவாபரயுகத்தில் தாமிர மயமாகவும், கல்யுகத்தில் கலிதோஷத்தால் மண்மயமாகவும் விளங்குகிறது.

குப்த தீர்த்தம் மிகச்சிறப்பு வாய்ந்தது. ஒரு சமயம் கங்காதேவி, ஈசனிடம் "மக்கள் தாம் செய்த பாவத்தைப் போக்க என்னில் நீராடிப் புனிதம் பெறுகின்றனர். நான் பாவங்களைச் சுமந்து பாவமூட்டையாக உள்ளேன். இதற்கு என்ன விமோசனம்" எனக் கேட்க, ஈசன், "சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரை ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் நீ அந்தர்வாஹினியாகச் சென்று புஷ்கரணியில் சேர்ந்துவிடு. உன் பாவங்கள் களையப்படும். உலகம் உய்வுபெற மக்கள் இங்கு நீராடினால் பாவங்கள் ஒழிந்து நற்கதி அடைவர்" என்றார். தன் ஆயிரம் கலைகளில் ஒன்றை விட்டுவிட்டு 999 கலைகளுடன் இத்தலம் வந்து அந்தர்வாஹினியாக வாழ்வதால் குப்த கங்கை என்று பெயர் கொண்டாள். இந்த புஷ்கரணி குப்த தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் கோவிலைச் சுற்றி 23 தீர்த்தங்கள் உள்ளன. குப்த தீர்த்தம் புராணத்தில் முனி தீர்த்தம் எனப்படுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையில் இங்கு நீராடினால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

கோயில் கோபுரம் 5 நிலைகளுடன் 110 அடி உயரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. வடபுறம் குப்த கங்கை தீர்த்தம். ராஜகோபுரத்தை ஒட்டி எமதர்மராஜன் சன்னிதி அமைந்துள்ளது. வேறெங்கும் இல்லாத புதுமையாக அவரே சுவாமிக்கு வாகனமாக உள்ளார். எமன் அருகே நின்றகோலத்தில் சித்ரகுப்தன் உள்ளார். இரண்டாம் நுழைவாயிலில் விநாயகர், முருகன் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து நட்டுவன் விநாயகர் சன்னதி, மங்களாம்பிகை சன்னதி ஆகியன உள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் நந்தி, பின் மகாமண்டபம், அர்த்தமண்டபம். கருவறையில் அகிலமெல்லாம் ரட்சித்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவாஞ்சிநாதர். வெளிச்சுற்றில் சோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், உமாமகேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர், கன்னிமூலை கணபதி, மகாலக்ஷ்மி உட்படப் பல தெய்வ சன்னிதிகள் அமைந்துள்ளன. அனைத்து மங்களங்களையும் வழங்கும் மங்களாம்பிகைக்கு மாலையில் வெண்பட்டு உடுத்திக் கலைவாணியாகத் துதிக்கின்றனர். இவரை வணங்கினால் ஞானமும் கல்வியும் கைகூடும் எனத் தெரிவிக்கிறது சாம்பவ புராணம். இத்தலத்தில் மகிஷாசுரமர்த்தினியை 108 தாமரைமலர்களால் அர்ச்சித்தால் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். இவ்வாலயத்தில் சிற்பங்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் எழில் நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றது.

ஆலயம் மூன்று கோபுரம், மூன்று சுற்று என அமைந்துள்ளதால் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களை விளக்குவதாகவும், திருவாரூர் மாவட்டத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. நவராத்திரி, சிவராத்திரி, அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, ஆருத்திரா தரிசனம் என விழாக்கள் மிகச் சிறப்புற நடக்கின்றன. சனீஸ்வரருக்கு குருவான பைரவர் இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு நெய்யினால் தயாரிக்கப்பட்ட வடை மாலை சாற்றி வழிபட்டால் நிவர்த்தி, மனநிம்மதி உண்டு. இத்தலத்தைப் பற்றி நினைப்பது, பேசுவது இத்தலத்தில் வசிப்பது மகத்தான புண்ணிய பலனைத் தரும் என்கிறது புராணம். பேசுவோம். நினைப்போம். சென்று வழிபடுவோம்.

சீதா துரைராஜ்,
சென்னை

© TamilOnline.com