அக்காவின் பொறாமை
அன்புள்ள சிநேகிதியே

எனக்கு ஒரு பிரச்சனை. என்னுடைய சகோதரி இப்போது அமெரிக்கா விஜயம் செய்திருக்கிறாள். நானும் என் பெண் வீட்டுக்கு வந்திருக்கிறேன். பலமுறை வந்ததுண்டு. பெண் நல்ல நிலையில் இருக்கிறாள். மாப்பிள்ளையும் தங்கம். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருந்தேன். கணவருக்கு சாதாரண வேலை. இரண்டு குழந்தைகள். இப்படி வருடா வருடம் நினைத்த மாத்திரத்தில் அமெரிக்கா வந்து பெரிய வீட்டில் சுகமாக இருப்போம் என்று கனவில்கூட நினைத்ததில்லை. எல்லாம் பகவானின் கருணை. அந்தக் கஷ்ட காலத்தை நினைத்தால் எப்படி மீண்டு வந்தோம் என்று இப்போதும் தோன்றுகிறது. எனக்கு நிறைய சகோதர சகோதரிகள். எல்லாருக்குமே சுமாரான இடத்தில்தான் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் இப்போது வந்திருக்கும் சகோதரியின் கணவர், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நிறையப் பணம். அதனால் கொஞ்சம் கர்வம் இருக்கத்தான் செய்தது. நான் என் பையனுக்கு பஸ் சார்ஜ் கொடுக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவள் பையன் சொகுசுக் காரில் வந்து இறங்குவான். என் பையனின் மேல்படிப்புக்குக் கூட அந்த அக்காவிடம், கடன் வாங்கித்தான் அனுப்பினேன். கடவுள் புண்ணியத்தில் அசல், வட்டி எல்லாவற்றையும் அடைத்தாகி விட்டது. அக்காவின் பெண் இங்கே இருந்தாலும் உடனே அவள் தன் அம்மாவை வரவழைக்கவில்லை. அவளுக்கு முன்னால் நான் அமெரிக்கா வந்து விட்டேன் என்று அக்காவுக்குக் கொஞ்சம் பொறாமை, கடுப்பு எல்லாம்.

அவள் பண தயவு தேவை என்பதால் அந்தச் சகோதரி கோபப்பட்டாலும் கூட நாங்கள் பயந்துகொண்டு பதில் பேசமாட்டோம். ஒதுங்கிதான் இருப்போம். ஆனால் இப்போது என் பசங்கள் தலை எடுத்துவிட்டார்கள். எவ்வளவு நாள்தான் நானும் கோபத்தைத் தாங்கிக்கொண்டு காலம் தள்ளுவது? கொஞ்சம் கொஞ்சம் நானும் பதிலுக்குப் பேச ஆரம்பித்துவிட்டேன். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. "புதுப்பணம், கர்வம் வந்துவிட்டது. நன்றி கெட்டவள்" என்று மற்ற சகோதர, சகோதரிகளிடம் பேசியிருக்கிறாள். எனக்கு அது வேதனையாக இருந்தாலும், நான் அதைக் கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் என் பெண் பெரிய வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தாள். என் அக்காள் காரில் வரும் தூரத்தில்தான் இருந்தாள். முதலில் பிகு செய்துவிட்டு அப்புறம் மருமகளுடன் வந்தாள். மருமகளுடன் சண்டை போலிருக்கிறது. என் பெண்ணின் வீட்டைப் பார்த்து அசந்து போய்விட்டாள். கண்களில் அந்தப் பொறாமை தெரிந்தது. அதுவும் என் மருமகன் என்னைப் பற்றி, என் சமையலைப் பற்றி, வந்தவர்களிடம் பெருமையாகப் பேசியது அவளுக்கு இன்னும் சங்கடமாகப் போனது. என்னைப் பொருத்தவரை நான் நன்றாகத்தான் நடத்தினேன். சிலநாள் தங்கிவிட்டுக் கூடப் போகச் சொன்னேன். ஆனால் அவள் மகன், குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை, இரண்டு வாரம் கழித்துக் கொண்டுவந்து விடுகிறேன் என்றான். (பாவம் மருமகளுடன் ஒத்துப் போகவில்லை. வீண் ஜம்பத்தில் பிள்ளையுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறாள்).

தன்னைக் கொஞ்சம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்; தான் எங்கும் போய்ப் பார்த்ததில்லை என்று அவள் சொல்லியிருக்கிறாள். Baby Sitter ஆக இருந்து கொண்டிருக்கிறாள். முன்பிருந்த வசதி இப்போது இல்லை. அவள் கணவரும் இறந்துவிட்டார். எனவே அவள் நிலையில் என்னைப் பார்த்துப் பொறாமைப்படுவது இயல்புதான் என நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டு, என் சகோதரியின்மேல் பாசத்தை வளர்த்து அவள் வரவை எதிர்பார்த்தேன்.

