வாளை
காவியைக் கரைத்து விட்ட மாதிரி செம்மண் பிரவாகம் கரையைத் தொட்டுக் கொண்டு போகிறது. நீரைப் பார்த்ததும் சுலைமானின் நம்பிக்கை வலுத்துவிட்டது. இந்தக் கலங்கலில் வலை போட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

''செலைமான், வாளையும் சேலும் புடிபடுதா மில்லே, வாழ்க்கையை மறந்துப் புட்டியாங்கணும்? ஆப்புடற மொதமீன் நம்ப பங்களாவுக்குங்கிறதை மறந்துப்புட்டியா?'' மேட்டுத்தெரு கானா பானா போன வாரம் வளைத்துக் கொண்டார்.

''இப்பத்தான் ஒண்ணு அரை வலையிலே உளுவுதுங்க மொதலாளி...'' என அடக்கமாகச் சுலைமான் சொன்னபோது, ''அரையோ காலோ, ஆப்புடறதைக் கொண்டாருவீரா..'' என இடைமறித்தார் கானா பானா.

''சரிங்க மொதலாளி!'' அவ்வளவுதான். கானா பானாவின் வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. கூடாது. வயதில் சுலைமானைவிட இளையவர் என்றாலும், வாக்கும் வளமும் இருக்கிறதே! 'காதர் பக்கீர்' என்று அவரைப் பெயர் சொல்லி அழைக்கிற திராணி யாருக்கும் கிடையாது. 'கானா பானா மொதலாளி' என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள், சுலைமானும் அப்படியே.

வாளை 'படும்' பருவம். வலை வாரினால், தினமும் இரண்டு மூன்று படுகிறது. கானா பானா வீட்டுக்குக் கொடுத்துவிட வேண்டும். விலையைத் தந்து விடுகிறாள், கானா பானாவின் மனைவி. அவர்களுக்குத் தேவையில்லாதபோது மட்டுமே மற்றவர் களுக்குக் கொடுக்க வேண்டும். நிபந்தனை அல்ல என்றாலும், நேர்ப்பட்டுப் போன விஷயம் அது. சுலைமான் மீறுவதில்லை.

''செலைமான் அண்ணே, கானா பானா தான் ஒங்க கண்ணுக்குத் தெரியிறார் இல்லே. என்னிக்காச்சும் எங்களுக்கு மீன் குடுக்கிறீங்களா? அஞ்சும் பத்தும் தரலேண்டாலும், ஒண்ணு கேட்கிறவர்கள் உண்டு. ''என்னடா பேசுறீங்க. நாள் பூராவா நான் மீன் புடிக்கிறேன்? அப்பப்ப, பீடிக்கும் சாயாவுக்கும் ஆகுமேண்டு, அரைமணி ஒருமணி ஆத்தங்கரையிலே ஒக்கார்றேன். எதனச்சும் பட்டா எடுத்துட்டுப் போய்க் குடுத்துட்டு வர்றேன். நான் என்ன மீன்காரனா, கூடை கூடையா புடிச்சி விக்கிறத்துக்கு?'' என்று சமாளிப்பது சுலைமானின் பழக்கம்.

உண்மையும் இருக்கிறது. நாள் முழுவதும் வலை வாருகிறவர் அல்ல. ஆற்றங்கரை இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சாவதானமாக ஒரு மணி இரண்டு மணி நேரம் வலை போடுவார். நிச்சயம் மீன் விழும். துடிக்கத் துடிக்க எடுத்துக் கொண்டு போய்விடுவார்.

''செலைமான் அண்ணே... நீங்களும் திங்கறதில்லை. எங்களையும் திங்கவுடுற தில்லே... தொங்கு தொங்குன்னு எத்தினி காலத்துக்குக் கானா பானா வூட்டுக்கு ஓடுறீங்கண்டு பாக்குறோம்...'' மீன் கிடைக்காத சிலர், அவ்வப்போது புலம்புவார்கள். சுலைமான் அலட்டிக் கொள்வதில்லை. அரைமணி நேரம் வலை வாரினால் ஐந்து ரூபாய் நிச்சயம் என்ற கதியில் அவர் ஆற்றங்கரைக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்.

செம்மண் கரைசல் சுழித்துக் கொண்டு போவதைப் பார்க்கப் பார்க்கச் சுலைமானின் மனமும் சுழித்துப் பொங்குகிறது. இன்னும் சில வாரங்களுக்கு நீரோட்டம் இப்படித்தான் இருக்கும். இது மாதிரி பிரவாகத்தில், வாளை எதிர்த்து வரும். தினமும் இரண்டு வாளைபட்டால் போதும், சுலபமாகப் பத்து இருபது என்று சம்பாதித்துவிடலாம். கானா பானா ஒருவருக்கு வாடிக்கையாகக் கொடுத்து வந்தாலே போதும்...

அவர் தான் கட்டளை இட்டிருக்கிறாரே!

