பரதநாட்டியம்: செளம்யா ராமநாதன்
நவம்பர் 3, 2013 அன்று லெக்சிங்டனில் உள்ள ஹெரிடேஜ் மியூசியத்தின் மாக்ஸ்வெல் அரங்கில் கலாக்ஷேத்ராவில் பயின்ற சௌம்யா ராமநாதன் "ஷ்ரத்தா" (Shraddha) என்ற தனிநடன நிகழ்ச்சியை அளித்தார்.
இறைவணக்கத்தைத் தொடர்ந்து திருப்புகழில் யமுன கல்யாணி இராகத்தில் அமைந்த வரிகளுக்கு அலாரிப்புச் செய்து, நிகழ்ச்சியைத் தொடங்கினார். அலாரிப்பு என்பது உடலும் உள்ளமும் மலர்வதைக் குறிக்கிறது. அடுத்து தஞ்சாவூர் நால்வரின் சாவேரி ராக ஜதீஸ்வரத்திற்குத் தாளக்கட்டுடன் கூடிய சுத்தமான அடவுகளையும் சௌம்யா வெளிப்படுத்தினார். தஞ்சை நால்வரின் ராகமாலிகையில் அமைந்த 'ஆயர் சேரியர் அறிந்திடாமலும்' என்ற சப்தத்தில் கண்ணனின் குழலிசைக்கு கோபிகைகளுடன் ஆநிரைகளும் மெய்மறந்ததை ஆடியபோது அவரது முகபாவமும் அபிநயமும் நம்மையும் மெய்மறக்கச் செய்தது. அடுத்து ஆடிய பாபநாசம் சிவனின் 'சுவாமி நீ மனம் இரங்கி' என்ற ஸ்ரீரஞ்சனி ராக வர்ணம் நிகழ்ச்சியின் சிகரம். இதில் ஆறுமுகன் இல்லாது நாயகியின் கசந்த மனநிலையைக் கூறி, அவனை வண்ண மயில்மீது வந்து நாயகிக்கு ஆறுதல் அளிக்குமாறு தோழி வேண்டுவதை அற்புதமான அபிநயங்கள் கூடிய அழகிய நிருத்தம் செய்தார். பல இடங்களில் சௌம்யா மேற்கொண்ட அரைமண்டி பாணி மிக அழகு.

'நேற்று அந்தி நேரத்திலே' ஹுசேனி ராக பதத்துக்கு அற்புதமாக சிருங்கார ரசத்தை வெளிக்கொணர்ந்தார். கேதாரகௌளை ராக ஜாவளியில், நாயகன் வேறொரு பெண்ணுடன் சுகித்திருந்ததைக் கேட்டுச் சினம் கொண்ட நாயகியாகச் சௌம்யாவின் கண்களில் அனல் பறந்தது. லால்குடி ஜெயராமனின் மதுவந்தி ராகத் தில்லானாவுக்கு துரிதகதியில் ஆடிய நடனத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. சௌராஷ்ட்டிர ராக மங்களத்துடன் "ஷ்ரத்தா" நிறைவு பெற்றது. நிகழ்ச்சியை காயத்ரி ஸ்ரீநிவாசன் அழகாகத் தொகுத்தளித்தார்.

கலாக்ஷேத்ரா பாணி பரதத்தை லெக்சிங்டன் மற்றும் பெட்ஃபோர்டில் நடன வகுப்புகளில் கற்றுத் தருகிறார் சௌம்யா.

சரஸ்வதி தியாகராஜன்,
பாஸ்டன்

© TamilOnline.com