ஆனால் நேற்று என் சகோதரன் இந்தியாவில் இருந்து போனில் பேசியபோதுதான் தெரிந்தது, என் அக்கா என்னைப் பற்றி மிகவும் மட்டமாகப் பேசி அவ்வளவு குறைகளைக் கண்டுபிடித்திருக்கிறாள் என்பது. சகோதரன் கேட்கிறான், "நீ அப்படி இன்சல்ட் செய்தாமே, உங்கள் வீட்டு நாய்க்குக் கொடுத்த வரவேற்புகூடக் கொடுக்கவில்லையாமே, அப்படி ஏன் பழசை மறந்தாய்? பாவமாக இருக்கிறது அக்காவைப் பார்த்தால்... என்னிடம் கதறிக்கதறி அழுகிறாள்" என்று அவன் சொன்னான். எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் வந்தபோது வீடு நிறைய மனிதர்கள், வேலை என இருந்ததால் எனக்கு மணிக்கணக்கில் அவளிடம் பேச நேரமில்லை. ஆனால் நான் திரும்பி வரச்சொல்லி அவளை அழைத்ததை அண்ணனிடம் சொல்லவே இல்லை. She is only complaining. ஆனால் எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டேன்.

ஆனால் இன்று அவள் எனக்கு போன் செய்து, அவள் பையன் அடுத்த வாரம் ஏதோ வேலையாக நான் இருக்கும் இடத்திற்கு வருகிறானாம். எனவே தானும் அவன்கூட வரப் போவதாகச் சொன்னாள். என் ஆசை தீர ஒருவாரம் தங்கப் போவதாகவும் சொன்னாள். என்னுடைய ஆசையாம்! எப்படி இருக்கு?

இதற்கிடையில் என் மாப்பிள்ளை வேறு பிசினஸ் டிரிப்பில் போகிறார். நாங்களே அவளை எங்கும் அழைத்துப் போகமுடியாது. அக்காவிடம் 'சரி' என்று சொல்லி போனை வைத்து விட்டேன். ஆனால் என் மனம் சரி என்று சொல்லவில்லை. ஒரு வாரம் எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ என்ற கவலைதான் பெரிதாக இருந்தது. ஏதேனும் கேட்டுச் சண்டை போடுவாளோ என்று பயமாகவும் இருந்தது. எப்படி யோசித்தாலும் என் சகோதரியின் வருகை மனதிற்குப் பெரிய பாரமாகத்தான் இருந்தது. ரொம்ப யோசித்து, பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போன் செய்தேன். நல்லவேளை, வாய்ஸ் மெயில் போனது. "அடுத்த வாரம் சரிப்பட்டு வராது. இன்னொருமுறை பார்த்துக் கொள்ளலாம்" என்ற செய்தியைத் தெரிவித்துவிட்டேன். இப்படி என்னைப்பற்றிக் குறை சொல்லிக்கொண்டே போகிறாளே, அதை எப்படித் தடுப்பது என்று தெரியவில்லை. வெறுப்பு வரக்கூடாது என்று பார்த்தேன். ஆனால், பொறாமைக்கும் ஓர் அளவில்லையா? பக்கத்திலேயே இருக்கிறாள். இரண்டு பேரும் சந்தோஷமாக ஒருவருக்கொருவர் தினமும் பேசிக் கொண்டு, அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாமல் என்ன வேண்டியிருக்கிறது இந்த உறவு? இதை எப்படிச் சீர் செய்வது?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

பொறாமைப் படுவது உங்கள் சகோதரியின் இயல்பு என்றால் நீங்கள் என்ன செய்தாலும் மாறுவது கடினம். உங்கள் சகோதரியாலும் எப்போதும் உங்களைப்பற்றி மற்றவர்களிடம் குறை சொல்லிக்கொண்டே இருக்கவும் முடியாது. கேட்பதற்கு ஆட்கள் குறைந்து கொண்டே வருவார்கள். உங்கள் சகோதரி இப்படித்தான் என்பது உங்களுக்குப் புரிந்து விட்டதால் உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படிக் கேட்டுவிடுங்கள். இப்போது இப்படி நினைத்தாலும், இன்னும் இரண்டு நாள் கழித்து 'ஐயோ பாவம் என் அக்கா' என்று மனம் நினைக்கும். கேட்டுக் கொள்ளுங்கள். மாறிமாறிதான் இந்த மனநிலை இருக்கும். இதுபோன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளில், அங்கே தோழமை இருந்தால் இனிக்கும். இல்லாவிட்டால் சிறிது கசப்பு தெரியும். ஆனால் முறியாது. சமூகநிலை சமச்சீராக இருந்தால் பிரச்சனைகளில் பாதி புரிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் விவேக மனம் புரிந்துகொண்டு உறவுகளைச் சீர்படுத்தப் பார்க்கும். உங்களுக்கு அந்த மனம் உண்டு.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com