நேற்று கானா பானா சொன்னார்: ''செலைமான், நாளைக்கி வாளை கொண்டாரணும்!''

''ஆப்புடணும் இல்லீங்களா...?''

''அதெல்லாம் தெரியாது, வாளை வந்தாகணும்! நம்ப மும்தாசும், மாப்பளையும் நாளைக்கு வரப் போறாங்க! மும்தாசுக்கு வாளை மீனுண்டா உசுரு; மாப்பளைக்கும் புடிக்கும். புரியுதா செலைமான்?''

இலுப்பை மரத்தடியில் வலை வாரிக் கொண்டு இருக்கிறார் சுலைமான். இலுப்பை மரத்தடிப் பக்கம் மற்றவர்கள் வரமாட்டார்கள். அந்த இடம் அவருடைய குத்தகை இடம் மாதிரி. சந்தடி சலசலப்பு இல்லாத ஆற்றங்கரையில், தண்ணீரை அளந்து விடுவது போல் சுலைமான் வலை வாரும் லாவகம் பார்க்க வேண்டிய காட்சி. அதைவிட அவர் தோற்றம் அலாதியானது. முண்டாசும், வெள்ளைத் தாடியும், அரைக்கைப் பனியனும், தாயத்துக் கட்டிய கையுமாகத் தன்னந்தனியாக உட்கார்ந்து தவமோ, யோகமோ இயற்றுகிறவரைப் போல வலை வாரிக்கொண்டிருக்கிறார்.

சுலைமானுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பீடியைப் புகைத்தாகிவிட்டது. வலையைப் பிடித்த கை பிடித்த மாதிரியே ஆற்று நீரை அளந்து கொண்டிருக்கிறது. மீன் படவில்லை.

இரண்டு மீன் விழிகள் நெஞ்சில் புரள்கின்றன. மும்தாஜின் அழகிய கண்கள்! இன்றைக்கு அந்தப் பெண் வருகிறாள். கணவனும் வருகிறான்! மும்தாஜை இவருக்கு நன்றாகத் தெரியும். சின்ன வயசிலிருந்தே மீன் பிரியை. கல்யாணமாகி இரண்டு வருடம் ஆகிறது. இடையிடையே தாய்வீட்டுக்கு வரும்போது, கானா பானா முன் கூட்டியே சுலைமானிடம் சொல்லிவிடுகிறார். வாளையோ, வராலோ கொண்டு போக வேண்டும். அது சுலைமானின் பொறுப்பு.

கிடைப்பதைக் கொண்டு போனால், மும்தாஜ், ''செலைமான் அப்பா, கெளுத்தியும் கெண்டையும் கொண்டாந்திருக்கீங்களே.. முள்ளு மீனாச்சே, எப்படிச் சாப்பிடுறது?'' என்பாள், சிணுங்கலுடன். ''ஆமா, செலைமான்... மும்தாசுக்கு இதுகளைப் புடிக்காது. தூர தொலையப் போய், பெரிய மீனா கொண்டார வேண்டியதுதானே?" என விரட்டுவார் கானா பானா.

மீன்.... ஊரில் மற்றவர்களுக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ, கானா பானா வீட்டுக்குக் கிடைத்தாக வேண்டும். மகளும், மருமகனும் வரும்போது மீன் விருந்து இல்லாமல் போகுமா?

வலையைப் போட்டுப் போட்டு எடுக்கிறார் சுலைமான். வாளை படவேண்டும்; அல்லது சேல் விழ வேண்டும். இரண்டுமே கிடைக்கக்கூடிய பருவம்தான்.

மூன்றாவது பீடியைப் பற்ற வைத்தார் சுலைமான். ஒரு வாளையாவது வேண்டும். வெறுங்கையோடு கானா பானா வீட்டுக்குப் போக முடியாது. அப்புறம் அவர் முகத்தில் விழிக்க முடியாது. இந்த நீரோட்டத்துக்கு, இந்நேரம் இரண்டு மூன்று மீன் விழுந்திருக்க வேண்டும். இல்லை... மருந்துக்கும் இல்லை! கை வலிக்கிறது; மனமும் கனக்கிறது.

வலை வாரிக் கொண்டிருந்தவர், மெல்லிய சரசரப்புக் கேட்டுத் திரும்பினார். சற்றுத் தொலைவில் ஓர் உருவத்தைப் பார்த்தார். தாவூது தயங்கியபடி வருவதும், நிற்பதுமாக இருந்தான். ''இந்தப் பயல் எதுக்காக வர்றான்? இவன் முகத்திலே முழிச்சா, உருப்பட்ட மாதிரிதான். இவ்வளவு நேரம் வலை போட்டும் ஒரு கெளுத்தியோ கெண்டையோ கூடப்படலே! இந்த மூஞ்சியைப் பார்த்தா, இன்னிக்குப் பூரா ஒண்ணும் நடக்காது...'' சுலைமான் உள்ளுக்குள் முனகிக் கொண்டார்.

