இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு!
அது ஒரு தனவந்தர் இல்லத் திருமணக் கச்சேரி. நாகஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்துக் கொண்டிருந்தார். இடுப்பில் பட்டாடை, தோளில் அங்கவஸ்திரம், கழுத்தில் தங்க ருத்திராட்சமாலை, கைகளில் மோதிரம், தங்கக் காப்பு எல்லாம் அணிந்து தம்மை மறந்து வாசித்துக் கொண்டிருந்தார் நாகஸ்வர வித்வான். செல்வந்தர்கள் பலர் அதைக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் வித்வானின் தோற்றம் கண்களை உறுத்தியது.

"நம்மைப்போன்ற செல்வந்தர்கள் பட்டாடை அணியலாம். அங்கவஸ்திரம் தரிக்கலாம். ஒரு சாதாரண வித்வான், செல்வர்கள் சபையில் அவர்களுக்கு நிகராக அங்கவஸ்திரம் தரிக்கலாமா, முறையா?" என்று நினைத்தார். நினைத்தது மட்டுமல்ல; அருகிலிருந்தவர்களிடமும் சொன்னார். எல்லாரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

விஷயம் தனவந்தரின் காதுக்குச் சென்றது. உடனே அவர், நாகஸ்வரக் கலைஞருக்கு "தோள்துண்டை அகற்றிவிட்டுப் பாடவும்" என்று துண்டுச்சீட்டு அனுப்பினார். நாகஸ்வரக் கலைஞர் அதைப் பார்த்தார். ஆனாலும் தொடர்ந்து அப்படியே வாசித்தார். தன் பணியாளர்மூலம் செய்தி அனுப்பினார் தனவந்தர். அப்போதும் நாகஸ்வரக் கலைஞரிடம் மாற்றமில்லை.

இதைக் கண்ட செல்வந்தருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அவர் தனவந்தருக்கு சம்பந்தி முறை. அதனால் நேரிலே பார்த்து தனவந்தரைக் கடிந்து கொண்டார். உடனே பயந்துபோன தனவந்தர், நாகஸ்வரக் கலைஞரை அணுகி, "ஐயா, கூட ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் போட்டுத் தருகிறேன். அந்த அங்கவஸ்திரத்தைத் தோளில் இருந்து அகற்றி விடுங்கள். இங்கே சிலர் அதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள்"என்றார்.

உடனே நாகஸ்வரக் கலைஞர், "சரிதான். மரியாதை என்பது இதில்தானா இருக்கிறது! ஐயா, இந்தத் துண்டைச் சில செல்வந்தர்களைப் போல் ஆடம்பரத்துக்காகவோ, அகங்காரத்துக்காகவோ இல்லை கம்பீரத்துக்காகவோ நாங்கள் அணிவதில்லை. வாத்தியம் வாசிக்கும்போது வேர்வை தோன்றினால் வாத்தியம் வழுக்கும்; கை நழுவிக் கீழே விழநேரும். அதனால் அடிக்கடி கைகளையும், முகத்தையும் துடைத்துக் கொள்ளத்தான் இதை அணிந்து கொள்கிறோம். இதைப் போய்த் தவறாக நினைத்து விட்டீர்களே! ஆயிரம் இல்லை பதினாயிரம் கொடுத்தாலும் நான் மேல்துண்டு இல்லாமல் வாசிக்கமாட்டேன். என் அப்பன் நடராஜப் பெருமான் சன்னதியில் மட்டுந்தான் தோளில் துண்டின்றி வாசிப்பேன். காரணம் அது சேவகம். பக்தியினால் வருவது. இது அப்படி இல்லை. ஐயா, நீர் கோடிப் பொன் கொடுத்தாலும் துண்டின்றி வாசிப்பது நடக்காது. மரியாதை என்பது மனதில் இருக்க வேண்டும். தோள்துண்டில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

செல்வந்தரும் தனவந்தரும் மற்றவர்களும் உண்மை உணர்ந்தனர்.

இப்படிக் கலைக்காக தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காத அந்த நாகஸ்வர வித்வான் சிதம்பரம் வைத்தியநாதப் பிள்ளை அவர்கள்.

ஆதாரம்: எல்லார்வி எழுதிய 'எங்கே அண்ணா எங்கே'

© TamilOnline.com