'நாட்யா': "The Seventh Love"
நவம்பர் 2, 2013 அன்று நாட்யா நடனப் பள்ளியின் புதிய படைப்பான 'The Seventh Love' (ஏழாம் அன்பு) சிகாகோவின் ஹேரிஸ் அரங்கத்தில் அரங்கேறியது. கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களை, பால பருவத்திலிருந்து முதிர்ந்த வயதுவரை, இந்த நாடகம் சித்திரிக்கிறது.

நாட்யாவின் இணைக் கலை இயக்குநரும், முதன்மை நடனமணியுமாகிய கிருத்திகா ராஜகோபலன், டோனி விருது பெற்றுள்ள லுக்கிங் கிளாஸ் தியேட்டர் கம்பெனியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான டேவிட் கிரெஸ்னர் ஆகியோர் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர். ஏழாம் அன்பில் இசைமேதை திரு. ராஜ்குமார் பாரதியின் இசைக்குத் திருமதி. ஹேமா ராஜகோபாலன் நடனவடிவமைத்துள்ளார். இதற்கான உடைகளைக் கிருத்திகா ராஜகோபாலன் மற்றும் திரு சி.ஏ. ஜாய் வடிவமைத்துள்ளனர்.

டேவிடும், கிருத்திகாவும் ஏழாம் அன்பில் முக்கியப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். பாகவதத்தை அடிப்படையாகக்கொண்ட இந்தக் கதை, கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம் உண்மையான அன்பு என்ன என்பதை விளக்குகிறது. ஆறாவது நிலையான முழுமையான அன்பை அடைவது எப்படி என்று கூறியபின், முடிவில் ஏழாம் அன்பு, 'தான்' என்பதற்ற பிரபஞ்சக் காதல் என்பதை வெகு அழகாக விவரிக்கிறது. பாலகிருஷ்ணரின் வாயில் உலகைக் காணும்போது நடனமணிகள் விறுவிறுப்பாக நடனமாடிக்கொண்டே, வாயிலிருந்து வெளிப்படுவது போல் காட்சி அமைத்திருப்பது வியக்கச் செய்கிறது. கிருஷ்ணரின் பிரிவாற்றாமையை கோபிகைகள் வெகு அழகாக அபிநயத்தின் மூலம் வெளிப்படுத்தும் அதே சமயம் பின்னாலிருக்கும் நடனமணிகள் அந்த மனநிலையை வெளிக்காட்டுவது உணர்ச்சிகரமாக இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை எதிர்பாராத ஒன்றாக அமைத்துள்ளார் ஹேமா. கோபியர்கள் கிருஷ்ணருடன் ஒன்று கலந்து விடுகின்றனர். திடீரென்று அரசர் மேடையில் தோன்றி கிருஷ்ணர் எங்கே, அவரையும், உண்மையான அன்பையும் கண்டுபிடிப்பது எப்படி என்று கேட்கிறார். அப்பொழுது கிருஷ்ணராக அக்ஷரா ராமச்சந்திரன் என்னும் சிறுமி அரங்கில் வருகிறார். அனைவருக்கும் பாடம் புரிகிறது. வெவ்வேறு வயதினராயிருப்பினும், வெவ்வேறு கலாசாரத்தைச் சேர்ந்தவராயிருப்பினும் அன்பென்னும் மொழி ஒன்றுதான் என்று தெரிந்துகொள்ள வைக்கிறது.

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: ராஜி ராமச்சந்திரன், லக்ஷ்மி ஷங்கர்

© TamilOnline.com