தாவூது மீது இரக்கம் மட்டுமல்ல; எல்லோருக்குமே இளப்பம். உருவம் அப்படி. சுபாவம் அப்படி. கொடிக்கால் வேலைக்காரன். இரண்டோ மூன்றோ சம்பாதிக்கிறவன். குரூபித்தனமாக முகச் சாயல். 'ஓணான்' என்று கேலிப் பெயரும் உண்டு. இந்த லட்சணத்தில் இவனுக்குக் கல்யாணம். பார்வைக்கு அழகான பொண்டாட்டி. ஊர்க்கோடிப் புளியந் தோப்பில் குடிசை போட்டுக் கொண்டிருக்கிறான்.

எப்படியோ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு இலுப்பை மரத்தடிக்கு வந்து மெளனமாக நின்றவனை வியப்போடு ஏறிட்டுப் பார்த்தார் சுலைமான். பரவாயில்லையே, தைரியமாகப் பக்கத்தில் வந்து நிற்கிறானே என்று நினைத்தவராய், தாவூதையும் வலையையும் இரண்டு நிமிடம் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வலையில் சலனம்! ஏதோ முட்டி மோதுவது சுலைமானுக்குப் புலப்பட்டது. சந்கேமில்லை. வாளை பட்டிருக்கிறது. லாகவமாக வலையை மடக்கித் தூக்கினார். வசமாகச் சிக்கிக்கொண்ட வாளை நெளிந்து துள்ளியது. கரையில் எடுத்துப் போட்டார் சுலைமான். தாவூதின் கண்ணெல்லாம் மின்னல்!

''எலே, தாவூது, என்னடா பாக்குறே?'' வெற்றிப் பெருமிதத்தோடு சுலைமான் கேட்டார். அவருக்குப் பதில் சொல்லாமல் தாவூது ஓணானைப் போல் தலையை ஆட்டியபடி, கைலி மடிப்பில் கை வைத்து எதையோ §டினான், ''என்னடா தேடுறே?'' என்றார் சுலைமான்.

மடியிலிருந்து கசங்கிய இரண்டு ரூபாய் நோட்டை எடுத்த தாவூது, இன்னும் இரண்டடி நெருங்கி வந்தான். சுலைமான் புரிந்து கொண்டார். ''உன் மூஞ்சிக்கு துடிக்கத் துடிக்க வாளை மீன் கேக்குதோ? போட துப்புக் கெட்ட பயலே.. பெரிய பணம்... ரெண்டு ரூபாய்க்கு வாளை மீன் கேக்குதோ... போடா அந்தண்டை!'' சுலைமானின் தொண்டைவரை 'குபுக்' கென்று குரல் வந்துவிட்டது. ஆனால், அடக்கிக் கொண்டார். ''மீன் வேணுங்கிறியா?'' என்று தணிவாய்க் கேட்டார்.

தாவூது, மறுபடியும் ஓணான் மாதிரி தலையாட்டினான். கையில் சுருங்கிய இரண்டு ரூபாய் நோட்டு இருந்தது. அவன், என்றுமே அவரிடம் எதுவும் கேட்டு வந்தவன் அல்ல. மீன் வேண்டுமாம் இப்பொழுது!

நொடியில் ஒரு பொறி தட்டியது சுலைமானுக்கு. அவனை அருகில் அழைத்தார். தரையில் துள்ளிக் கொண்டிருந்த வாளை மீனை விழி இமைக்காமல் பார்த்து நின்றவன், நெருங்கி வந்தான். "எடுத்துக்கடா!'' என்றார் சுலைமான்!

தாவூதுக்கு நம்பிக்கை வரவில்லை. ''ஏண்டா நிக்கிறே, எடுத்துட்டுப் போ!'' என்றார் அவர். ''இது.. பணம்'' என்று தாவூது மென்று விழுங்கினான். ''வேணாம்.. மீனை எடுத்துட்டுப் போ!'' என உத்தரவிட்டார் அவர். தாவூது தயங்கியபடி வாளையை எடுத்தான்.

''ஏண்டா முளிக்கிறே... போ... உன் பொஞ்சாதிக்குக் குடு. வாயும் வயிறுமா இருக்கா. புள்ளைத்தாச்சி ஆசைப்படுறப்ப, குடுக்காமே இருக்கப்புடாது, போடா!'' என்ற சுலைமானின் குரல் இதயத்தைத் தொட்டது. நன்றிப் பெருமிதத்தோடு அவன் நகர்ந்தான்.

புளியமரத்தடியில் பெருத்த வயிற்றுடன் நிற்கும் தாவூதின் இளம் மனைவியை நினைத்துக் கொண்டார் சுலைமான். கை வலித்தது. வலையைக் கரையில் போட்டுவிட்டு நாலாவது பீடியைப் பற்றவைத்தார். மனத்தில் வலி இல்லை; கானா பானாவைப் பற்றிய சிந்தனையும் இல்லை!

ஜே. எம். சாலி

© TamilOnline.com