செப்டம்பர் 7, 2013 அன்று, மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடியின் மேனேஜ்மெண்ட் எஜுகேஷன் சென்டர் வளாகத்தில் சாய் கார்த்திக்கின் மிருதங்க அரங்கேற்றம் நடந்தேறியது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சங்கீத கலாநிதி, பேராசிரியர் திருச்சி சங்கரன் (கனடா) அவர்களிடம் பயின்று வருகிறார் சாய் கார்த்திக். நிகழ்ச்சியில் மதுரை சுந்தர் அவர்களின் கர்நாடக இசைக்கு திருச்சி சங்கரன் மிருதங்கம் வாசிக்க, தனது குருவின் முன்னிலையில் அரங்கேறினார் சாய் கார்த்திக். பட்டணம் சுப்ரமணிய ஐயர் வர்ணத்துக்கு ஆதி தாளத்தில் தொடங்கி, ரூபக தாளம், கண்ட சாபு, மிஸ்ர சாபு, கண்டகதி என பலவிதமான லயங்களை விரல்களால் வடிவமைத்தார். பாடல்களுக்கு இடையே தனது குரு கூறிய ஜதிகளை கவனித்து, அவற்றை மிருதங்கத்தில் வழங்கினார். தோடி ராகத்தில் 'கார்த்திகேயா' பாடலில் மதுரை சுந்தரின் பாட்டிலும், பக்கவாத்தியத்திலும் இசையும் ஆன்மீகமும் இரண்டறக் கலந்து ஒலித்தன. நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டது. வயலின் ஜெயசங்கர் நிகழ்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் தம் மாணவனை வாழ்த்தி திருச்சி சங்கரன் உரையாற்றினார். தம் குருவான பழனி சுப்ரமணிய பிள்ளை பற்றி சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த சென்னைவாசி திருமதி. சுஜாதா விஜயராகவன், மிருதங்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார். இவர் எழுத்தாளர், இசை ஆய்வாளர், நாரத கான சபா மற்றும் மியூசிக் அகாதமியின் செயற்குழு உறுப்பினரும் கூட. சாய் கார்த்திக்கின் பெற்றோரான மதுரை சுந்தர், பத்மா சுந்தர் இருவருமே கர்நாடக இசை வல்லுநர்கள். உலகின் பல மாநில மாணவர்களுக்கு இசை பயில்விப்பதுடன் ஸ்ரீ சத்ய சாயி பாபா அமைப்புகளின் சார்பில் சேவைப்பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகின்றனர்.
காந்தி சுந்தர், ட்ராய், மிச்சிகன் |